உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்தால் அரசதுறை அரசியல் மயப்படுத்தப்படுமென கவலை தெரிவித்துள்ள தொழிற்சங்க மகா சம்மேளனம் இதனை நிறுத்துமாறும் கோரியுள்ளது. அத்துடன் இதற்கு எதிரான நடவடிக்கை தொடர்பில் அரச ஊழியர்கள் தொழிற்சங்கம் அரசியல்வாதிகளுடனான கருத்தரங்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடத்தவுள்ளதாகவும் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தொழிற்சங்க மகா சம்மேளனம் நேற்று புதன்கிழமை கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் அதன் செயலாளர் சமன் ரத்னபிரிய, தலைவர் அன்டன் மார்க்கஸ், பொருளாளர் என்.ஜி.ஆர்.அத்துல்ல, தேசிய அமைப்பாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர் நவரட்ண பண்டார ஆகியோர் பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் பதவிக்காலத்தை இரு தடவைக்கு மேல் அதிகரிப்பதற்காக அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள அரசியலமைப்புத் திருத்தத்தை நாம் எதிர்க்கின்றோம். தற்போதைய அரசியலமைப்பிலுள்ள ஜனாதிபதி முறைமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இல்லாதொழிப்பதாக கோரியே இந்த அரசாங்கம் 1994 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது இந்நிலையில் இதனைச் செய்யாது இந்த முறைமை அதிகரிக்கப்படுவதையிட்டே எதிர்க்கின்றோம்.