தியாக தீபம் திலீபனின் 33ஆவது ஆண்டு நினைவேந்தலை நிகழ்த்துவது தொடர்பில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு தமிழ் கட்சிகள் மூன்று நாள் காலக்கெடு விதித்துள்ளன.
ஜனாதிபதியும் பிரதமரும் ஏற்புடைய தீர்வினையோ அல்லது பிரதிபலிப்பை காலக்கெடுவிற்கும் வழங்காத பட்சத்தில் எதிர்வரும் புதன்கிழமை மீண்டும் கூடி அடுத்த கட்டச் செயற்பாடுகளை ஆராயவுள்ளதாகவும் தெரிவித்துள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் தேசிய பசுமை இயக்கம் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளே இந்த விடயங்களை தெரிவித்தனர்.
இதேவேளை, ஜனாதிபதியும் பிரதமரும் தற்போது நீதிமன்றங்கள் ஊடாக பறிக்கப்பட்டுள்ள தமிழர்களின் நினைவேந்தல் உரிமைகளை மீளப்பெற்றுத் தராத பட்சத்தில் எதிர்வரும் 25 அல்லது 26ஆம் திகதி வடக்கு, கிழக்கு முடங்கும் வகையில் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டு வருவதாகவும் இந்த விடயத்தில் ஒருங்கிணைந்துள்ள தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.