மங்களவுக்கும் மனோ கணேசனுக்கும் தொடர்ச்சியாகக் கொலை அச்சுறுத்தல் – எதிர்க்கட்சிக் கொரடா சபையில் தகவல்

joshepmichel.jpg
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மங்கள சமரவீர மற்றும் மனோகணேசன் ஆகியோருக்குத் தொடர்ச்சியாகக் கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன என்று எதிர்க்கட்சியின் பிரதம கொரடா ஜோஸப் மைக்கல் பெரேரா நாடாளுமன்றில் கூறினார்.  இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:-

அரசியல் யாப்பின் 17ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிக்காததால் நாட்டில் அநியாயங்கள் அதிகரித்துள்ளன. இவற்றைக் கட்டுப்படுத்த முடியாதுள்ளது. தற்போது நீர்கொழும்பு பகுதியில் வெள்ளைவான்களில் சிலர் வந்து மக்களின் விவரங்களைத் திரட்டுகின்றனர். இது தொடர்பாக மக்கள் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தனர். பொலிஸார் வந்து அந்த வெள்ளை வான்காரர்களைச் சோதித்தனர். அவர்கள் இராணுவத்தினர் என்பது தெரியவந்தது. வெள்ளைவான்களில் வந்தவர்களால்தான்  நீர்கொழும்பில் பூசாரி ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மங்கள சமரவீர மற்றும் மனோகணேசன் ஆகியோருக்குத் தொடர்ச்சியாகக் கொலை மிரட்டல் விடுக்கப்படுகின்றது. ‘த சண்டே லீடர்’ பத்திரிகையின் ஆசிரியர் லஸந்த விக்கிரமதுங்க கூட பாதுகாப்பான இடத்தில் வைத்துத்தான் சுட்டுக்கொல்லப்பட்டார்.

17 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி பொலிஸ் ஆணைக்குழு உட்பட அனைத்து ஆணைக்குழுக்களையும் அமைத்தால் நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியும். அப்படி இல்லாவிட்டால் நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மோசடிகள் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவது இயலாத காரியம் – என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *