வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கென 3 ஆயிரம் தற்காலிக வீடுகளை அமைக்க திட்டம்

navy_rg.jpgவன்னியி லிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கு செட்டிகுளம் மெனிக்பாம் பிரதேசத்தில் தற்காலிக மூவாயிரம் வீடுகளை அமைத்துக் கொடுக்க ஐக்கிய நாடுகள் அகதிகளுக்குரிய உயர்ஸ்தானிகர் காரியாலயம் முன்வந்துள்ளது. இந்த வீடுகளில், இடம்பெயர்ந்து வரும் மக்கள் தனித்தனி குடும்பங்களாக தங்கவைக்கப்படுவர். கடந்த ஞாயிறு வவுனியா மாவட்ட செயலக மண்டபத்தில் மீள்குடியேற்ற அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட மகாநாட்டில் இந்த விடயம் ஆராயப்பட்டது.

அத்துடன், மேலும் அதே இடத்தில் 200 ஏக்கர் நிலம் துப்புரவு செய்யப்பட்டு இதே போன்றதொரு திட்டத்தை அமுல்படுத்தும் ஆலோசனையும் இங்கு முன்வைக்கப்பட்டது. அமைக்கப்படவுள்ள தற்காலிக வீடுகள் குறைந்த செலவில் ஏற்படுத்தப்படும். இடம்பெயர்ந்து வந்தவர்கள் தற்போது 13 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர். மேலும், 70 ஆயிரம் மக்கள் வவுனியா வருவார்கள் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். வந்துள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து நாம் அடிக்கடி அதிகாரிகளுடன் கலந்துரையாடலை நடத்திவருகின்றோம். இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள வவுனியா நலன்புரிநிலையங்களுக்கு உணவு விநியோகத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 31 ஆயிரம் மக்களுக்கு சமைத்த உணவே வழங்கப்பட்டு வந்தது.

சில அசௌகரியங்களைத் தொடர்ந்து 100 பேரைக் கொண்ட ஒவ்வொரு குழுவினரை அமைத்து அவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டு அவர்களே உணவு தயாரிப்பதற்கான திட்டம் நடைமுறைப்படுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. உலக உணவு தாபனம் உலருணவுப் பொருட்களை வழங்கியுள்ளது. சில அரச சார்பற்ற நிறுவனங்கள் சமையல் பாத்திரங்களையும் சமையலுக்குரிய கொட்டகைகளையும் ஏனைய உப உணவு பொருட்களையும் வழங்கியுள்ளதாக மகாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *