களனி யாவில் சமுர்த்தி அதிகாரி ஒருவர் மரத்தில் கட்டப்பட்ட சம்பவம் தொடர்பாகவிசாரணை நடத்திய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழு முன்னாள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா குற்றமற்றவர் என்று தீர்மானித்துள்ளது.
மூன்று உறுப்பினர்களைக் கொண்ட இக்குழு தனது அறிக்கையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம்கையளிக்கவுள்ளது. டெங்கு கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கேற்க தவறியமைக்காக சமுர்த்தி அதிகாரி ஒருவரை மரத்தில் கட்டி தண்டனை வழங்கிய சம்பவத்திற்கு மேர்வின் சில்வா பொறுப்பு என்பதை நிரூபிப்பதற்கான சாட்சியம் எதுவும் அவருக்கு எதிராக இல்லை என்று சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்றுக்குழு கூறியுள்ளது.
கிராமத்தில் பாரம்பரியமாக வழங்கப்படும் தண்டனை தொடர்பாக உதாரணம் காட்டும் விதத்தில் தன்னைத்தானே மரத்தில் கட்டிவைக்க விரும்பியிருந்ததாக சமுர்த்தி அதிகாரி கூறியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. தமது கடமையிலிருந்தும் ஏனையவர்கள் தவறி விடக்கூடாது என்பதை வெளிப்படுத்த இவ்வாறு செய்து காண்பித்ததாக அந்த அதிகாரி கூறியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தன்னிச்சையாகவே அவர் மரத்தில் தன்னை கட்டியிருந்ததாக குழுவானது அறிக்கையில் தெரிவித்திருப்பதாக அததெரண இணையத்தளம் நேற்று செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டிருக்கிறது.
கிடைத்திருக்கும் ஆதாரங்களை பரிசீலனைக்கெடுத்து கட்சியின் ஒழுக்க விதிகளை மீறிய குற்றம் எதனையும் மேர்வின் சில்வா இழைத்திருக்கவில்லை என்று குழுவானது தீர்மானித்திருப்பதாக சுகாதார அமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.