இந்தியாவின் சந்திராயன் – 1 விண்கலம் கடந்த 2009 ஆம் ஆண்டு நிலவின் மேற்பரப்பில் மேற்பரப்பில் முதன்முதலில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்தது. ஆனாலும், சந்திராயன் விண்கலம் கண்டுபிடித்தது நீர் மூலக்கூறுகளா? அல்லது ஹைட்ராகிசில் மூலக்கூறுகளா? என விஞ்ஞானிகளால் கணிக்க முடியமல் இருந்தது.
இந்த நிலையில் நாசாவின் கோடார்ட் விண்வெளி மையத்தில் இருந்து சோபியா தொலைநோக்கி மூலம் நிலவின் மேற்பரப்பில் நீர் மூலக்கூறை கண்டறிவது தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சோபியா தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அதில் நிலவின் மேற்பரப்பில் நீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், தண்ணீர் நிலவின் குறிப்பிட்ட பகுதிகளில் இல்லாமல் பெருமளவு பரவி இருப்பது தெரியவந்துள்ளது. நீர் மூலக்கூறுகள் நிலவில் பனிசூழ்ந்த பகுதிகள், நிழல்பகுதிகளில் மட்டுமல்லாமல் அனைத்து பகுதிகளிலும் பரவி இருப்பது தெரியவந்துள்ளது. சூரிய ஒளி விழாத நிலவின் தென்துருவ பகுதியில் பனிக்கட்டி வடிவில் 40 ஆயிரம் சதுர கிலோ மீட்டருக்கு நீர் ஆதாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதில் விஞ்ஞானிகள் கணித்ததை விட நிலவின் மேற்பரப்பில் அதிக அளவு தண்ணீர் இருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக நாசா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நிலவில் நாம் முன்பு நினைத்ததை விட அதிகமான தண்ணீர் இருக்க கூடும். சந்திர துருவ பகுதிகள் நிரந்தரமாக நிழலாடிய குளிர் பள்ளங்களில் பனி சேமிக்கப்படுகிறது. நிலவின் தென் அரை கோளத்தில் அமைந்துள்ள, பூமியில் இருந்து கண்ணுக்கு புலப்படும் மிகப்பெரிய பள்ளங்களில் ஒன்றான கிளாவியஸ் பள்ளத்தில் நீர் மூலக்கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி நீண்டகாலமாக சூரிய ஒளி படாத பனித்திட்டுகளில் நிலவின் மேற்பரப்பில் உள்ள கனிமங்களிலும் நீர் மூலக்கூறுகள் மறைந்து உள்ளன. முந்தைய ஆய்வின்படி அல்லாமல் நிலவில் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய அளவில் நீர் ஆதாரம் காணப்படுகிறது.
இதுகுறித்து விஞ்ஞானி ஹொன்னிபால் கூறும்போது, “புதிய ஆய்வின் மூலம் நிலவில் சூரிய ஒளி உள்ள பகுதியில் கூட மூலக்கூறு நீரை வைத்திருக்கிறது என்பதற்கு மேலும் இரசாயன ஆதாரம் கிடைத்துள்ளது.
தொடர் ஆராய்ச்சிகள் மூலம் நீர் எங்கிருந்து வந்திருக்கலாம். அது எப்படி சேமிக்கப்படுகிறது என்பதை நன்கு உணர்ந்து கொள்ள முடியும். சில இடங்களில் தண்ணீர் ஏராளமாக இருப்பதை கண்டால் அதை மனித ஆய்வுக்கான வளமாக பயன்படுத்தலாம். இது குடிநீர், சுவாசிக்க கூடிய ஆக்சிஜன் மற்றும் ராக்கெட் எரி பொருளாக பயன்படுத்தலாம்” என்றார்.
இந்த கண்டுபிடிப்பின் மூலம் எதிர்காலத்தில் மனிதன் அல்லது ஆய்வு கலன்கள் நிலவை அடையும் போது குடிநீர் அல்லது எரிப் பொருளுக்கான மூலப் பொருட்களாக இந்த நீர் மூலக்கூறுகள் விளங்கும் என்று நாசா தெரிவித்து உள்ளது.