அடுத்த தளபதிக்கு இந்த யுத்தத்தை விட்டு வைக்கமாட்டேன் – இராணுவத் தளபதி

sarath-finseka.jpgசித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர விரும்புவதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அத்துடன் இதற்கென அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.

கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் உள்ள இராணுவத் தளபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் ஒன்று கூடலின் போதே லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா இந்த கருத்தை வெளியிட்டார். கடந்த வருடம் இதே போன்றதொரு ஒன்று கூடலின் போது, எனது பதவிக் காலத்துக்குள் இந்த யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்படும் எனவும் அடுத்த இராணுவத் தளபதிக்கு இதை விட்டு வைக்கப்போவதில்லை எனவும் நான் தெரிவித்திருந்தேன். எனினும் சிலர் அதை 2008 ஆம் வருடத்துக்குள் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரப்போவதாக தெரிவித்தேன் என செய்தி வெளியிட்டிருந்தனர். எனினும், எனது பதவிக்காலம் முடிவடைவதற்குள்ளேயே யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவேன் என நான் கூறியதை மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இதன் பிரகாரம் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர இன்னும் ஒருவருடம் இருக்கிறது.

எவ்வாறு இருப்பினும் யுத்தம் மிக விரைவாக முடிவடைந்து வருகிறது. எனினும் காலஎல்லையொன்றை கூறமுடியாது. இருந்தபோதிலும் அடுத்த தளபதிக்கு இந்த யுத்தத்தை விட்டு வைக்கமாட்டேன் என்பதை நான் உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றேன். நான் அளித்த உறுதியை நான் எப்படியும் காப்பாற்றுவேன். இந்த வருடம் யுத்தம் எப்படியாவது முடிவுக்குக் கொண்டு வரப்படும். கடந்த 17 நாட்களில் படையினர் முல்லைத்தீவை நோக்கி 17 கிலோ மீற்றர் தூரம் முன்னேறியுள்ளனர். இதில் இருந்து படையினர் மிக வேகமாக முன்னேறி வருவது புலனாகிறது. 2 வருடங்களுக்கு முன்னர் 50 வரைபடங்களை வைத்து நான் யுத்த நடவடிக்கை திட்டங்களை மேற்கொண்டு வந்தேன். ஆனால், தற்போது ஒரேயொரு வரைபடத்தை மட்டுமேவைத்து யுத்த திட்டங்களை வகுத்து வருகின்றேன். அவ்வளவு தூரம் எமது படையினர் முன்னேறியுள்ளனர். யுத்தத்தின் பிரதிபலன்களை மிக விரைவில் பார்க்க முடியும்.

2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எனது பதவிக்காலம் முடிவடையும் அதேநேரம் அதற்கு முன்னதாக யுத்தம் முடிவுக்கு வரும் என நம்புகின்றேன். சித்திரைப் புத்தாண்டிற்குள் யுத்தம் முடிவடைவதை நான் விரும்புகின்றேன். அதற்கு அனைவருக்கும் அதிர்ஷ்டம் வேண்டும். சித்திரைப் புத்தாண்டுக்குள் யுத்தம் முடிவடைய நாம் அனைவரும் பிரார்த்திப்போம் எனவும் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் பொன்சேகா இதன் போது கூறினார். இதேநேரம், இராட்சதவிலங்கு (ட்ரகன்) புலி ஒன்றை சுழற்றிப் பிடித்து விழுங்க பார்த்துக் கொண்டு இருப்பது போல் படம் ஒன்றைப் பொறித்த மேற் சட்டை ஒன்றை தான் அணிந்திருப்பதை சுட்டிக்காட்டிய இராணுவத் தளபதி இந்த மேற்சட்டையை இந்த நிகழ்வுடன் இரண்டாவது முறையாக அணிவதாகவும் அடுத்த நிகழ்வின் போது இதை அணிய வேண்டிய அவசியம் இருக்காது என தெரிவித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • மாற்றுகருத்துதோழர்
    மாற்றுகருத்துதோழர்

    “எவ்வாறு இருப்பினும் யுத்தம் மிக விரைவாக முடிவடைந்து வருகிறது. எனினும் காலஎல்லையொன்றை கூறமுடியாது. இருந்தபோதிலும் அடுத்த தளபதிக்கு இந்த யுத்தத்தை விட்டு வைக்கமாட்டேன் என்பதை நான் உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றேன்.”
    தளபதியின் பேட்டியை பார்த்தால் இராணுவ புரட்சியை 2009ற்குள் செய்ய போகிறார். அவர் ஆயுளுக்கும் தளபதியாய் இருக்கபோகிறார் என்பது உறுதி. இப்போ மாத்திரம் நாட்டில் ஐனநாயகமா கரை புரண்டோடுகிறது என கேட்க கூடாது.

    Reply
  • palli
    palli

    அப்ப மகிந்தா குடும்பம்தான்(சம்பந்தி) எனி நிலந்தர ஜனாதிபதி என சொல்லுங்கோ. இப்படி பல நடிகரை நாம் இலங்கையில் பார்த்து விட்டோம்.
    பல்லி.

    Reply