5 ஆண்டுகளுக்கு பிறகு சீனாவின் விண்வெளி செல்லும் மூன்று விண்வெளி வீரர்கள் !

சீனா உருவாக்கியுள்ள தியான்ஹே என்ற விண்வெளி நிலையத்தில், கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்காக, பயிற்சி பெற்ற மூன்று விண்வெளி வீரர்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இன்று (வியாழக்கிழமை) லாங் மார்ச் 2எப் ரொக்கெட் மூலம் ஷென்சூ-12 என்ற விண்கலத்தில் 3 விண்வெளி வீரர்களும் பயணித்தனர்.

புதிய விண்வெளி நிலைய கட்டுமான பணிகள்... முதல் முறையாக வீரர்களை அனுப்பியது சீனா

கோபி பாலைவனத்தில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து 09:22 பெய்ஜிங் நேரத்தில் விண்கலம் ஏவப்பட்டது. நீ ஹைஷெங்,  லியு போமிங் மற்றும் டாங் ஹாங்க்போ ஆகிய மூன்று மனிதர்களும் பூமிக்கு மேலே 380 கி.மீ (236 மைல்) தொலைவில் உள்ள தியான்ஹே தொகுதியில் மூன்று மாதங்கள் செலவிட உள்ளனர்.

ரொக்கெட் புறப்பட்ட 10 நிமிடங்களில் புவி வட்டப்பாதையை அடைந்ததும், வீரர்கள் இருந்த விண்கலம் தனியாக பிரிந்து விண்வெளி நிலையத்தை நோக்கி பயணித்தது. விரைவில் அந்த விண்கலம் விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்படும். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு சீனா விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி உள்ளது. இந்த வீரர்கள் மூன்று மாதங்கள் தியான்ஹெ பெட்டகத்தில் தங்கி, விண்வெளி நிலையத்தின் கட்டுமான பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

பாதுகாப்பு உடைகளை அணிந்து கொண்டு, பெட்டகத்தை விட்டு வெளியேறி, பல மணி நேரங்கள் விண்வெளியில் மிதந்தபடி, கட்டுமான பணிகளை மேற்கொள்வார்கள். இந்த அபாயகரமான பணிகளை மேற்கொள்வதற்காக அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது அனுப்பியதை போல, அடுத்த ஆண்டு இறுதிக்குள் 10 முறை விண்வெளி நிலையத்துக்கு தேவையான பொருட்கள் மற்றும் ஆய்வு பணிக்கான வீரர்களை அனுப்பி வைக்க சீன விண்வெளி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மொத்தம் 70 டன் எடையில் விண்வெளி நிலையம் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த விண்வெளி நிலையம் முழுமையான செயற்பாட்டுக்கு வந்ததும் 340 முதல் 450 கி.மீ உயரத்தில் அது பூமியை சுற்றி வரும்.

கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி தியான்ஹெ பெட்டகம், ஆட்களே இல்லாமல் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு, வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து விண்வெளி நிலையத்துக்கான எரிபொருள் உள்ளிட்ட பொருள்கள், விண்வெளி உடைகள், உணவுப் பொருள்களுடன் தியான்சோ- 2 என்ற சரக்கு விண்கலத்தை அனுப்பியது. அந்த விண்கலம் விண்வெளி நிலையத்துடன் இணைந்தது.

அதன் தொடர்ச்சியாக, விண்வெளி நிலைய கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்காக, பயிற்சி பெற்ற மூன்று விண்வெளி வீரர்கள் இன்று அனுப்பப்பட்டுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *