இனப்பிரச்சினைக்கான தீர்வாக, நாடு தமிழ்கட்சிகள் முன்வைத்துள்ள சமஸ்டி முறையை நோக்கி செல்லவேண்டும் எனவும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்படவேண்டும் நாடாளுமன்றத்தை அடிப்படையாக கொண்ட ஆட்சிமுறை ஏற்படுத்தப்படவேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு எனவும் ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். பேட்டியொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கேள்வி- ஜேவிபி ஏன் 20வது திருத்தத்தினை எதிர்க்கின்றது?
பதில்: 20வது திருத்தத்தை நாங்கள் முழுமையாக எதிர்க்கின்றோம்.
அரசமைப்பு திருத்தங்கள் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் என்ன செய்ய முயல்கின்றது என்றால் ஜனாதிபதிக்கு முழு அதிகாரத்தையும் வழங்க முயல்கின்றது. இது ஆபத்தானது. இது அரசமைப்பு சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கலாம் இதனை நாங்கள் முழுமையாக எதிர்க்கின்றோம்.
மேலும் உத்தேச 20வது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியால் அவசர சட்டங்களை கொண்டுவரமுடியும். அமைச்சரவையில் அங்கம் வகிக்ககூடிய அமைச்சர்களின் எண்ணிக்கையை மாற்றமுடியும் கணக்காய்வு ஆணைக்குழுவையும் அவர் இரத்து செய்யமுடியும். 20வது திருத்தம் நடைமுறைக்கு வந்ததும் இலங்கையில் ஜனநாயக ஆட்சி முறை காணப்படாது இதன் காரணமாக நாட்டின் ஸ்திரதன்மையை பாதிக்கும்
கேள்வி – இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் நாடாளுமன்றம் செல்வது குறித்தும் உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில்- இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுமதிப்பது குறித்து நாங்கள் விவாதிக்கவேண்டும் என நாங்கள் கருதுகின்றோம். நாடாளுமன்ற உறுப்பினர்களாக நாங்கள் மேற்கொள்ளும் சத்தியப்பிரமாணத்துக்கும், இன்னொரு நாட்டின் பிரஜையான பின்னர் நபர் ஒருவர் செய்யும் சத்தியப்பிரமாணத்துக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது.
மேலும் இது பொது மக்களின் பிரதிநிதிகளின் நாட்டிற்கும் ஆட்சி முறைக்குமான விசுவாசம் குறித்த கேள்வியை எழுப்புகின்றது.
கேள்வி – நகல்வடிவத்துக்கு எதிராக சட்டநடவடிக்கையை எடுப்பது குறித்து ஆராய்கின்றீர்களா?
பதில்- உத்தேச திருத்தம் குறித்து நீதிமன்றத்துக்கு செல்வது அவசியம் என நாங்கள் கருதவில்லை. 20வது திருத்தம் உருவாக்கப்பட்டுள்ள விதம் காரணமாக நாங்கள் நீதிமன்றம் செல்ல முடியாது.நீதிதுறை ஜனநாயகம் பறிபோவதற்கு எதிராக சவால் விடுக்காது.
குறிப்பிட்ட திருத்தத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியுமா அல்லது திருத்தத்தில் உள்ள விடயங்களுக்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமா என்பதை மாத்திரம் நீதிமன்றத்தினால் தீர்மானிக்க முடியும்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்படவேண்டும் நாடாளுமன்றத்தை அடிப்படையாக கொண்ட ஆட்சிமுறை ஏற்படுத்தப்படவேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.
கேள்வி – நாட்டுக்கு மிகவும்பொருத்தமான ஆட்சி முறை என்ன?
பதில் – இனப்பிரச்சினைக்கான தீர்வாக, நாடு தமிழ்கட்சிகள் முன்வைத்துள்ள சமஸ்டி முறையை நோக்கி செல்லவேண்டும்.இலங்கையின் அரசியல் கலாச்சாரம் காரணமாக கூட்டணி அரசாங்கத்தை அமைப்பது என்பது ஒருபோதும் நிறைவேறாது. நல்லாட்சி அரசாங்கத்தின் தோல்வி இதனை தெளிவாக வெளிப்படுத்துகின்றது.
கேள்வி – எங்கள் அரசமைப்பில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான செல்வாக்கை இந்தியா செலுத்துவது குறித்த உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில்- 13வது திருத்தம் தொடர்பான இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் எங்கள் இறைமைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளன. நாட்டில் ஆட்சி முறை அல்லது அரசியல் கலாச்சாரத்தை மாற்றுவதற்கு வெளிநாடுகள் செல்வாக்கு செலுத்த நாங்கள் அனுமதிக்ககூடாது. நாடாளுமன்ற ஜனநாயக நாடு என்ற வகையில் அவர்களின் வேண்டுகோள்களுக்கு நாங்கள் அடிபணிய கூடாது.
எனவும் அவர் குறித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.