அணட்மையில் யாழ்ப்பாண மாநகர சபைக்கான முதல்வராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து யாழ்ப்பாண தமிழ்தேசிய கட்சிகளிடையே ஒரு விதமான பிணக்கு நிலை நிலவுகின்றது. மேலும் மணிவண்ணன் ஈ.பி.டி.பி.யுடன் சேர்ந்து தமிழ்தேசியத்துக்கு துரோகம் செய்து விட்டதாகவும் பலரும் குற்றஞ்சுமத்தி வருகின்றனர்.
இந்நிலையில் “ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே ஈ.பி.டி.பி.யின் துணையுடன் தோழர் மணிவண்ணன் யாழ்.மாநகர முதல்வராக தெரிவு செய்யப்பட்டார்” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
யாழில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (01.12.2020) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
குறித்த ஊடக சந்திப்பில் சுகாஷ் மேலும் கூறியுள்ளதாவது,
“தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழுவும் தலைமையும் எடுத்த முடிவு சரியென்பதை வெகு சீக்கிரத்தில் காலம் காட்டியுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து கொள்கை ரீதியாக நீக்கப்பட்ட முன்னாள் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன், தமிழ் தேச விரோத சக்திகளான ஈ.பி.டி.பி.கட்சியோடு சேர்ந்து யாழ்ப்பாண மாநகர சபையினுடைய மேயர் பதவியை கைப்பற்றி இருக்கிறார்.
அதற்கு கட்சியினுடைய கட்டுப்பாட்டை மீறி ஆதரவு வழங்கி, யாழ்.மாநகர சபையில் ஆதரவு வழங்கிய 6 உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மிகவும் விரைவில் எடுக்கப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.