உலகப் பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களை எதிர்கொள்வதற்காக, அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பிரதி நிதியமைச்சரும், அரச வருவாய்த்துறை அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஜே. வி. பி. உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி முன்வைத்த நிதி நெருக்கடி தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர்,
உலகம் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது. இந்நெருக்கடியின் தாக்கம் எம்மைப் போன்ற சிறிய நாடுகளையும் தாக்கவே செய்யும் தாக்கியும் இருக்கிறது இதனை எவரும் மறுக்க முடியாது. இருந்த போதிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இச்சசவால்களை எதிர்கொள்ளத் தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில்தான் ஜனாதிபதி விசேட அமைச்சரவைப்பத்திரத்தை அமைச்சரவைக்கு சமர்ப்பித்தார். இப்பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்களுக்கு நிவாரணம் வழங்க அதனூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் இழுத்து மூடப்படுவதாக எதிரணியினர் நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர். ஆனால் ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் தொழிற்சாலைகள் மூடப்பட்டதை எதிரணியினர் மறந்துவிட்டனர் போலும் என்றாலும் தொழிற்சாலைகள் மூடப்படாது தொடர்ந்தும் நடத்திச் செல்லவென விசேட திட்டங்களை அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருக்கிறது.
இந்நாட்டுக் கைத்தொழிலாளர்களைப் பாதுகாக்கவே இவ்வாறான திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். தேசம் பாரிய வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும் இப் போதைய சூழலில், நாம் பொருளாதார ரீதியாக பெரிதும் வீழ்ச்சி அடைந்துள்ளோம் எனக் காட்ட சிலர் முயற்சி செய்கின்றனர்.
இதன் ஊடாக அவர்கள் அற்ப சந்தோஷம் பெற விரும்புகின்றனர். ஆனால் உலகம் எதிர்கொண்டுள்ள இப்பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களுக்கு நாம் பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு முகம் கொடுப்பது அவசியம்.