“ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட்டின் இலங்கை பற்றிய கருத்துக்கள் தேவையற்றவை மற்றும் அனுமானத்தின் அடிப்படையிலானவை ” – ஜெனீவாவில் ஐ.நா.வின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி தயானி மெண்டிஸ்

முன்மொழியப்பட்ட 20ஆவது திருத்தம் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட்டின் கருத்துக்கள் தேவையற்றவை மற்றும் அனுமானத்தின் அடிப்படையிலானவை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 45ஆவது அமர்வில் நிகழ்ச்சி நிரல் இரண்டின் கீழான பொது விவாதத்தின்போது ஜெனீவாவில் ஐ.நா.வின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி தயானி மெண்டிஸ் நேற்று (15.9.2020) அளித்த அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், அரசியலமைப்பில் முன்மொழியப்பட்ட 20ஆவது திருத்தம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் சுதந்திரத்தை எதிர்மறையாக பாதிக்கும் என உயர்ஸ்தானிகர் மைக்கேல் பச்லெட்டின் கடந்த திங்களன்று தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்றத்தின் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் ஒரு முழுமையான ஜனநாயக வழிமுறையைத் தொடர்ந்து விவாதிக்கப்படும். அங்கு அனைத்து உறுப்பினர்களும் தங்கள் கருத்துக்களை முன்வைக்க வாய்ப்புக் கிடைக்கும்.

மேலும், இவ்வாண்டு பெப்ரவரியில் இலங்கையானது முப்பதின் கீழ் ஒன்று தீர்மானத்தின் இணை அனுசரணையிலிருந்து விலகியதால் புதிய அரசாங்கம் ஐ.நா. சபைக்கு அளித்த உத்தரவாதங்கள் குறித்து உறுதியுடன் உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, “சட்டவிரோத கொலைகள் தொடர்பாக நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய்க்கு கடந்த மார்ச் மாதத்தில் வழங்கப்பட்ட மன்னிப்பு, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூத்த இராணுவ அதிகாரிகள் முக்கிய சிவில் திணைக்களங்களில் நியமிக்கப்படுதல் போன்றவை குறித்தும் மிச்செல் பச்லெட் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மூத்த இராணுவ அதிகாரிகள் அரச நிறுவனங்களின் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்படுவதற்கு எதிராக பொய்யான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக  இதுகுறித்து தயானி மெண்டிஸ் பதிலளித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *