தமிழ் கல்விச் சமூகத்தின் மகுடம் யாழ். பல்கலைக்கழகம் – அதன் துணைவேந்தர் தெரிவிற்கான தேர்தல் ஒரு அலசல் : உதயன் (யாழ்) & சுடரொளி

Front_Cover_UoJ_A_Viewயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் 27ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துணைவேந்தருக்கான இந்தத் தேர்தலில் எட்டுப்பேர் போட்டியிடுகின்றனர். இத்தேர்தலில் பல்கலைகக்கழகக் கவுன்சில் உறுப்பினர்கள் 25 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இந்த 25 பேரில் 12 பேர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்களாகவும் 13 பேர் யுனிவர்சிற்றி கிரான்ட் கொமிஸனால் (University Grant Commission) நியமிக்கப்பட்டவர்களாகவும் உள்ளனர். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 12 கவுன்சில் உறுப்பினர்களில் நால்வர் துணைவேந்தராகப் பதவிக்குப் போட்டியிடுவதால் அவர்கள் வாக்களிப்பில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். ஆகவே கவுன்சிலின் 21 உறுப்பினர்கள் அளிக்கும் வாக்குகளின் முன்னுரிமை அடிப்படையில் தெரிவாகும் மூவரின் பெயர் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்படும். அம்மூவரில் ஒருவரை ஜனாதிபதி துணைவேந்தராக நியமனம் செய்வார்.

இத்தேர்தலில் கபொத உயர்தரத்தில் இரு பாடங்கள் மட்டுமே சித்தியடைந்த தனேந்திரன் முதல் இலங்கையிலேயே மிகச் சிறந்த கல்வித்தகமையுடைய பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல்வரை எட்டுப் பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல், ராஜரட்ணம் ஆகிய இருவரும் யாழ் பல்கலைக்கழகத்திற்கு வெளியே இருந்து வந்து இப்பதவிக்கு விண்ணப்பித்து உள்ளனர். ஏனைய நால்வரும் யாழ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக நீண்ட காலம் கடமையாற்றி வருகின்றனர். இவர்களில் பேராசிரியர் என் சண்முகலிங்கம் சென்றமுறையும் உபவேந்தராக இருந்தவர்.

உபவேந்தருக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் அவர்களின் தகமைகளும்:

பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் – D.Sc. (Eng.) London, Ph.D. Carnegie Mellon, IEEE Fellow, Chartered Engineer
பேராசிரியர் (செல்வி) வசந்தி அரசரட்ணம் – B.Sc. Madras, MSc. , Ph.D. Jaffna
சிரேஸ்ட விரிவுரையாளர் ஆல்வாப்பிள்ளை – Faculty of Agriculture
பேராசிரியர் எஸ் சத்தியசீலன் — B.A.(Peradeniya), M.A.(Jaffna), Ph.D.(Jaffna)
பேராசிரியர் என் ஞானகுமரன் – B.A.(Kelaniya), M.A.(Jaffna), Ph.D.(India)
பேராசிரியர் என் சண்முகலிங்கன் – B.Ed.(Colombo), M.A.(Jaffna), Ph.D.(Jaffna)
ராஜரட்னம் – ( பொறியியல் பட்டதாரி.)
தனேந்திரன் – Ununion Member with 2 A/L s

இத்துணைவேந்தர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது எதிர்காலத்திட்டங்கள் குறித்து வாக்காளர்களுக்கு – கவுன்சில் உறுப்பினர்களுக்கு 25ஆம் திகதி விளக்கமளிக்க உள்ளனர். யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் பலருக்கும் ஆங்கிலப் பரீட்சயம் காணாதபடியால் அவர்கள் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் விளக்கமளிக்குமாறு கேட்கப்பட்டு உள்ளனர்.

ஒரு காலத்தில் கல்வித் தரத்தின் உச்சத்தில் இருந்த யாழ்ப்பாணத்தின் கல்விநிலை தற்போது மிக மோசமாக வீழ்ச்சி கண்டுள்ளது. தரப்படுத்தலால் பாதிக்கப்பட்ட யாழ் மாணவர்கள் இப்போது தரப்படுத்தல் இல்லாவிட்டால் பல்கலைக்கழகம் செல்ல முடியாது என்ற நிலைக்குச் சென்றுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை உருவாக்குவதில் முன்னின்றவரும் அதன் முதலாவது அதிபராக இருந்தவர் பேராசிரியர் கைலாசபதி. இவர் யாழ் பல்கலைக்கழகத்தை ஆசியாவின் முதல்தரப் பல்கலைக்கழகமாக்க கனவு கண்டார். ஆனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலங்கைப் பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் 10வது இடத்தில் உள்ளது. உலகப் பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் 10 000மாவது இடத்திற்கு அண்மையாக உள்ளது. கொழும்புப் பல்கலைக்கழகம் முழு உலகிலும் முன்நிற்கின்ற 2000 பல்கலைக்கழகங்களில் ஒன்றாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவை யாழ்ப்பாணக் கல்வி நிலையின் வீழ்ச்சியை காட்டி நிற்கின்றன. இன்றைய உலகமயமாகி உள்ள உலகில் கல்வியே செல்வச்செழிப்பின் அடிப்படையாக உள்ளது. கல்வியை இழக்கின்ற சமூகம் பொருளாதார ரீதியாவும், அரசியல் ரீதியாகவும் மிகவும் பலவீனமான நிலைக்கே செல்கின்றனர். அதிலும் குறிப்பாக சிறுபான்மைச் சமூகமான தமிழர்கள் தங்கள் கல்விநிலையில் வீழ்ச்சி அடைவது மிகவும் ஆபத்தானது.

ஆகவே தமிழ் கல்விச் சமூகம் மீண்டும் தனது கல்விநிலையை முன்னைய உயர்நிலைக்கு இட்டுச்செல்ல வேண்டும். அதற்கு எமது மாணவர்களுக்கு கல்வியை ஊட்டுகின்ற ஆசிரியப் பெருந்தகைகளை உருவாக்குகின்ற பல்கழைக்கழகம் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். தமிழ் கல்விச் சமூகத்தின் மகுடம் யாழ் பல்கலைக்கழகம். அதற்கு ஏற்றாற் போல் அப்பல்கலைக்கழகம் இயங்க வேண்டும். சிறந்த கல்வித்தகமையும், நிர்வாகத் திறமையும் சர்வதேச பல்கலைக்கழகங்களில் பணியாற்றிய அனுபவமும் உடைய ஒருவராலேயே வீழ்ச்சியடைந்துள்ள தமிழ்க் கல்விச் சமூகத்தின் கல்வியை உயர்நிலைக்கு கொண்டு செல்ல முடியும்.

யாழ் பல்கலைக்கழகத்தின் கவுன்சில் உறுப்பினர்கள்:
பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் கவுன்சில் உறுப்பினர்கள்:

பேராசிரியர் கெ சிவபாலன் – (Dean/Medicine), பேராசிரியர் கெ தேவராஜா – (Dean/Management Studies & Commerce), கலாநிதி திருமதி சிவச்சந்திரன் – (Dean/Agriculture), பேராசிரியர் கந்தசாமி – (Dean/ Science), பேராசிரியர் கெ குகபாலன் – (Rep of Senate), கலாநிதி மங்களேஸ்வரன் (Dean/Business Studies, Vavuniya Campus), திரு எஸ் குகனேசன் (Dean/Applied Science, Vavuniya Campus), திரு ஆர் நந்தகுமார் – (Rector/Vavuniya Campus)

பல்கலைக்கழகத்தைச் சாராத University Grand Commission ஆல் நியமிக்கப்பட்ட செனட்சபை உறுப்பினர்கள்:

திரு கெ கணேஸ் (முன்னாள் யாழ் அரசாங்க அதிபர்.), அருட்தந்தை கலாநிதி ஜஸ்ரின் பி ஞானப்பிரகாசம் (அடுத்த யாழ் பிஸப் ஆகக் கருதப்படுபவர்.), திரு கெ கேசவன் (பிரபலமான சட்டத்தரணி – சென் பற்றிக்ஸ் பழைய மாணவர்.), திரு ஏ திருமுருகன் (தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத் தலைவர், சைவ மற்றும் சமூக வேகைகளில் ஈடுபட்டு உள்ளவர்.), திரு ஏ தியாகராஜா (பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையின் இரசாயனப் பொறியியலாளராக இருந்தவர்.), திரு ரி ராஜரட்ணம் (கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியின் உப அதிபராக இருந்தவர். பின்னர் SLIATE (Sri Lanka Institute for Advanced Technical Education) என்ற தொழில்நுட்பக் கல்லூரியை உருவாக்கியவர்.), இன்ஜினியர் எம் ராமதாசன் (Euroville Engineers and Constructors (PVT) Ltd இன் முகாமைத்துவ இயக்குநர்.), திருமதி என் குணபாலசிங்கம் (யாழ் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியை.), திரு கெ தேவேந்திரன் (Jaffna Multi Purpose Cooperative Society – MPCSக்கு பொறுப்பானவர்.), திருமதி சரோஜா சிவச்சந்திரன் (மிகவும் அறியப்பட்ட பெண்ணிலைவாதி. சர்வதேச அரங்குகளில் பேச்சாளராக அழைக்கப்பட்டவர். இலங்கைத் தேசிய சமாதான கவுன்சிலின் உறுப்பினர்.) திரு எம் சிறிபதி (பாடசாலை அதிபர்), சுசிலா சாரங்கபாணி (ஓய்வுபெற்ற ஆசிரியை. சமாதான நீதவான்), டொக்டர் எஸ் ரவிராஜ் (யாழ் போதனா வைத்தியசாலை சிரேஸ்ட சத்திரசிகிச்சை மருத்துவர்)

யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு தகுதி வாய்ந்த ஒருவரை நிர்ணயிக்கின்ற பொறுப்பை தமிழ் கல்விச் சமூகத்தின் சார்பில் மேலுள்ள 21 பல்கலைக்கழக கவுன்சில் உறுப்பினர்கள் மேற்கொள்ள உள்ளனர். இவர்கள் தமிழ் கல்விச் சமூகத்தின் எதிர்காலத்தை மட்டும் முன்நிறுத்தி, தங்கள் வாக்குகளை மிகப்பொறுப்புடன் வழங்கி, தமிழ் கல்விச் சமூகத்தின் மகுடமாய் உள்ள யாழ் பல்கலைக்கழகத்துக்கு மிகச் சிறந்த கல்வி ஆளுமையும் நிர்வாக ஆளுமையும் பரந்த அனுபவமும் உடைய ஒருவரை உபவேந்தராகத் தெரிவு செய்ய வழிசெய்ய வேண்டும். தமிழ் கல்விச் சமூகம் மீண்டும் தளைத்தோங்க வழியேற்படும் என நம்புவோம்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • shan.s
    shan.s

    யார் வந்தாவலும் யாழ் பல்கழைக்கழக தலையெழுத்தை மாற்ற முடியாது.வால்பிடிப்பவர்கள் அவார்களை மாற்றிவடுவார்கள்

    Reply