மக்களுக்கு சேவையாற்றுவதனை நோக்காக கொண்டே 20 ஆம் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தாக பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.
பதுளையில் நேற்று (25.10.2020) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.
பொதுஜன முன்னணி அரசாங்கம் எதிர்வரும் 10,15 வருடங்களுக்கு ஆட்சியில் இருக்கும் என எதிர்ப்பார்க்கலாம். இவ்வாறு இருக்கும் போது எதிர்க் கட்சியில் இருந்துக் கொண்டு மக்கள் நலன்சார் விடயங்களை முன்னெடுக்க முடியாது. எதிர்க் கட்சியில் இருந்துக்கொண்டு வெறுமனே கொள்ளை அரசில் பேசிக்கொண்டிருக்க முடியாது. கடந்த தேர்தல் காலத்தில் பல வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கியுள்ளேன். அவ்வாறு வழங்கப்பட்ட உறுதிமொழியை காப்பாற்ற வேண்டிய தேவையும், அவசியமும் உள்ளது.
இதனை எதிர்க் கட்சியில் இருந்து நிறைவேற்ற முடியாது. ஆகவே மக்களுக்கு சேவையாற்றுவதனை முதன்மை நோக்காக கொண்டு இருபதுக்கு ஆதரவளித்தேன் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது ஒருபுறமிருக்க மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணி ஆகியவற்றின் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு முன்னிணியின் அரசியல் பிரிவுத் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாருக்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.