இறுதிக்கட்டத்தை எட்டும் ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தின் கொரோனா தடுப்பூசி!

கொரோனாவைரஸை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் முன்னணி நிறுவனங்கள் பல ஈடுபட்டுவருவதுடன் அவை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளன.

இந்நிலையில் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கிவரும் கோவி ஷீல்ட் தடுப்பூசியானது மூன்றாவது கட்ட பரிசோதனையில் 90% பலனளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் பொதுச் சுகாதாரம், பொருளாதாரம் பாதிக்கப்பட்டு வளர்ந்த நாடுகளே திணறி நிற்கும் சூழலில் ஒக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பு உலகுக்கே நற்செய்தியாக வந்துள்ளது.

ஒக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் ஆஸ்ட்ராஜெனிக்காவுடன் இணைந்து கோவி ஷீல்ட் என்ற தடுப்பூசியை பரிசோதனை செய்து வருகிறது.
இது தொடர்பாக பல்கலைக்கழகம் பதிவு செய்த ட்வீட்டில், “இன்றைய நாள் கொரோனாவுக்கு எதிரான போரில் மிக முக்கியமானது. எமது தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனையின் இடைக்கால முடிவின்படி தடுப்பூசி 70.4% பயனளித்துள்ளது. அதே தடுப்பூசியை இரண்டு தவணையாக செலுத்தியபோது 90% நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது. உலகம் முழுவதும் இத்தடுப்பூசியைக் குறைந்தவிலையில்  கொண்டு சேர்ப்பதில் ஒரு அடி முன்னேறினால் போதும். ஆஸ்ட்ராஜெனிக்காவுடன் இணைந்து அடுத்த ஆண்டு இறுதிக்குள் 3 பில்லியன் மக்களுக்காவது தடுப்பூசியைக் கொண்டு சேர்ப்பதே எங்களின் இலக்கு.

இதுவரை 23,000 பேர் தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்றுள்ளனர். ஆகையால் தடுப்பூசியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த நிறைவான தரவுகள் உள்ளன.

இந்தத் தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதில் உலக நாடுகள், நிதியுதவி செய்தவர்கள், ஆராய்ச்சியாளர்கள் என நிறைய பேரின் பங்களிப்பு உள்ளது. அவர்களின் பங்களிப்பு இல்லாமல் இந்தத் தடுப்பூசி சாத்தியமில்லை” எனத் தெரிவித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *