உத்தேச அரசியலமைப்பு திருத்தம்: ஜனநாயகம், இறைமைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது – தமிழ்க்கட்சிகளுடனும் பேச்சு

உத்தேச அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் ஜனநாயகத்திற்கோ மக்களின் இறைமைக்கோ எதுவித பாதிப்பும் ஏற்படாது. எதிர்க் கட்சி மற்றும் ஐ.ம.சு.மு. வில் அங்கம் வகிக்கும் கூட்டுக் கட்சிகளுடன் கலந்தாலோசித்த பின்னரே இந்தத் திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன. இதற்கு ஐ.தே.க. தனது ஆதரவை வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைவர்கள் கேட்டுக்கொண்டனர்.

அரசியலமைப்பில் கட்டமைப்பு ரீதியான திருத்தங்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும். இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் கட்சிகளுடன் பேச்சு நடத்தப்படும் எனவும் அவர்கள் கூறினர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிரேஷ்ட உப தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, ஐ.ம.சு.முன்னணி செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த் ஆகியோர் இங்கு கருத்துத் தெரிவித்தனர்.

1978 ஆம் ஆண்டு யாப்பினூடாக கடந்த 32 வருட காலமாக பெறப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் புதிய யாப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. எதிர்கால அபிவிருத்திப் பணிகளுக்கு தேவையானவாறே இதில் திருத்தம் செய்யப்படுகிறது.

அபிவிருத்திப் பணிகளுக்குள்ள தடைகள் இதனூடாக நீக்கப்பட்டு அரசியல் ஸ்திர நிலையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாப்புத் திருத்தம் செய்தால் அது அரசாங்கத்தின் முடிவாக அமையும் என ஐ.தே.க. ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். அதலபாதாளத்தில் விழுந்துள்ள நிலையில் ஐ.தே.க இவ்வாறு கூறுவது நகைப்புக்குரியதாகும். உத்தேச அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஐ.தே.க ஆதரவு வழங்க வேண்டும் என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *