வடமராட்சிக் கிழக்கில் மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களிலுள்ள பெண்கள் மீது படையினர் தவறாக நடக்க முயற்சி.

யாழ்.வடமராட்சிப் பகுதியில் அண்மையில் மீள்குடியமர்த்தப்பட்ட குடும்பங்களிலுள்ள பெண்கள் மீது அங்கு நிலைகொண்டுள்ள படைச்சிப்பாய்கள் தவறாக நடந்து கொள்ள முயல்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற சம்பவமொன்றில் இவ்வாறு தவறாக நடக்க முற்பட்ட சிப்பாய் ஒருவரை பொதுமக்கள் பிடித்து விடியும் வரை கட்டி வைத்தனர்.

வடமராட்சிக்கிழக்கு ஆழியவளை கொடுக்கிளாய் என்னுமிடத்தில் இரவு நேரத்தில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த குடும்பப் பெண்ணொருவரிடம் தவறாக நடக்க முற்பட்ட படைச்சிப்பாயே இவ்வாறு பிடிபட்டார். இரவில் மக்கள் உறங்கிக்கொண்டிருந்த வேளை. அவர் வீடொன்றிற்குள் நுழைய முற்பட்டுள்ளார். அவ்வீட்டிலுள்ளவர்கள் கூச்சலிட்டபோது வெளியேறி இன்னொரு வீட்டுக்குள் நுழைந்துள்ளார். அவ்வீடாரும் கூச்சலிட்ட போது அங்கிருந்தும் ஓடியுள்ளார். சிறிது நேரத்தின் பின்னர் சற்றுத் தொலைவிலுள்ள வீடொன்றிற்குள் நுழைந்து உறங்கிக் கொண்டிருந்த கணவனை சத்தமிடாமல் கடந்து, வீட்டின் விளக்கை அணைத்துவிட்டு உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை நெருங்கியுள்ளார். அச்சமயம் விழித்துக் கொண்ட அப்பெண் கூச்சலிட்ட போது அயல் வீடுகளிலிருந்தவர்கள் கூடி தப்பியோட முற்பட்ட சிப்பாயை பிடித்து ஒரு கதிரையுடன் கட்டிப்போட்டுள்ளனர். விடிந்ததும் அப்பகுதி இராணுவ முகாம் பொறுப்பதிகாரியிடம் சம்பந்தப்பட்ட சிப்பாய் ஒப்படைக்கப்பட்டார்.

அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட வடமராட்சிக்கிழக்குப் பகுதிகளில் எவ்வித மின்சார வசதிகளுமின்றி கூடாரங்கள், தற்காலிக வீடுகளில் தங்கியுள்ள மக்கள் இவ்வாறான சம்பவங்களால் இரவு வேளைகளில் அச்சத்துடன் பொழுதைக் கழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • karuna
    karuna

    இது நடைபெறாதிருக்க வேண்டுமாயின் யாழ் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள சிங்கள சகோதர சகோதரிகளை இந்த பகுதியில் தற்காலிகமாக குடியேற்றலாம். பின்பு அவர்களிற்கும் சில வண்டவாளங்கள் தெரிய நியாயமிருக்கும்.

    Reply