“கொரோனா வைரஸ் தொடர்பாக அரசாங்கத்தினால் செயற்படுத்தப்பட்டுள்ள விடயங்கள் எவையும் சட்டபூர்வமாக செயற்படுத்தப்படவில்லை” என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்
பாராளுமன்றத்தில் கொவிட் – 19 தொடர்பான விவாதம் இன்று (23) நடைபெற்ற நிலையில் (23.10.2020) அங்கு உரையாற்றும் போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் கொரோனா தொடர்பான புதிய சட்டங்களை உருவாக்குவதற்கான நாடாளுமன்றை மீளக் கூட்டுமாறு வலியுறுத்தினோம். கடந்த வாரம் நான் செயலாளர் நாயகத்திற்கு ஓர் சட்டவரைபை கையளித்துள்ளேன். அதனை, அரசாங்கம் பார்க்க முடியும். அவை தொடர்பான சட்டங்களை உருவாக்க முடியும். மாற்றங்களைச் செய்ய முடியும்.
ஆனால், மிக முக்கியமானது நீங்கள் அவற்றைச் செயற்படுத்த வேண்டும். ஏனெனில், நீங்கள் இதுவரை ஊரடங்கை அமுல்படுத்துவதற்கான சட்டங்களைக் கூட முறையாகச் செயற்படுத்தவில்லை.
இந்நிலையில், நாம் எல்லோரும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விடயங்களுக்கு ஏற்ப செயற்பட வேண்டும். நாம் அனைவரும் பொறுப்புணர்வுடன் அவ்வாறே செய்துகொண்டிருக்கிறோம். ஆனால், இவை சட்டத்திற்கு முரணானவை. இவை, தனிமைப்படுத்தல் ஊரடங்கு அல்ல, பொலிஸ் ஊரடங்கும் இல்லை” என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில், இதற்குப் பதிலளித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, தான் அதனை வர்த்தமானியில் பிரசுரித்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
இதையடுத்து சுமந்திரன் தெரிவிக்கையில், “ஆம்! அவற்றை நீங்கள் அவ்வாறு எடுத்துக்கொள்கிறீர்கள்? ஆனால், நான் அங்கத்துவம் பெற்ற இலங்கை மனித உரிமை ஆணைக்குழு, இவை எவையுமே சட்டபூர்வமாக செயற்படுத்தப்படவில்லை என அரசாங்கத்துக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது. இவற்றை சட்டபூர்வமாகச் செயற்படுத்துங்கள் என்றே நான் எப்போதும் கோரி வருகிறேன்” என்று சுட்டிக்காட்டினார்.