“பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை என்னைப் பற்றி தெரிவித்துள்ள விடயங்கள் கவலையளிக்கின்றன.” – மைத்திரிபால சிறீசேன !

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தன்னைப் பற்றி தெரிவித்துள்ள விடயங்கள் கவலையளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை வெட்கப்பட வேண்டிய விடயமாகும் என்று நேற்று ஞாயிற்றுக்கிழமை பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று திங்கட்கிழமை நாவல பிரதேசத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிர்வாக சேவையாளர் சங்கம் நாவல பிதேசத்தில் கட்சி தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடியது.

கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர் பேராயரின் கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட போதே , “பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை என்னைப் பற்றி தெரிவித்துள்ள விடயங்கள் கவலையளிக்கின்றன.” என்று அவர் குறிப்பிட்டார்.

இதன் போது மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அவர் குறிப்பிடுகையில் , மாகாணசபைத் தேர்தல் தொடர்பான சட்ட மூலமே இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

மாகாணசபைத் தேர்தல் தொடர்பான புதிய சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னரே அது குறித்து தீர்மானிக்க முடியும். அது தொடர்பில் இதுவரையில் எவ்வித கலந்துரையாடல்களையும் நாம் முன்னெடுக்கவில்லை என்றார்.

பேராயரின் கருத்து தொடர்பில் சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவிக்கையில் ,

முன்னாள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கும் தெரிவாகிவிட்டார். தேர்தல் நிறைவடைந்துவிட்டது. மீண்டும் அவர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. எனவே இதனை தவறாக புரிந்து கொள்ளுகின்றனர் என்றே நான் எண்ணுகின்றேன்.

அதே போன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் எந்தவொரு இடத்திலும் அவர் குற்றவாளியாகக் குறிப்பிடப்படவில்லை.

அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது தொடர்பில் ஆராய்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு இடமளிக்குமாறு தான் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *