சவூதி அரேபியாவில் இலங்கைப் பணிப்பெண் ஆரியவதிக்கு ஆணிகள், ஊசிகள் ஏற்றப்பட்ட விடயம் தொடர்பாக உண்மை நிலையைக் கண்டறிய சவூதி சென்ற இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தலைவர் உள்ளிட்ட குழுவினர் சவூதியிலுள்ள இலங்கைத் தூதுவர் ஊடாக சவூதி வெளிநாட்டமைச்சுக்கு தமது முறைப்பாடுகளை நேற்று உத்தியோகபூர்வமாக கையளித்தது.
சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதுவர் சவூதி வெளிநாட்டமைச்சிடம் முழுமையான அறிக்கைகளைக் கையளித்தார். இலங்கை திரும்பிய ஆரியவதியின் மருத்துவ அறிக்கைகள் உட்பட முறைப்பாடுகள் அடங்கிய அறிக்கைகளில் ஆரியவதியின் உடலில் ஊசி, ஆணிகள் ஏற்றப்பட்ட நிலையிலுள்ள எக்ஸ்ரே படங்கள், அறுவைச் சிகிச்சையின் அறிக்கைகள் என்பவற்றையும் சமர்ப்பித்தனர்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸிலி ரணவக்க மற்றும் பணியகத்தின் இரண்டு உயரதிகாரிகள் சவூதி சென்றனர். சவூதியிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் விசேட சந்திப்பொன்றை நடத்திய பின்னர் குறிப்பிட்ட சவூதி எஜமானர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் விதத்தில் இந்த அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர். சவூதி அரசிடம் வேண்டுகோளாகவே இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இலங்கைப் பெண் ஆரியவதி மீது சவூதி அரேபியாவில் வைத்து மேற்கொள்ளப்பட்ட சித்திரவதை தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு சவூதி அரேபிய அதிகாரிகள் முன்வந்துள்ளதாக சவூதி சென்றுள்ள இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சவூதி சென்ற இக்குழுவினர் நேற்று சவூதி அரேபியாவில் வேலைக்கு ஆள் சேர்ப்போரின் தேசிய கமிட்டியின் தலைவர் சரத் அல்பாத் சந்தித்து பேசியதுடன், இவ்வாறான சம்பவம் மீண்டும் இடம்பெறா வகையில் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் ஆரியவதி எதிர் நோக்கிய பயங்கர அனுபவத்தின் காரணமாக அவர் உள மற்றும் உடல் ரீதியாக ஏற்பட்ட பாதிப்புக்கு உரிய வகையில் அவருக்கு நஷ்டஈடு வழங்கப்படவேண்டும் என்று இலங்கை குழுவினர் சவூதி அதிகாரிக்குக் கூறியுள்ளனர்.
அத்துடன், இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறுவதை தடுக்க இரு நாடுகளுக்கிடையிலும் புதிதாக ஆட்சேர்ப்பு நிபந்தனைகளை அறிமுகப்படுத்துவது பற்றியும் கலந்துரையாடியுள்ளனர். அதனையடுத்து மத்திய கிழக்கில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்களை பார்ப்பதற்காக மேற்படி குழுவினர் தமாம் மற்றும் ஜெத்தாவுக்கு செல்லவுள்ளனர்.
15 லட்சம் இலங்கையர்கள் வெளிநாடுகளில் குறிப்பாக மத்திய கிழக்கில் பணிப்பெண்களாகவும், சாரதிகளாகவும் பணிபுரிகின்றனர். சவூதி அரேபியாவில் மட்டும் 4 லட்சம் இலங்கையர்கள் இவ்வாறு பணிபுரிகின்றனர்.