“இந்திய வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பில் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பது தொடார்பாகவும் இந்தியாவின் அக்கறை வெளிப்படுத்தப்பட்டிருந்தது” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

இலங்கை – இந்திய மீனவர்கள் தொடர்பிலான பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்துக் கொள்வதற்கான வழிவகைகள் தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கருடனான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பது தொடார்பாகவும் இந்தியாவின் அக்கறை வெளிப்படுத்தப்பட்டிருந்தது எனவும் தெரிவித்தார்

இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிகார அமைச்சருக்கம் இலங்கை கடற்றொழில் அமைச்சருக்கும் இடையில் நேற்று (06.01.2021) நடைபெற்ற விசேட சந்திப்பிலேயே குறித்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய இலங்கை கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்ட குறித்த கலந்துரையாடலின் போது, வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் தேசிய நல்லிணக்க்தின் ஊடான உறவுப் பாலத்தினை வலுப்படுத்துவதையும், இந்தியாவுடன் விசேடமாக தமிழ் நாட்டுடன் நல்லுறவை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டே ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கடற்றொழில் அமைச்சை தனக்கு வழங்கி இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சருக்கு எடுத்துரைத்ததாக தெரிவித்தார்.

மேலும் கடந்த காலங்களில் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்களையும், இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கடற்றொழிலாளர்களையும் விடுதலை செய்து சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைப்பற்காக நடவடிக்கை தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.

அதேபோன்று 2018 ஆம் ஆண்டு புதிய மீன்பிடி தொடர்பான சட்டம் இலங்கையில் அமுல்ப்படுத்தப்படுவதற்கு முன்னர் கைப்பற்றப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளில் பழுதடைந்த நிலையில் கைவிடப்பட்டுள்ளவற்றை விற்பனை செய்து,  இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கு வழங்குவது தொடர்பாகவும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இதன்போது கருத்துரைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டிற்கான உதவிகள் தொடரர்பில் இந்திய அரசாங்கம் அக்கறை செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த நிலையில்,  குறித்த கோரிக்கையை சாதகமாக பரிசீலிப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சர் உறுதியளித்தார்.

அதேவேளை, இந்தியக் கடற்றொழிலாளர்களினால் எல்லை தாண்டி வந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ரோலர் முறை எனப்படும் இழுவை வலை படகுத் தொழிலை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள குறித்த தொழில் முறையினால் இரண்டு நாடுகளின் கடல் வளத்திற்கும் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் தொடர்பாகவும் இந்திய வெளியுறவு அமைச்சருக்குத் தெளிவுபடுத்;தினார்.

கடற்றொழில் அமைச்சரின் கருத்துக்களை கேட்டுக்கொண்ட இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கர், குறித்த விடயம் தொடர்பாக தொடர்ச்சியாக கலந்துரையாடல்களை மேற்கொண்டு சுமூகமான தீர்வினை காண்பதற்கு உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், அரபிக் கடலுக்கு செல்லுகின்ற இலங்கையின் ஆழ்கடல் பல நாள் கடற்றொழிலாளர்களுக்கான குறுகிய தூரத்தினைக் கொண்ட மாற்று வழியாக இந்தியாவிற்கும் மாலைதீவிற்கும் இடையிலான இந்தியக் கடற் பரப்பை பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த கோரிக்கையையும் சாதகமாக பரிசீலிப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெயசங்கர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *