வடக்கில் முஸ்லிம்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எதிரணித் தலைவர்களையும் பங்கேற்க அழைப்பு – றிஷாட் பதியுதீன்

risard.jpgஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தும் என மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அத்துடன் அரசின் அந்நடவடிக்கைகளில் பங்களிக்குமாறு எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கும் அரசியல் தலைவர்களுக்கும் அழைப்புவிடுத்துள்ளார். மாந்தைப் பிரதேச அரசாங்க அதிகாரிகள், புத்திஜீவிகள் மற்றும் முக்கிய பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலொன்று தில்லையடியில் அண்மையில் இடம்பெற்றது. மீள்குடியேற்ற அதிகாரசபையின் பிரதித் தலைவர் எம்.அமீன் தலைமையிலான இக்கூட்டத்திலேயே றிஷாட் பதியுதீன் இவ்வழைப்பைவிடுத்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்; கடந்த 19 வருட கால, எமது மக்களின் அகதி வாழ்க்கையானது பெரும் துயரமிகுந்ததாகவே இருந்து வந்துள்ளது. அதில் இருந்து எமது வடமாகாண முஸ்லிம்களை விடுதலை பெறச் செய்ய கடந்த மூன்று வருட காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எண்ணிலடங்காதவை. இம்மக்களது பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்த பன்னாட்டு தூதுவர்களை சந்தித்து பல சுற்றுப் பேச்சுகளை நடத்தியுள்ளோம். ஏனைய சமூகங்களைப் போன்று எமது வடமாகாண முஸ்லிம் சமூகம் சுதந்திரமாக வாழ வேண்டும்.

இடம்பெயர்க்கப்பட்ட நிலையில், வாழும் எமது மக்கள் ஒற்றுமைப்பட வேண்டிய தேவையேற்பட்டுள்ளது. பிரிந்து நின்று செயற்படுகின்ற போது அதனை சிலர் சுயநலத்திற்காக பயன்படுத்துகின்றனர். மேலும், எதிர்க்கட்சியில் அமர்ந்து அரசாங்கத்தாலும் எமது அமைச்சாலும் செய்கின்ற பணிகளுக்கு எதிராக தடைகளை ஏற்படுத்துகின்றனர். அதிலும் இடம்பெயர்ந்தவர்கள் ஒரு சிலர் தொடர்புபட்டுள்ளமை வேதனை தருகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்பதை நோக்காகக் கொண்டே ஸ்ரீ.ல.மு. காங்கிரஸின் தற்போதைய தலைமை செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. மறைந்த மாபெரும் தலைவர் மர்ஹும் அஷ்ரப் எதிர்க்கட்சியில் சில காலங்கள் இருந்த போதும், ஆளும் கட்சியினால் முன்னெடுக்கப்படும் நல்ல பணிகளுக்கு ஆதரவை வழங்கியுள்ளார். ஆனால், துரதிர்ஷ்டவசம் தற்போதைய தலைவராக இருக்கின்ற ரவூப் ஹக்கீம் அந்தத் தலைவரின் அனைத்துக் கொள்கைகளையும் புறந்தள்ளிவிட்டு செயற்படுகிறார். அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் முஸ்லிம் பிரிவின் தலைவராக பரிணாமம் பெற்றுவிட்டாரா என்ற கேள்வியையே எழுப்புகின்றது.

எமது வடமாகாண மக்களது தேவைகளையும் அபிலாஷைகளையும் உரிமைகளையும் பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பை இன்று நாம் சுமந்துள்ளோம். எமது பதவியானது பொறுப்பு மிக்கது. ஒரு பணக்காரனுக்கு சகாத் எப்படி கடமையோ அதுபோன்றே அரசியல்வாதிக்கும் தனது பணி அமானிதமானது. எமக்கு தற்போது கிடைக்கின்ற அபிவிருத்திகளை புறந்தள்ளி தொடர்ந்தும் அகதிகளாக எதுவுமின்றி ஏனைய சமூகத்திடம் கையேந்தும் நிலையை தோற்றுவிக்கவே முகாம்களுக்குள் எதிர்க்கட்சியினர் அரசியல் புரிய வருகின்றனர். தேர்தல் வருகின்ற போது மக்களை திருப்திப்படுத்தும் நபர்கள் குறித்து மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

கடந்த 3 வருடத்தில் எம்மால் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து மீள் பரிசீலனை செய்வதுடன், கடந்த காலத்தில் இருந்த அரசியல்வாதிகளுடன் எமது செயற்பாட்டையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *