“போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புபட்ட அரசியல்வாதிகளின் பெயர்கள் அம்பலமாகாமல் இருக்கவே பாதாளஉலகத் தலைவர் மாகந்துரே மதுஷ் படுகொலை செய்யப்பட்டுள்ளார்” – ஜே.வி.பி.குற்றச்சாட்டு !

போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புபட்ட அரசியல்வாதிகளின் பெயர்கள் அம்பலமாகாமல் இருக்கவே பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னனும், பாதாள உலகத் தலைவருமான மாகந்துரே மதுஷ் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று ஜே.வி.பியின் பொதுச் செயலாளரும், கம்பஹா மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரான விஜித ஹேரத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் விஜித ஹேரத் உரையாற்றுகையில்:-

“மாகந்துரே மதுஷ் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் இன்று மிகப்பெரிய விடயமல்ல. அதுபோன்ற கொலைகள் இந்த நாட்டில் இதற்கு முன்னரும் அரங்கேறியிருக்கின்றன. ஆனால், இந்தக் கொலை மூலம் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்ட மற்றும் அதனுடன் தொடர்பிலிருந்த அரசியல்வாதிகளின் பெயர்கள் அம்பலமாவது தடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக டுபாயிலிருந்து தனியார் ஊடகமொன்றுக்குக் கடந்த ஜனவரி மாதத்தில் மதுஷ் பேட்டியொன்றை வழங்கியிருந்தார். அதில், 80க்கும் அதிகமான அரசியல்வாதிகள் தன்னுடன் கடத்தல் விவகாரத்தில் தொடர்பில் இருப்பதைக் கூறியிருந்தார். அவர் கைது செய்யப்பட்டு தடுப்பிலிருந்த நிலையில் இன்று சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஒருவேளை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வழக்கும் விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தால் அவருடன் போதைப்பொருள் வர்த்தகம் செய்த அரசியல்வாதிகளின் பட்டியலும் அம்பலமாகியிருக்கும். ஆகவேதான் அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்கின்ற சந்தேகம் உருவாகியுள்ளது என்றார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *