விக்னேஸ்வரன் மீதான வழக்கை மீளப்பெற்றார் டெனீஸ்வரன் !

இது ஒரு துன்பியல் சம்பவம். இரு தரப்பாருக்குமிடையே புரிந்துணர்வு இல்லாமையால் இதுவரையில் இவ்விடயம் தாமதிக்கப்பட்டு வந்துள்ளது என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். டெனிஸ்வரன் தொடர்ந்த வழக்கு நேற்று முடிவுகள் வந்த பின்னர் நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து  தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

மாகாண சபையில் தொடங்கிய டெனீஸ்வரனுடனான இந்தப் பிரச்சினை நீதிமன்றம் சென்றது குறித்து என்ன சொல்கின்றீர்கள்?” என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் தெரிவித்ததாவது:

இது ஒரு துன்பியல் சம்பவம். அதாவது, இருதரப்பாருக்கு இடையே புரிந்துணர்வு இல்லாமையால் இதுவரையில் இவ்விடயம் தாமதிக்கப்பட்டுவந்துள்ளது.

அண்மையில் நான் கதிர்காமத்தில் இருந்த போது, டெனீஸ்வரன் தொலைபேசியூடாக என்னை அழைத்தார். அப்போது நான் அவருடன் பேசியபோது ஒரு விடயத்தை அறிந்துகொண்டேன். தன்னை குற்றவாளியாக நினைத்து அமைச்சர் குழாமிலிருந்து நான் அவரை வெளியேற்றியதாக அவர் நினைத்திருந்தார்.

ஆனால், அவரை வெளியேற்றியமைக்கான காரணம் அவர் சம்பந்தமாக முறைப்பாடு செய்த ஒருவர் அமைச்சரவையில் அப்போது இருந்தார்.

குற்றம் சுமத்தியவரையும், குற்றம் சுமத்தப்பட்டவரையும் அமைச்சரவையில் வைத்திருத்தல் உசிதம் இல்லை என்ற காரணத்தினால்தான் நான் அவரை பதவியிலிருந்து நீக்கினேன் என்ற விடயத்தை அவருக்கு அறியப்படுத்தினேன்.

அதன் பின்னர் பல சம்பவங்கள் நடைபெற்று  நேற்று வழக்கை அவர் வாபஸ் பெற்றுக்கொண்டார்.

அதற்கு ஈடாக நாங்கள் உச்ச நீதிமன்ற மேன்முறையீட்டு மனுவை கைவாங்குவதாக மன்றில் தெரிவித்தோம்.

இதன் அடிப்படையில் நீதிமன்றம் மன்றை அவமதித்தமை சம்பந்தமான வழக்கை கைவாங்க அனுமதியளித்தது“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *