யாழ் பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தால் காரணமாக தமிழர் வாழ் பகுதிகள் பலவும் இன்றையதினம் ஹர்த்தால் காரணமாக முடங்கிப்போயுள்ளது. மக்கள் அனைவரும் இன்றைய ஹர்த்தாலுக்கு முழுமையான ஆதரவு வழங்கியுள்ளதையும் காணமுடிகின்றது.
இன்றைய போராட்டத்திற்கும் யாழ்ப்பாண மக்களும் தமது பூரண ஆதரவினை வழங்கியுள்ளார்கள்.யாழ் நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு உள்ளதோடு வீதிகளில் மக்கள் நடமாட்டமும் குறைந்து காணப்படுகின்றது.அரச பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேவையில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.அத்தோடு பாடசாலையின் கல்வி செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
கிளிநொச்சியும்முடங்கியுள்ளது. கிளிநொச்சி நகரில் பொதுச் சந்தை, மருந்தகங்கள், உணவகங்கள் என அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன, அரச போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் மாத்திரமே போக்குவரத்தில் ஈடுப்பட்டிருந்தன.
வவுனியா நகரில் சில வியாபார நிலையங்கள் கொவிட்-19 தொற்று காரணமாக ஏற்கனவே மூடப்பட்டுள்ள நிலையில் ஏனைய வியாபார நிலையங்கள் பொதுச்சந்தை, மருந்தகங்கள், உணவகங்கள் என அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. நகரை அண்டிய பகுதிகளான பூந்தோட்டம், குருமன்காடு, கோவில்குளம் போன்ற இடங்களில் அனைத்து வியாபார நிலையங்களும் முழுமையாக மூடப்பட்டிருந்தது.