மெய் வல்லுநர் விளையாட்டுத்துறையிலிருந்து குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க ஓய்வுபெற்றுள்ளார். உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் நாட்டுக்கு பெரும் புகழ் ஈட்டித் தந்த சுசந்திகா ஜயசிங்க, சார்க் பிராந்தியப் போட்டிகளில் பல பதக்கங்களை நாட்டுக்காகப் பெற்றுக்கொடுத்தவர்.
கடந்த வாரத்தில் சுசந்திகா ஜயசிங்க மெய்வல்லுநர் விளையாட்டுத்துறையிலிருந்து ஓய்வுபெற்றுக்கொண்டார். தான் ஓய்வுபெற்றதையடுத்து நேற்று வியாழக்கிழமை அலரிமாளிகைக்குச் சென்று ஜனாதிபதியைச் சந்தித்துள்ளார்.
இச்சந்திப்பின்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சுசந்திகா ஜயசிங்க நாட்டுக்கு பெரும் புகழை ஈட்டித் தந்தவர் எனப் பாராட்டியதோடு, அவரது சேவையை நாடு ஒருபோதும் மறக்காது எனக் குறிப்பிட்டார்.
விளையாட்டுத்துறையை உலகளவில் உன்னத இடத்துக்குக் கொண்டுசெல்ல பாடுபட்டவர்களில் சுசந்திகா குறிப்பிடத்தக்கவர் எனவும் ஜனாதிபதி பாராட்டுத் தெரிவித்தார். சுசந்திகாவை கௌரவிக்கும் முகமாக ஜனாதிபதி 50 இலட்ச ரூபாவுக்கான காசோலையொன்றையும் நினைவுப் பரிசொன்றையும் வழங்கினார்.
இந்தச் சந்திப்பின்போது விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகேயும் குறுந்தூர ஓட்ட வீராங்கனை தமயந்தி தர்ஷாவும் சுசந்திகாவின் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.