இனப்பிரச்சினை தீர்வுக்கு மக்கள் ஆணையை பெறத் திட்டம்

பொதுத் தேர்தல் ஒன்றுக்குத் தயாராயிருக்குமாறு அமைச்சர்கள் அனைவரையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விடுதலைப் புலிகளை மிக விரைவில் முற்றாக அழித்து விடலாமென அரசு மிகவும் நம்பிக்கையுடனிருப்பதால் எதிர்வரும் மே மாதத்தில் பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்த ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அண்மைக் காலத் தேர்தல்களில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக மக்கள் ஆணையைக் கோரி வந்த ஜனாதிபதி, மே மாதத்திற்கு முன் புலிகளை முற்றாக ஒழித்துவிடலாமென்ற நம்பிக்கையில் இருப்பதால் பொதுத் தேர்தலில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு மக்கள் ஆணையைக் கோருவாரெனவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்காக மக்கள் ஆணையைப் பெறும் சர்வஜன வாக்கெடுப்பாக அது கருதப்படுமெனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதன் மூலம் தங்கள் கட்சி மிகப்பெரும் பெரும்பான்மைப் பலத்தை பெறுமென அரசு நம்புவதாகவும் கூறப்படுகிறது.  நாட்டில் கடைசியாக 2004 ஆம் ஆண்டே பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் தெரிவு செய்யப்பட்ட எம்.பி.க்கள் அனைவரும் ஏப்ரல் மாதத்துடன் ஐந்து வருடங்களைப் பூர்த்தி செய்வதால் அவர்கள் ஓய்வூதியத்தைப் பெறத் தகுதிபெற்றுவிடுவர்.

பொதுத் தேர்தல் நடத்தத் திட்டமிட்டுள்ளதால் அதற்குரிய ஆரம்ப வேலைகளில் அரசு இறங்கியுள்ளது.  இதற்கமைய தொகுதி அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து சென்று அரசுடன் இணைந்து கொண்டவர்களுக்கும் தொகுதி அமைப்பாளர்கள் பதவி வழங்கப்பட்டு வருகிறது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *