இலங்கை யில் போரினால் காயமடைந்த பொதுமக்களுக்கு உதவ, மருத்துவக் குழுக்களையும், தேவையான மருந்து மற்றும் உபகரணங்களையும் உடனடியாக அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளது.
இந்திய வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் விஷ்ணுபிரகாஷ் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இத் தகவலைத் தெரிவித்துள்ளார் என பி.பி.ஸி. தமிழோசை செய்தி வெளியிட்டிருந்தது.
இலங்கையின் வடக்கே போர் பகுதியில் சிக்கிக் கொண்டிருக்கும் பொதுமக்களை மீட்டு, பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு வரும் நடைமுறைகளுக்கும் உதவத் தயாராக இருப்பதாக இந்தியா ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்தது.
அவர்களுக்குத் தேவையான மனிதாபிமான மற்றும் மருத்துவத் தேவைகளை நிறைவேற்றத் தயாராக இருப்பதாகவும் இந்தியா கூறியிருந்தது. அதுதொடர்பான நடைமுறைகள் குறித்து இலங்கை அரசுடன் விவாதித்ததாக இந்திய செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பொதுமக்களின் அவசர மருத்துவத் தேவைகளை நிறைவேற்ற இரு நாட்டு அரசுகளும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்தியா உடனடியாக அவசரகால மருத்துவக் குழுவை உடனடியாக இலங்கைக்கு அனுப்ப உள்ளது. அந்த மருத்துவக் குழுவில், மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள், செவிலியர்கள் மற்றும் துணைப் பணியாளர்கள் இடம்பெற்றிருப்பார்கள்.
அத்துடன், தேவையான மருத்துவ உபகரணங்களும், மருந்துகளும் இருக்கும். தேவையைப் பொறுத்து, அது மேலும் அதிகரிக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மறுவாழ்வு மற்றும் மறுகட்டமைப்பு நடவடிக்கைகளிலும் இலங்கை அரசுடன் இந்தியா இணைந்து செயல்படும் என்றும் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விஷ்ணுபிரகாஷ் தெரிவித்துள்ளார்.
palli
ஜயா ராமதாஸ் மகனிடம் சொல்லுங்கள் எல்லோருக்கும் இந்திய மருத்துவம் உதவட்டும். ஆனால் அனாதையாக இருக்கும் தமிழ் மக்களுக்கு முன்னுருமை கொடுக்கும்படி. இவர்கள் தெற்க்கில் ராணுவத்துக்கு மருத்துவம் செய்யவருவதாக சிலர் பேசிக்கிறார்கள். அன்புமணிக்கு தெரியாமலா அப்படி நடக்கும்.