எல்லைக்கிராமங்களின் வரலாற்று வழிபாட்டிடங்களை பாதுகாப்பது பற்றியும் சிந்திப்பார்களா அரச தரப்பு தமிழ்பாராளுமன்ற உறுப்பினர்கள்..?

யாழ்ப்பாணத்தின் தொன்மை வாய்ந்த நல்லூர் மந்திரிமனை, சங்கிலியன் சிலை, யமுனா ஏரி உள்ளிட்டவற்றை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை, தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க , யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் எடுத்துரைத்தார்.

இன்று (06.11.2021) காலை இடம்பெற்ற கள விஜயத்தின்போது, இவ்விடயங்கள் அவரால் அமைச்சரிடம் எடுத்துரைக்கப்பட்டன.

இலங்கையில் நீண்டகாலமாக மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகளை கொண்ட யாழ்ப்பாண மாவட்டமானது, ஏராளமான தொன்மங்களை கொண்டுள்ளது.அவற்றை பாதுகாப்பது எமது மூதாதையருக்கும், அடுத்துவரும் சந்ததிக்கும் நாம் செய்யும் கடமை என இதன்போது அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

 

இது ஒருபுறமிருக்க , யாழ்ப்பாண வரலாறு பற்றி மட்டுமே சிந்திப்போர் வன்னி பெருநிலபரப்பின் வரலாற்றை பாதுகாப்பது தொடர்பில் கவனம் செலுத்துவதாய் தெரியவில்லை. வடக்கு தமிழர்களின் பூர்வீகமான வரலாற்று வழிபாட்டு நிலங்களும் கோயில்களும் (வெடுக்குநாறிமலை, குருந்தூர்மலை) பௌத்தமயப்படுத்தப்படுவதாக தமிழர் அமைப்புக்கள் விசனப்பட்டுக்கொண்டிருக்கின்ற நிலையில் தொல்லியல் திணைக்களத்தினர் தமிழ்மக்களுடைய வழிபாட்டு சின்னங்கள் என்ற நிலையை பொருட்படுத்தாது தொடர்ந்தும் மக்களுடைய வழிபாட்டு நடவடிக்கைகளுக்கு காவல்துறையினருடாக பல தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இது தொடர்பில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொண்டதாய் தெரியவில்லை. அரச தரப்புடன் உள்ள அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா, அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கூட இது தொடர்பில் பெரிதாக விசனப்பட்டதாக தெரியவி்ல்லை. காலாதி காலமாக எல்லைக்கிராமங்களின் நிலை தொடர்பில் எந்த அரசியல் தலைமைகளும் அக்கறைப்பட்டதில்லை. யாழ்ப்பாணத்தை பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ தமிழர் இருப்பை பாதுகாக்க எல்லைக்கிராம வரலாற்று வழிபாடுகளையும் பாதுகாப்பதும் அவசியம். இதன்  அவசியத்தை உணர்ந்து இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *