முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் புலிகளின் பாரிய படகு தயாரிப்பு தொழிற்சாலை படையினர் வசம்

_army.jpgமுல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்த புலிகளின் பாரிய முகாம் ஒன்றினையும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய படகு உற்பத்தி தொழிற்சாலை ஒன்றினையும் இராணுவத்தினர் நேற்று முன்தினம் கைப்பற்றியிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்று தெரிவித்தார்.

புதுக்குடியிருப்புக்குக் கிழக்கே படையினருக்கும் புலிகளுக்குமிடையில் கடந்த 42 மணித்தியாலங்களாக இடம்பெற்ற கடும் மோதல்களையடுத்து அப் பகுதியிலிருந்து எட்டு புலிகளின் சடலங்களை படையினர் மீட்டிருப்பதாகவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.  புலிகளின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய படகுகள் தயாரிக்கும் தொழிற்சாலையினை படையினர் நேற்று முன்தினம் காலை 7 மணியளவில் முற்றுகையிட்டனர். இதில் பதினொரு படகுகள் இருந்துள்ளன. இரண்டு டோரா படகுகளும் இரண்டு வோட்டர் ஜெட்களும் ஏழு சிறிய படகுகளுமே இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டிருப்பதாக ஊடக மத்திய நிலையம் கூறியது. இராணுவத்தின் 59 ஆம் படைப்பிரிவே இதனைக் கைப்பற்றியுள்ளது.

இதேவேளை நேற்று முன்தினம் (17) மாலை 5.30 மணியளவில் படையினருக்கும் புலிகளுக்குமிடையில் இடம்பெற்ற கடும் மோதலைத் தொடர்ந்து புதுக்குடியிருப்பு கிழக்கில் அமைந்திருந்த புலிகளின் பாரிய முகாமொன்று படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பாரிய கட்டடங்களைக் கொண்டிருந்த இம்முகாமில் சாதாரண பதுங்குகுழி ஒன்றுடன் கூரைகளுடன் கூடிய பதுங்கு குழிகள் பல இருந்ததாகவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் கூறியது.

இம்முகாமுக்குள் 40 x 20 அடி கொண்ட இரண்டு கட்டடங்களும் 20 x 30 அடி கொண்ட ஆறு கட்டடங்களும் கூரைகளுடன் கூடிய ஆறு பதுங்கு குழிகளும் காணப்பட்டதாகவும் இராணுவத்தினர் கூறினர். புதுக்குடியிருப்புக்கு கிழக்கே படையினருக்கும் புலிகளுக்குமிடையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கடும் மோதலில் புலிகளுக்கு பாரிய இழப்பு ஏற்பட்டிருப்பதுடன் படையினருக்கு சிறிய அளவிலான சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் ஊடக மத்திய நிலையம் சுட்டிக் காட்டியது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *