“இலங்கையை சர்வதேச நீதிமன்றுக்கு செல்ல விடாது தடுத்த துரோகிகள் அதனை மக்களிடம் மறைக்கும் முயற்சியிலும் ஈடுபடுகின்றனர்.”- சுமந்திரன், சாணக்கியன் தொடர்பில் கஜேந்திரன் !

“இலங்கையை சர்வதேச நீதிமன்றுக்கு செல்ல விடாது தடுத்த துரோகிகள் அதனை மக்களிடம் மறைக்கும் முயற்சியிலும் ஈடுபடுகின்றனர்.” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

அம்பாறை – பாண்டிருப்பு பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை(3.04.2021) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது,

இந்தியாவின் எடுபிடிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பினை வைத்து மைத்திரியை வெல்ல வைத்தார்கள். இதனால் ரணில் மைத்திரி நல்லாட்சி வருகின்றது. இது அவர்களுக்கு வேண்டப்பட்ட ஆட்சி. இந்த அரசின் 5 ஆண்டு காலப்பகுதியில் எவ்வித உள்ளக விசாரணையும் நடத்தப்படவில்லை. சுமந்திரன் தற்போது கூறுகின்றார் – உள்ளக விசாரணை தான் வேண்டும்.

காரணம் இந்த நாட்டில் தான் நாம் சேர்ந்து வாழ வேண்டும். ஆகவே இந்த நாட்டில் குற்றங்கள் நடந்திருந்தால் அவை விசாரிக்கப்பட வேண்டும். விசாரிக்கப்படுவது தான் நாட்டிற்கு நல்லது. ஆகவே தான் இந்த தீர்மானத்தை வரவேற்றதாக குறிப்பிடுகின்றார். ஆனால் 2015 ஆண்டு ராஜபக்சவினை தேர்தலில் வீழ்த்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வோம் எனக் கூறினார்கள்.

இதனை நம்பி சகல மக்களும் விழுந்தடித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றித்திற்கு அவரை(ராஜபக்ச) கொண்டுசெல்ல வேண்டும் என்பதற்காக மைத்திரிக்கு வாக்களித்தார்கள்.

இதன் பிறகு 2019 வரை இந்த ஆட்சியில் ஏன் உள்ளக விசாரணையை வலியுறுத்தவில்லை என்பதை கேட்க விரும்புகின்றேன். நம்பிக்கை இருக்கின்றது எனக் கூறி கால நீடிப்பினை தானே வழங்கி கொண்டிருந்தீர்கள். உங்களுடைய நோக்கம் குற்றங்கள் விசாரிக்கப்படுவதற்கல்ல. உங்களுடைய நோக்கம் குற்றங்கள் நடைபெற வேண்டும். அந்த குற்றங்களை வைத்துக்கொண்டு சர்வதேச நாடுகள் ஆவணங்களை தயார் செய்ய வேண்டும். மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கம் அவர்களுக்கு இல்லை.

சுமந்திரனிடம் 2015 தொடக்கம் 2019 வரை ஜெனிவாவில் இலங்கையை எந்த அளவில் மீட்டு கொண்டு வந்தீர்கள் என கேட்கின்றேன். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையை கொண்டு செல்லுவம் வாய்ப்பு சுமந்திரன், சாணக்கியன், சம்பந்தன் ஆகியோரினால் வழிநடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற கூட்டமைப்பினால் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

அங்கே டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன், பிள்ளையான், வியாழேந்திரன், திலீபன் போன்றோர் பேரினவாத கட்சியின் முகவர்கள். இதில் பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

அவர்கள் அரசாங்கத்தோடு இருப்பவர்கள். ஏனைய 13 பேரில் அறுதிப்பெரும்பான்மையுடன் உள்ள கூட்டமைப்பினர் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் 46:1 தீர்மானத்தை நிறைவேற்றுங்கள் எனக் கூறியதன் மூலம் அது உள்ளக விசாரணையை வலியுறுத்தி இருக்கின்றது.

உள்ளக விசாரணையை வரவேற்பதாக இவர்கள் கேட்டுக்கொண்டதனால் தான் இந்த தீர்மானம் நிறைவேறி இருக்கின்றது. இதனால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு செல்லும் வாய்ப்பு இவர்களின் செயற்பாட்டினால் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.

ஆகவே இந்த துரோக செயலுக்கு சாணக்கியனும் சுமந்திரனும் கூட்டாக மிகத் தீவிரமாக செயல்பட்டது மட்டுமல்லாமல், அவர்கள் அந்த துரோகத்தை மறைக்கும் செயற்பாட்டிலும் ஈடுபட்டுள்ளனர் என்பதை மக்கள் மத்தியில் நான் தெளிவு படுத்த விரும்புகின்றேன்.”என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *