பாசமிகு சகோதர சகோதரிகளே!
அன்பார்ந்த நண்பர்களே!
ஆற்றல் மிகு தோழர்களே!
இலங்கையில் கடந்த ஆண்டு நவம்பரில் சுமார் 60 சதவீதமான மக்களின் வாக்குகளைப் பெற்று கோத்தபாய ராஜபக்ச மேன்மைதகு ஜனாதிபதியானார். தொடர்ந்து பாராளுமன்றத்தில் சிறுபான்மையான எண்ணிக்கையுடன் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த மஹிந்த ராஜபக்ச அப்போது ஆண்டு கொண்டிருந்த கட்சியினரின் ஒப்புதலுடன் கௌரவ பிரதமராகி தற்காலிகமாக மத்திய அமைச்சரவையை அமைத்துக் கொண்டார்.
இந்த ஆகஸ்ட 5ம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் 60 சதவீதத்துக்கு மேற்பட்ட மக்களின் வாக்குகளைப் பெற்றதோடு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆசனங்களைப் பெற்றுள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனைக் கூட்டணி மஹிந்த ராஜபக்சவைப் பிரதமராகக் கொண்டு மிகவும் உறுதியான ஆட்சியை அமைத்துள்ளது.
கடந்த ஆறு மாதங்களாக உலகை ஆட்டிப்படைத்து வருகின்ற கொரோனா வைரஸ் இதுவரை இரண்டரை கோடி பேருக்கு மேல் பீடித்து எட்டரை லட்சம் பேரை காவு கொண்டு போய் விட்டது: உலக பொருளாதாரத்தை உலுக்கிப் போட்டுள்ளது: மனித குலம் அரண்டு போய் நிற்கின்றது: கொரோனாவின் தாக்கம் இலங்கையில் குறைவே. என்றாலும் பயமும் பதட்டமும் உலக தரத்திலேயே இங்கும் உள்ளது. இலங்கையின் பல்வேறு பொருளாதாரத் துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பக்கத்து நாடுகளிலும் தூரத்து நாடுகளிடமிருந்தும் பெருந்தொகையில் கடன் வாங்காமல் நாட்டை நிர்வகிக்க முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது.
பெரும் நம்பிக்கைகளோடு இலங்கை மக்கள் புதிய அரசாங்கத்துக்கு தமது வாக்குகளை அளித்திருக்கிறார்கள். மைத்திரி – ரணில் கூட்டாட்சி மீது விரக்தியும் ஆத்திரமும் கொண்ட பெரும்பான்மையான மக்கள் ராஜபக்சக்களிடம் ஆட்சியை மீண்டும் ஒப்படைத்திருக்கிகிறார்கள் மக்களின் எதிர்பார்ப்புகளில் கணிசமான அளவுக்காவது ராஜபக்சக்களின் ஆட்சி அரசியல் பொருளாதார சாதனைகளை ஆற்றுவார்களா என்று பொறுத்துதான் பார்க்க வேண்டும.
மிகப் பெரும்பான்மையான சிங்கள மக்களின் வாக்குகளாலேயே தான் ஜனாதிபதியானதாக கோத்தபாய ராஜபக்ச தமது பதவியேற்பின் போது வெளிப்படையாகவே கூறினார். அந்தத் தேர்தலில் வடக்கு – கிழக்கு வாழ் தமிழர்களில் 12 சதவீமானவர்கள் கூட அவருக்கு வாக்களிக்கவில்லை. ஆனால் அடுத்த ஒன்பது மாதத்துக்குள் நடந்து முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழர்களின் வாக்குகள் ராஜபக்சக்களின் கட்சிக்கும் அவர்களோடு அணிசேர்ந்து நிற்கும் தமிழ் அரசியற் சக்திகளுக்கும் மிகவும் மாறுபட்ட முறையில் வாக்களித்திருத்திருக்கிறார்கள்:
யாழ்ப்பாணம் மற்றும் வன்னித் தமிழர்களில் மூன்றில் ஒரு பங்கினரும்
திருகோணமலை மாவட்ட தமிழர்களில் சுமார் 25 சதவீதமானோரும்
மட்டக்களப்பு மாவட்ட தமிழர்களில் 50 சதவீதமானோரும்
அம்பாறை மாவட்ட தமிழர்களில் 55 சதவீதமானோரும்
ராஜபக்சக்களின் கட்சிக்கும் மற்றும் அவர்களுக்கு ஆதரவான கட்சிகளுக்கும் வாக்களித்திருக்கிறார்கள்.
இது சரியா பிழையா என்பதற்கப்பால் ஒரு வரலாற்று மாற்றம் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
பாராளுமன்றத் தேர்தலின் முடிவுகள் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போது இந்த ஆட்சி பற்றி எதிரும் புதிருமாக பல அபிப்பிராயங்கள் ஆரம்பித்துவிட்டன.
இராணுவ சர்வாதிகார ஆட்சி அமைந்து கொண்டிருக்கிறது என சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் எதிர்க் கட்சிகள் குரலெழுப்புகின்றன:
ஆட்சியில் முஸ்லிம்கள் முற்றாக ஒதுக்கப்பட்டு விட்டார்கள் என்றும் எனவே முஸ்லிம்கள் ஆபத்தான அரசியற் சூழலுக்குள் தள்ளப்படும் ஆபத்து ஏற்படுகிறது என்றும் பெரும்பான்மையான முஸ்லிம்களின் தலைவர்கள் எதிர்வு கூறி வருகிறார்கள்:
பாசிச சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சி அமைந்துவிட்டதாக தமிழர்கள் மத்தியில் உள்ள பெரும்பான்மையான அரசியற்காரர்களும் புத்திஜீவிகளும் அளவிடுகிறார்கள்.
19வது அரசியல் யாப்பு திருத்தத்தை நீக்கி புதிய அரசியல் யாப்பு கொண்டு வரப்படும் என்றும் நாட்டில் புதிய வகையான தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி தமது புதிய பாராளுமன்றத்தின் முதலாவது உரையில் குறிப்பிட்டுள்ளார். 19வது திருத்தத்துக்கு திருத்தம் ஒன்றை ஆக்கப் போகிறார்கள் என்பது திட்டவட்டமாகத் தெரிகின்றது. அது எப்படிப்பட்டதாக இருக்கப் போகிறது என்பது தெரியவில்லை. இது தொடர்பாக எதிர்க் கட்சியில் இருக்கும் தமிழ்க் கட்சிகள் எவ்வாறு நிலை எடுக்கப் போகின்றன என்பதுவும் தெளிவாக இல்லை.
மாகாண சகைகள் முறையை இல்லாமற் செய்ய வேண்டும் என சிங்கள பௌத்த ஆதிக்க வாதிகள் நீண்டகாலமாகவே கோரி வருகிறார்கள். அரசாங்கத்தில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகள் தொடர்பான அமைச்சர் தான் காணி அதிகாரத்தையோ பொலிஸ் அதிகாரத்தையோ தரப் போவதில்லை என கறாராக குரலெழுப்புகிறார். ஆனால் இவை தொடர்பாக ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ இதுவரை எதுவும் கூறவில்லை. ஆனால் ஒன்று தெளிவாகின்றது இன்னும் சில மாதங்களுக்குள் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறப் போகின்றது. அதில் இந்த அரசாங்கம் மிக ஆர்வமாக உள்ளது. ஏதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்குப் பின்னர் வடக்கு கிழக்கு மாகாண சபைகள் எவ்வாறாக அமையப் போகின்றன! எவ்வாறாக செயற்படப் போகின்றன! என்பவை பற்றி இப்போதைக்கு எதையும் உறுதியாகக் கூற முடியாது.
இவையெல்லாவற்றையும் வைத்துக் கொண்டு “தமிழ்த் தேசிய” சுலோகங்களுடன் அரசியல் செய்யும் கட்சிகள் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பயக் கெடுதியை கிளப்பி மீண்டும் தமது அரசியல் ஆதரவுத் தளங்களை உறுதி செய்ய முனைவார்கள் என்பது தெளிவு. அதேவேளை அரசாங்கத்தோடு அணைந்து நின்று தங்களால் சாதிக்க முடியும் என்போர் அரசாங்கத்தின் சில பொருளாதார கட்டுமான வேலைத்திட்டங்களுக்கு அப்பால் கருத்துத் தாக்கமுள்ள அரசியல்ரீதியான செயற்பாடுகளைக் கொண்டிருப்பார்களா என்ற கேள்விக்கு இப்போதுவரை பதிலில்லை.
மாகாண சபைக்கான எதிர்வரும் தேர்தலின் முடிவுகளும் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின் பிரதிபலிப்பாக இருக்குமா அல்லது வேறுபட்டதொரு மாறுபாட்டைக் கொண்டிருக்குமா என உறுதியாகக் கூற முடியாது. வடக்கு கிழக்கு மாகாண சபையை கைப்பற்றுபவர்கள் எவ்வாறு செயற்படப் போகிறார்கள்: எவற்றைச் சாதிப்பார்கள் என்பதற்கும் இப்போதைக்கு தெளிவான பதில் இல்லை.
இப்படியான சூழ்நிலைமைகளின் பின்னணியில் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியினராகிய நாம் எவ்வாறான அரசியல் நடைமுறை நிலைப்பாடுகளை முன்னெடுக்கப் போகின்றோம் என்பது பற்றி தெளிவாகவும் தீர்க்கமாகவும் சிந்தித்து – முடிவுகள் செய்து – செயற்படல் வேண்டும்.
கட்சியின் பிரச்சாரங்களை விரிவுபடுத்தி முன்கொண்டு செல்ல வேண்டும். கட்சி உறுப்பினர்களை கருத்தாற்றல் மிக்கவர்களாகவும் செயற் திறன் கொண்டவர்களாகவும் வளர்த்தெடுக்க வேண்டும். கட்சியின் ஸ்தாபன கட்டமைப்புகளை பரந்துபட்ட மக்கள் தளங்களைக் கொண்டவையாக பரவச் செய்ய வேண்டும். எதிர்வரும் காலங்களிலும் தேர்தல்களைச் சந்திப்பது தவிர்க்க முடியாததே. ஏனைய அரசியற் கட்சிகள் மற்றும் அரசியற் குழுக்களுடன் இணைந்தும் அவற்றிலிருந்து தனித்துவமாகவும் செயற்பாடுகளை மேற்கொள்வதுவும் அவசியங்களே!
எமது கட்சியின் சமூக ஜனநாயக கோட்பாடுகளின் அடிப்படையிலான கொள்கைகளும் கோரிக்கைகளும் எமது மக்கள் மத்தியில் சக்தி மிக்க கருத்துக்களாகப் பரிணமிக்க வேண்டும். அதனை அடிப்படையாகக் கொண்டு ஒரு தார்மீக அரசியல் சமூக இயக்கத்தை முனனெடுப்பதை இலக்காகக் கொண்டு செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இங்கு சுமுகமாக – எல்லோரும் கை தட்டி எப்போதும் பாராட்டும் வகையான நேர்பாதை கிடையாது. நெளிவு சுளிவுகள் தவிர்க்க முடியாதவை
புரட்சிகரமான சமூக முன்னேற்றத்துக்கான பாதையில் பயணிக்க ஒரு புரட்சிகரக் கட்சியின் அவசியத்தை நாம் எப்போதும் உணர்ந்து வந்திருக்கிறோம் – வலியுறுத்தி வந்திருக்கிறோம். அதில் இதுவரை எதிர்பார்த்த வெற்றிகளைக் காணவில்லையே என்ற விரக்தி சரியானதல்ல. இது ஒரு தொடர் பயணம். திருவிழாவுக்குப் போடப்பட்டுள்ள கடைகளில் இதுவும் ஒரு கடையே என்றால் இந்தக் கட்சி தேவையற்ற ஒன்றாகும். தன்னம்பிக்கையற்ற யானைக்கு தும்பிக்கையும் பயன் தராது.
தமிழர் சமூக ஜனநாயகக் கட்சிக்கு ஒரு வரலாற்றுப் பாத்திரம் இருக்கின்றது! நாம் கடந்த காலத்தில் யாராலும் மறுக்க முடியாத மறைக்க முடியாத பங்களிப்பை இலங்கைக்கும் தமிழ் மக்கள் சமூகத்துக்கும் ஆற்றியிருக்கின்றோம். இன்றும் இதன் தேவை மக்களுக்கு உண்டு! புரட்சிகரமான சமூக முன்னேற்றங்களுக்கான செயற்பாடுகளுக்கான இடைவெளி நாம் வாழும் சமுதாயத்தில் உள்ளது! எனவே கட்சியின் ஒவ்வொரு தீர்மானமும் செயற்பாடும் கட்சியை பரந்துபட்ட மக்கள் மத்தியில் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட சக்தியாக பரிணமிக்கும் நிலையை அடையும் வகையில் செயலாற்றுவோம்.
எமது ஓவ்வொரு செயற்பாடுகளும் எமது கட்சி தலையேற்றிருக்கும் சமூக ஜனநாயகக் கோட்பாடுகளுக்கும் அவற்றின் அடிப்படையிலான கொள்கைகளுக்கும் ஏற்ப ஏன்? எதற்காக? யாருக்காக? எப்படி? எங்கு நோக்கி? ஏன்ற கேள்விகளுக்கு தர்க்கபூர்வமாகவும் பகுத்தறிவு பூர்வமாகவும் தெளிவான பதில்களைக் கொண்டவையாக அமையட்டும்.
தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் இந்த சமூகவலைத் தளம் கட்சியின் கருத்துக்களின் பிரச்சாரத் தளமாகும்: கட்சியின் உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்குமான அறிவூட்டல் களமாகும்: கட்சியோடு தொடர்பு கொள்பவர்களுக்கும் கட்சியின் நிலைப்பாடுகளையும் செயற்பாடுகளையும் அறிய முனைவோருக்குமான மையமாகும்: நட்புரீதியான மாற்றுக் கருத்துக்களின் முற்றமாகும். இது ஒரே வேளையில் பல்லாயிரம் பேரைச் சென்றடைய எல்லோருமாக கூட்டாக உழைப்போம்.
இது எமது பல முயற்சிகளில் ஒன்றே! ஆக்கமானதென ஊக்கம் கொள்ளும் எதிலும் விடாமுயற்சியோடு செயலாற்றுவோம்;
உங்கள் அன்பின் சகோதரன் – நண்பன் – தோழன்
அ. வரதராஜ பெருமாள்
01 – 09 – 2020