இலங்கையில் வேகமெடுக்கும் கொரோனா பரவல் – தொற்றாளர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது !

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை பத்தாயிரத்தைக் கடந்துள்ளது. புதிதாக மேலும்  314 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,424ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்களில் 55 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்கள் எனவும் ஏனைய 259 பேரும் பேலியகொட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் இராணுத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியில் தொற்று கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6, 627ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, 4, 282 பேர் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இன்னும் 5, 804 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

நாட்டில் கொரோனா தொற்றினால் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதே நேரம் மிக அவசர தேவையை தவிர தனிமைப்படுத்தல் ஊரடங்கு அனுமதி பத்திரம் வழங்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும் ஊரடங்குச் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையாக சட்டத்தை செயற்படுத்துமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். பொருட்கள் விநியோகத்தின் போது கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு அனைத்து தரப்பினரின் ஆதரவு அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *