இலங் கையில் இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்குத் துரிதமாகப் புனர்வாழ்வளிப்பதற்குரிய பொருத்தமான வழிமுறையைக் கண்டறியுமாறு இந்திய மத்திய அரசாங்கத்தைத் தமிழக ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் நேற்று செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியிருக்கிறது.
தி.மு.க.வின் பாராளுமன்றக் குழுக்கூட்டம் நேற்று இடம்பெற்றபோது இலங்கைத் தமிழர்களின் புனர்வாழ்வு தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் புனர்வாழ்வு விடயத்தில் தாமதம் காட்டப்படுவதாக இலங்கை அரசாங்கத்தைக் கண்டித்தும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இதேவேளை, கூட்டத்தின் பின் நிருபர்களிடம் கருத்துத் தெரிவித்த தமிழக முதலமைச்சர் கருணாநிதி, வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் தன்னை சமீபத்தில் சந்தித்தபோது தூதுக்குழு அல்லது விசேட தூதுவர் ஒருவர் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளதாக உறுதி அளிக்கப்பட்டதாகக் கூறினார். இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகளைக் கண்டறிவதற்காகத் தூதுக்குழுவை அல்லது விசேட தூதுவரை அனுப்பவுள்ளதாக உறுதியளித்திருந்ததாகவும் கருணாநிதி தெரிவித்தார்.
இதேவேளை, பொருட்கள், சேவைகள் வரி மற்றும் மருத்துவ கல்லூரி அனுமதிக்கு பொது நுழைவுப் பரீட்சை நடத்தும் யோசனை என்பவற்றுக்கும் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. எதிர்ப்புத் தெரிவித்துத் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறது.