“அரசாங்கம் புத்தாண்டுக்கு முன்னர் பால்மாவின் விலையையும் அதிகரித்து மக்களுக்கு புத்தாண்டுப் பரிசுகளை வழங்கியுள்ளது.” என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மலையளவுக்கு வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் வாக்களித்த 69 இலட்சம் மக்கள் உட்பட ஒட்டுமொத்த மக்களையும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
87 லட்சம் மதிப்பிலான டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணினி உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் விழாவில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு மேலும் பேசிய அவர் ,
“கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் பல்வேறு சவால்கள் இருந்தபோதிலும், எதிர்க்கட்சியாக நாங்கள் பெரிய பங்கை வகிக்கிறோம். எதிர்க்கட்சியின் மூச்சுத் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியிலுள்ள பல வைத்தியசாலைகளுக்கு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உபகரணங்களை வழங்கினோம். தொற்று நோயால் பின்தங்கிய கல்வியை உயர்த்தி வலிமையான மாணவ தலைமுறையை உருவாக்க இந்தத் திட்டத்தை இன்று அறிமுகப்படுத்து கிறோம்.
எதிர்க்கட்சியாகிய நாங்கள் இவ்வாறான பணியை முன்னெடுத்து வருகின்ற நிலையில் அரசாங்கம் என்ன செய்து வருகின்றது என்பது தொடர்பில் கடும் கவலை ஏற்பட்டுள்ளது.
நத்தாருக்கு முன் எரிபொருளின் விலையை அதிகரித்து நத்தார் பரிசுகளை வழங்கிய அரசாங்கம் புத்தாண்டுக்கு முன்னர் பால்மாவின் விலையையும் அதிகரித்து மக்களுக்கு புத்தாண்டுப் பரிசுகளை வழங்கியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி ஒரு நவீனத்துவ, மனிதாபிமான, புதிய அரசியல் இயக்கம். திறமையான இளைஞர்களைக் கொண்டு பாதாளத்தில் வீழ்ந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம் என நம்புகிறோம்,” என்றார்.