ஜி20 நாடுகள் மாநாட்டில் தொடக்கத்தில் பங்கேற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கொரோனா குறித்த ஆலோசனையின்போது அதைப் புறக்கணித்து, மைதானத்தில் கோல்ஃப் விளையாடி பொழுதைக் கழித்தமை சமூக வளைத்தளங்களில் பெரிதாக பேசப்பட்டு வருகின்றது.
ஜி20 நாடுகள் மாநாடு தொடங்கியபோது, அதில் உலக நாடுகளின் தலைவர்களுடன் சேர்ந்து பங்கேற்ற ட்ரம்ப் தொடர்ந்து காணொளியில் மாநாட்டில் தொடர்பில் இருந்தாரா? அல்லது பாதியிலேயே வெளியேறினாரா? என்பது தெளிவாக இல்லை.
15-வது ஜி20 நாடுகள் மாநாட்டை இந்த முறை சவுதி அரேபியா நடத்துகிறது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த முறை மாநாடு, காணொளி வாயிலாகவே நடத்தப்படுகிறது. இரு நாட்கள் நடத்தப்படும் மாநாட்டில் முதல்நாளில் 20 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டின் தொடக்கத்தில் பங்கேற்ற ட்ரம்ப் முதல் 13 நிமிடங்கள் மட்டுமே தொடர்பில் இருந்தார். அதன்பின் கொரோனாவைரஸ் குறித்தும், தேர்தல் முடிவுகள் குறித்தும் தனது கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டு சென்றுவிட்டார்.அதன்பின் காணொளியில் ட்ரம்ப் வரவி்ல்லை.
ஆனால் சிறிது நேரத்தில் வாஷிங்டன் நகருக்கு புறநகரில் இருக்கும் கோல்ஃப் கிளப்பில் உள்ள மைதானத்தில் ட்ரம்ப் கோல்ஃப் விளையாடியதைக் காண முடிந்தது.
ஜி20 நாடுகளின் தலைவர்கள் சேர்ந்து, கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவது குறித்து சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் ஜெர்மன் பிரதமர் ஏஞ்செலா மெர்க்கல், பிரான்ஸ் அதிபர் இமானுல் மெக்ரான், தென் கொரிய அதிபர் மூன் ஜா இன் ஆகியோர் பங்கேற்றுப் பேசிய போது, அதில் ட்ரம்ப் பங்கேற்காமல் கோல்ஃப் விளையாடச் சென்றுவிட்டார்.
இதுகுறித்து சி.என்.என் வெளியிட்ட செய்தியில், “ அமெரி்க்க ஜனாதிபதி தேர்தல் முடிவு ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடனுக்கு சாதகமாக வந்த பின் உலக நாடுகளின் தலைவர்கள் ஜோ பைடனுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.இதனால் ட்ரம்ப் நம்பிக்கை இழந்து காணப்படுகிறார். இதன் காரணமாகவே அவர் ஜி20 நாடுகள் மாநாட்டில் பங்ேகற்பதில் ஆர்வமில்லாமல் இருந்தார்” எனத் தெரிவித்துள்ளது.