“எவ்வளவு காலத்திற்கு தப்பினாலும் என்றாவது ஒருநாள் அரசாங்கம் பொறியில் சிக்கியேயாக வேண்டும்” – இரா.சாணக்கியன் எச்சரிக்கை !

“எவ்வளவு காலத்திற்கு தப்பினாலும் என்றாவது ஒருநாள் அரசாங்கம் பொறியில் சிக்கியேயாக வேண்டும்” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

யுத்தம் முடிவடைந்து 11வருடங்கள் கடந்துள்ள நிலையில் புதிய ஆணைக்குழுவினை நியமித்து எதனையும் கண்டுபிடிக்க முடியாது. இந்த நாட்டில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், இனப்படுகொலை மற்றும் தமிழ் மக்களுக்கு எதிராக அநீதிகள் நடந்துள்ளன. இவையெல்லாம் உலகெங்கும் அறிந்த உண்மை. இது தொடர்பில் ஒரு குழுவினை நியமித்து ஆராயவேண்டிய அவசியம் இல்லை.

இந்த நாட்டில் ஜனாதிபதி குழுக்களை அமைப்பது தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். கிழக்கில் தொல்பொருள் செயலணி ஒன்று உருவாக்கப்பட்டது அதில் தமிழர்கள் எவரும் இல்லை.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஆராய்வதற்கான குழுவில் பெயரளவில் ஒரு தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார். பொதுவாக ஜனாதிபதி நியமிக்கும் ஆணைக்குழுக்களை ஏற்றுக் கொள்ளமுடியாத நிலையே உள்ளது.

இம்முறை ஜெனிவாவில் அரசாங்கத்திற்கு எதிரான கடுமையான தீர்மானங்கள் வரும், அதிலிருந்து தப்ப வேண்டும் என்பதற்காக இவ்வாறான ஆணைக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன.

அத்துடன் ஐ.நா.மனித உரிமைகள் பேரவை தொடர்பாக சிறுபிள்ளைத்தனமான கருத்துகளை வெளியிடுவதை விடுத்து, இந்த நாட்டினை கட்டியெழுப்ப வேண்டுமானால் அங்கு நீங்கள் செய்யவேண்டிய உண்மையான செயற்பாடுகளை செய்யவேண்டும். எவ்வளவு காலத்திற்கு தப்பினாலும் என்றாவது ஒருநாள் பொறியில் சிக்கியேயாக வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *