எந்த வகையான பிரதேச – இன – மத ரீதியான பாகுபாடுகள் தலை தூக்க இடமளிக்கப்படாது என அரசாங்கம் உறுதியளித்துள்ளது ! – டக்ளஸ் தேவானந்தா

ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் வடக்கு கிழக்கு புறக்கணிக்கப்பட மாட்டாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இருவரும் உறுதியளித்துள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் குறித்த விடயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையிலேயே மேற்படி உறுதி மொழி வழங்கப்பட்டது.

நாடளாவிய ரீதியில் வறிய குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் அரசாங்க வேலைவாய்ப்பினை பெற்றுக் கொடுக்கும் செயற்றிட்டம் வடக்கு கிழக்கு தவிர்ந்த நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் இன்றைய அமைச்சரவை கூட்டத்தின்போது பிரஸ்தாபித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாட்டின் ஏனைய பிரதேச மக்களைப் போன்று வடக்கு கிழக்கு மக்களும் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு திட்டத்தின் பலாபலன்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர், ஒரே நாடு ஒரே சட்டம் என்பதில் இந்த அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது என்ற அடிப்படையில், எந்த வகையான பிரதேச – இன – மத ரீதியான பாகுபாடுகள் தலை தூக்க இடமளிக்கப்படாது என்பதை வலியுறுத்தியதுடன் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு நியமனங்கள் சில காரணங்களுக்காக தற்போது வடக்கு கிழக்கு பிரதேசத்தில் நிறுத்தப்பட்ட போதிலும் விரைவில் வழங்கி வைக்கப்படும் எனவும், குறித்த பிரதேச மக்கள் தேவையற்ற வகையில் குழப்பமடையத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *