அவுஸ்திரேலிய மண்ணில் இலங்கை அணிக்கு முதல் தொடர் வெற்றி

upul.jpgஅவுஸ் திரேலியாவுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி டக்வத் லுவிஸ் முறைப்படி 29 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இதன் மூலம் இலங்கை அணி ஒருநாள் வரலாற்றில் முதல் முறையாக அவுஸ்திரேலிய மண்ணில் அவுஸ்திரேலியாவை தொடரொன்றில் வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.

சிட்னியில் நேற்று நடைபெற்ற இரண் டாவது ஒருநாள் போட் டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதில் முதல் போட்டியில் பங்கேற்காத ஆஸி. அணித் தலைவர் ரிக்கி பொன்டிங் கள மிறங்கினார். இந்நிலையில், துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணிக்கு உபுல் தரங்க, டி. எம். டில்ஷான் ஆகியோர் சிறந்த ஆரம்பத்தை வழங்கினர். இருவரும் இணைந்து 119 பந்துகளுக்கு 98 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். இதில் டில்ஷான் 57 பந்துகளில் 5 பெளண்டரிகளுடன் 47 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வந்த மஹேல ஜயவர்தனவினால் 5 ஓட்டங்களையே பெற முடிந்தது. எனினும் 3ஆவது விக்கெட்டுக்காக அணித் தலைவர் குமார் சங்கக்காரவுடன் இணைந்த உபுல் தரங்க இலங்கை அணியின் ஓட்டங்களை மேலும் அதிகரித்தனர். இதன்போது இருவரும் இணைந்து 70 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற இலங்கை அணியின் மொத்த ஓட்டங்கள் 186 ஆக அதிகரித்தது.

இதனிடையே 34 ஆவது ஓவரில் வைத்து மழை குறுக்கிட்டது. தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் 41.1 ஆவது ஓவரில் வைத்து மீண்டும் மழை குறுக்கிட்டது. இதன்போது இலங்கை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 213 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் போட்டி நீண்ட நேரம் மழையால் தடைப்பட்டதால், இலங்கை அணியின் இன்னிங்ஸ் 41.1 ஓவர்களுக்கே வரையறுக்கப்பட்டது. இதில் இலங்கை சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய உபுல் தரங்க 112 பந்துகளுக்கு 6 பெளண்டரிகளுடன் ஆட்டமிழக்காது 86 ஓட்டங்களைப் பெற்றார். அணித் தலைவர் சங்கக்கார 52 பந்துகளில் 4 பெளண்டரிகளுடன் 47 ஓட்டங்களை குவித்தார். இதன்படி டக்வர்த் – லுவிஸ் முறை அடிப்படையில் அவுஸ்திரேலிய அணிக்கு 39 ஓவர்களில் 244 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதற்கமைய வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகள் முக்கியமான தருணங்களில் பறிபோயின.

இறுதியில் ஆஸி. அணி 39 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 210 ஓட்டங்களையே பெற்றது. இதன் மூலம் ஆஸி. ஒரு நாள் அரங்கில் தொடர்ச்சியாக 7ஆவது போட்டியிலும் தோல்வியை சந்தித்தது. கடந்த 13 ஆண்டுகளில் ஆஸி. அணி ஒருநாள் அரங்கில் பெற்ற மிக மோசமான பெறுபேறு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

மறுபுறத்தில் இலங்கை அணி ஆஸி. மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடர் ஒன்றை வென்று சாதித்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை 2 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை சார்பில் சிறப்பாக செயல்பட்ட உபுல் தரங்க போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவானார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *