ட்ரம்ப் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் காட்டம் !

அமெரிக்க ஜனாதிபதிதேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதி ட்ரம்ப் மீண்டும் 2-வது முறையாக போட்டியிடுகிறார். ஜனநாயகக்கட்சி சார்பில் ஜோ பிடனும், துணை அதிபர் வேட்பாளராக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட கமலாகரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இரு வேட்பாளர்களையும் முறைப்படி ஜனநாயகக் கட்சி சார்பில் வேட்பளார்களாக அறிவிக்கும், அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன், ஜனாதிபதி ட்ரம்ப்பை கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர் பேசியதாவது:

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பைப் பொறுத்தவரை ஜனாதிபதி பதவி என்பது மணிக்கணக்கில் டிவி பார்ப்பதும், சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பதவிடுவதும்தான் பணி என நினைத்துக்கொண்டிருக்கிறார் என்று முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் காட்டமாக விமர்சித்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் சொல்கிறார், நாம்தான் உலகில் முன்னணியில் இருக்கிறோம். நல்ல விஷயம். மிகப்பெரிய தொழிற்சாலைகள் கொண்ட பொருளாதாரத்தைக் கொண்ட நம்நாட்டில்தான் வேலையின்மை வீதம் மூன்று மடங்கு இருக்கிறது.

ஜனாதிபதி தேர்தல் என்பது உலகிலேயே மிகவும் முக்கியமான பணிக்கான நேர்காணல். இந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடக்கும் போது கொரோனாவில் ஏறக்குறைய 1.70 லட்சம் பேர் உயிரிழந்துவிட்டார்கள், லட்சக்கணக்கான மக்கள், சிறுவணிகர்கள் வேலையிழந்துள்ளனர்.

இது போன்ற நேரத்தில், ஓவல் அலுவலகம் ஒரு கட்டளை மையமாக இருக்க வேண்டும். மாறாக, இது ஒரு புயல் மையம். எப்போதும் குழப்பமாகத்தான் இருக்கிறது. ஒரே விஷயம் மட்டும் மாறவில்லை. பொறுப்புகளைத் தட்டிக் கழிப்பதும், அடுத்தவர் மீது பழிசுமத்துவம் மாறவில்லை.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவிய போது, ஜனாதிபதி ட்ரம்ப் முதலில் வைரஸ் கட்டுக்குள் இருக்கிறது என்றார், பின்னர் விரைவில் மறைந்துவிடும் என்று தெரிவித்தார். இது எதுவுமே நடக்கவில்லை என்றவுடன், நாள்தோறும் தொலைக்காட்சி முன் பேட்டி அளித்து தான் சிறப்பாகச் செயல்படுவதாகத் தெரிவித்துக்கொண்டார், வல்லுநர்கள் தகவலுக்காக காத்திருக்கிறேன் என்றும்தெரிவித்தார்.

மருத்துவ வல்லுநர்கள் அறிவுரை சொல்வதை விரும்பாத ட்ரம்ப் அவர்களுக்கு அறிவுரை கொடுப்பார்.
அமெரிக்க மக்களிடம் தொடக்கத்திலேயே முகக்கவசம் அணிய அறிவுறுத்தாமல், பல்வேறு மாநிலங்களுக்கு பரவியபின்புதான் முகக்கவசம் அணிய ட்ரம்ப் அறிவுறுத்தினார்.

ட்ர்ம்ப்புக்கு ஜனாதிபதி பதவி என்பது மணிக்கணக்கில் டிவி பார்ப்பதும், சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிடும்தான் என நினைத்துக்கொண்டிருக்கிறார். மறுத்தல், கவனத்தை திசைதிருப்பல், இழிவுபடுத்துவது ஆகியவை மூலம் மகிழ்ச்சிப்படுத்த முயல்கிறீர்கள். ஆனால், உண்மையான பிரச்சினை வரும் போது அட்டை வீடுபோல் அனைத்தும் சரிந்துவிடும்.

இன்னும் 4 ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாக இருந்தால்,ட்ரம்ப் என்ன செய்வார். அடுத்தவரை குறைசொல்வார், கிண்டல் செய்வார், சிறுமைப்படுத்துவார். ஆனால்,ஜே பிடன் என்ன செய்வார் என உங்களுக்குத்தெரியும், சிறப்பாக நாட்டை கட்டமைப்பார்.

ஜனநாயகக் கட்சி சிறந்த ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்வு செய்துள்ளது. தனக்கிருக்கும் பொறுப்புக்களை ஏற்று செயல்படுவார்; யார் மீதும் குறைகூறமாட்டார், கவனமாக இருப்பார், யாரையும் திசைதிருப்பமாட்டார், ஒற்றுமையை விரும்புவார், யாரையும் பிரிக்கமாட்டார் அவர்தான் ஜோ பிடன்.

அமெரிக்காவை மீண்டும் சிறந்த நிலைக்கு பிடன் கட்டமைப்பார், மிகவும் நேர்த்தியான  திட்டங்களை வகுத்து, அமெரிக்காவின் எதிர்காலத்துக்கு முதலீடு செய்ய அழைப்பார். புத்தாக்கம் நிறைந்த நிறுவனங்கள், நிதியுதவி, காலநிலையைக் காக்க முனைப்பு போன்றவற்றை பிடன் செய்வார்.

இவ்வாறு கிளிண்டன் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *