“பேரினவாத செயற்பாடுகளுக்கு மத்தியில், பலமிழந்திருக்கும் சமூகங்களுக்கு ஒரே குரலான ஊடகங்களை அடக்கவே ‘உதயன்’ மீதான வழக்குத்தாக்கல் நிகழ்ந்துள்ளது” – இரா.சாணக்கியன் கண்டனம் !

“அடக்கு முறை, பௌத்த மேலாதிக்க, பேரினவாத செயற்பாடுகளுக்கு மத்தியில், பலமிழந்திருக்கும் சமூகங்களுக்கு ஒரே குரலாக ஊடகங்களே உள்ளன. இத்தகைய குரலை நசுக்கவே ‘உதயன்’ மீதான வழக்குத்தாக்கல் நிகழ்ந்துள்ளது.” என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

‘உதயன்’ மீதான யாழ். பொலிஸாரின் வழக்குத் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“உதயன் பத்திரிகை வடபுல மக்களுக்காக மட்டுமன்றி தமிழ் பேசும் மக்களின் குரலாக மிக நீண்டகாலமாக உரிமைக் குரல் எழுப்பிவருகின்றது. தற்போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஒளிப்படத்தையும், அவரது சொற்களையும் வெளியிட்டமைக்காக ‘உதயன்’ பத்திரிகைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை விசனிக்கத்தக்கதும், கவலை தரும் விடயமுமாகும்.

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என முக்கியத்துவம் பெற்றுள்ள ஊடகத்துறையின் பணிகளைக் கேள்விக்குறியாக்கும் வகையிலேயே இந்த விடயம் அமைந்துள்ளது. தமிழ்த் தேசியத்துக்கான தமிழ் ஊடகங்களின் பெரும்பங்களிப்புகளுக்கு மத்தியில், உதயனின் சேவை கடந்த காலங்களிலும், தற்போதும் சிறப்புற அமைந்துள்ளது. உதயனின் குரல் வளையை நசுக்கி, மௌனிக்கச் செய்யும் செயற்பாடாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது.

கடந்த காலங்களில் ஊடக அடக்கு முறையின் கீழ் பல தடவைகள் உதயன் அலுவலகம், தாக்கப்பட்டும், எரியூட்டப்பட்டும் நெருக்குதல்களை உதயன் சந்தித்து வந்தபோதிலும், நெஞ்சுரமும், தமிழ் பேசும் மக்களின் பேராதரவும் காரணமாக வீரியத்துடனேயே மீண்டெழுந்து வந்து அது மக்கள் குரலாக வீறுநடை போடுகின்றது.

எரிப்பு, துப்பாக்கிச் சூடுகள், தாக்குதல்கள் என்ற நிலைமாறி உதயனின் குரலை ஒடுக்கும் செயற்பாடுகள் புதிய வடிவம் பெற்றுள்ளமையே உதயன் மீதான வழக்குத் தாக்கலாகும். மக்களுக்குத் தகவல் வழங்குவது ஊடகங்களின் உரிமை எனும் அடிப்படையில் ஊடக தர்மத்துடன் செயற்பட்ட உதயன் மீதான வழக்கை அரசு மீளப்பெறவேண்டும்” – என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *