சிங்களம் பேசும் மனிதர்களுக்கு ஒரு கடிதம்… மீராபராதி

நட்புடன் சிங்களம் பேசும் நண்பர்களுக்கும் மற்றும் சக மனிதர்களுக்கு

முதலில் சிங்கள மொழியில் தங்களுடன் தொடர்பு கொள்ள முடியாமைக்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கின்றேன். சிங்கள மொழி தெரியாமைக்கான காரணம் அந்த மொழி மீதான வெறுப்பினால் அல்ல. அதற்காக சிறுவயதிலும் வெறுப்பு இருக்கவில்லை என பொய் கூறவில்லை. நான் வளர்ந்த பின்பு சிங்கள மொழி மீது வெறுப்பு இல்லை. ஆனால் ஒரு மொழியை கற்கும் ஆற்றல் எனக்கு குறைவாக இருப்பதே சிங்கள மொழியில் எழுத முடியாமைக்கான முதன்மையான காரணம். இந்த ஆற்றலை வளர்க்க முடியாமைக்காக மனம் வருந்துகின்றேன். அதேவேளை தமிழ் மொழியில் எழுதுவதால் எனக்கு தமிழ் நன்றாகத் தெரியும் என்றோ அல்லது எனது அடையாளம் தமிழ் என்றோ நீங்கள் அர்த்தம் கொள்ளத்தேவையில்லை. நானும் அவ்வாறு உணர்வதில்லை.

என்னைப் பொறுத்தவரை மொழி என்பது நம்மை அடையாளப்படுத்துவதற்கும் அப்பால் இன்னுமொரு மனிதருடன் ஆழமாகவும் நெருக்கமாகவும் உரையாடுவதற்கான ஒரு ஊடகமே. ஆனால் துரதிர்ஸ்டவசமாக நாம் சிறுவயதில் இருந்து எந்த விடயங்களுடன் அதிகமான ஈடுபாட்டுடன் வளர்கின்றோமோ அது நமக்குள் ஆழமாக வேருண்றி விடுவது மட்டுமல்ல அதுவே நமது அடையாளமாகவும் உருவாகிவிடுகின்றது அல்லது நமது சமூகங்களால் உருவாக்கப்பட்டு விடுகின்றது. இவ்வாறான ஒரு மனிதரின் அடையாள உருவாக்கத்தில் ஒரு சமூகத்தின் மொழி மட்டுமல்ல மதம், சாதி, மற்றும் பால் அடையாளங்கள் என பல சமூக கூறுகள் தீர்மானிப்பவையாக இருக்கின்றன. மனிதர்கள் பிரக்ஞையற்று வாழ்வதன் விளைவாக இந்த அடையாளங்களின் அடிமைகளாக அவர்கள் வாழ்கின்றனர் என்பது மனித வாழ்வில் நடைபெறுகின்ற துரதிர்ஸ்டமான ஒரு விடயம். இந்த அடையாளங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அடிமைத்தனத்தை என்று பிரக்ஞைபூர்வமாக புரிந்துகொள்கின்றோமோ அன்று நமது அடையாளம் சார்ந்த அடிமைத்தனத்திலிருந்து விடுதலைக்கான சுதந்திரத்திற்கான பல கதவுகள் திறக்கப்படும் என்பதில் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

மறுபுறம் இவ்வாறன அடையாளங்கள் அதிகாரத்துவத்தால் அடக்கப்படும் பொழுது அல்லது இன்னுமொரு அடையாளம் கொண்ட மனித கூட்டங்கள் அல்லது அவர்களது பிரதிநிதியான ஆட்சியாளர்களால் திட்டமிட்டு அடக்கப்பட்டு அழிக்கப்படும் பொழுது இந்த அடையாளங்களுடனான நமது உறவு மேலும் பிரக்ஞையற்ற தன்மையுடாக ஆழமா(கின்றது)க்கப்டுவதுடன், இந்த அடையாளங்கள் அம் மனிதர்களின் வாழ்வில் முக்கியத்துவம் பெருகின்றன. இதன் விளைவாக அவற்றை உயர்ந்தவையாக கருதுவதும் தூய்மையானதாக கட்டமைப்பதும் அடக்கப்பட்ட மனிதர்களின் பிரக்ஞையற்ற எதிர் செயற்பாடாக நடைபெறுகின்றன. இது பெரும்பாலான அடக்கி ஒடுக்கப்படும் மனிதக் கூட்டங்களில் வாழ்வில் அவர்கள் வரலாற்றில் தவிர்க்கப்பட முடியாத ஒரு நிகழ்வாக நடைபெறுகின்றது. இதேவேளை இந்தப் பரவலான அடையாள பொதுமைப்படுத்தள்களுக்குள் பல்வேறு வகையான அக சுமூக அடக்குமுறைகள் நிலவியபோதும், மேற்குறிப்பிட்டவாறு பொதுவாகவும் பரந்தளவிலும் அடக்கப்படும் அடையாளங்களுக்காக ஒரு மனிதக் கூட்டம் ஒன்று போராடுவது நியாயமானதல்லவா?.

சிங்களம் பேசும் மனிதர்களே! உங்களது இன மத மொழி அடையாளத்துவத்தின் நிலைமையையே நீங்கள் உதாரணமாகப் பார்க்கலாம். இலங்கையில் மட்டும் பேசப்படும் சிங்கள மொழியையும் பௌத்த மதத்தின் குறிப்பான ஒரு பிரிவையும் காப்பாற்றவேண்டிய தேவை உள்ளதென இலங்கை வாழ் சிங்களம் பேசுகின்ற பௌத்த மத நம்பிக்கையுள்ள மனிதர்கள் உணர்கின்றீர்கள். இந்த உணர்வை பல தமிழ் பேசும் மனிதர்களும் புரிந்துகொள்கின்றனர். இவ்வாறான பயத்திற்கும் அதனால் உருவான தங்களது அடையாளங்களைப் பாதுகாப்பதற்குமான உணர்வுக்கும் பல காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக இந்தியா மற்றும் அங்கு அதிகாரத்துவத்திலிருக்கின்ற இந்து மதமும் அவர்களின் அரசியலும் மற்றும் தமிழகத்தின் புவிசார் நிலையும் அங்கு வாழுகின்ற தமிழ் பேசும் மனிதர்களின் எண்ணிக்கையும், அவர்களின் அரசியலும் என பல காரணங்களைக் கூறலாம். இவ்வாறான ஒரு சுழலில், தாங்கள் தங்கள் மொழியையும் மதத்தையும் காப்பாற்ற வேண்டிய ஒரு சுழலில் இருக்கின்றீர்கள் என்பது புரிந்துகொள்ளக் கூடியதே.

ஆனால் இவ்வாறு தங்களது மொழியையும் மதத்தையும் நீங்கள் காப்பாற்றுவதற்காக, இலங்கை நாட்டில் ஒரு பகுதியில் வாழும் தங்களிலிருந்து வேறுபட்ட ஒரு மொழியையும் அடையாளத்தையும் கொண்டுள்ள ஆனால் அந்த நாட்டிலையே ஒரு தொடர்ச்சியான வாழ்வையும்; நீண்ட கால வரலாற்றையும் பொதுவான அடையாளத்தையும் கொண்டுள்ள தமிழ் பேசும் மனிதர்களை, நீங்கள் அல்லது தங்களது அரசு அடக்குவதும் அழிப்பதும் அல்லது அவ்வாறு நடைபெறுவதற்கு நீங்கள் ஆதரவளிப்பதும் நியாயமற்றதல்லவா?. இவ்வாறான நியாயமற்ற தன்மையாலும் சுழ்நிலையினாலுமே, தங்களைப் போன்றே தமிழ் பேசும் மனிதர்களும் தமது மொழியையும் அடையாளத்தையும் காப்பாற்றவும் அதன் அடிப்படை உரிமைக்காகவும் போராடினார்கள். ஆனால் இன்று தமிழ் பேசும் மனிதர்களுக்கு எதிராக குறிப்பாக அவர்களது உரிமைப் போராட்டத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போரில் சிறிலங்கா அரசாங்கம் வென்றுள்ளது. இந்த வெற்றிக் களிப்பில் கொண்டாடிக் கொண்டிருக்கும் சிங்கள மொழி பேசும் மனிதர்களே! உங்களுடன் மனம் திறந்து கதைக்கும் விருப்பத்தில் உந்தப்பட்டே இதை ஆர்வமுடன் எழுதுகின்றேன்.

சிங்களம் பேசும் மனிதர்களே! முதலில் தங்களின் இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் ஒரு சாதாரண மனிதராக கூட என்னால் பங்குபற்ற முடியாதது. ஏனனில் நான் தமிழ் பேசியபோதும், இன்று நான் ஒரு புத்தரின் சீடன். இந்தடிப்படையில் இந்த போரின் வெற்றியை நீங்கள் கொண்டாடுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மாறாக பௌத்த மதத்தை பின்பற்றும் நீங்கள் இவ்வாறு கொண்டாடுவதை பார்த்து கவலையே கொள்கின்றேன். இவ்வாறு நான் ஏற்றுக்கொள்ள முடியாமைக்கும் கவலை கொள்ளவதற்கும் பல காரணங்கள் இருந்தாலும் சில காரணங்களை இங்கு முன்வைக்கின்றேன். முதலாவது இக் கொண்டாட்டம் புத்தரின் போதனைகளுக்கு எதிரானது என்பதால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதை நீங்கள் இன்னும் புரியாது இருக்கின்றீர்கள் என்பதை உணரும் பொழுது மேலும் கவலைகொள்கின்றேன். இரண்டாவது தங்களின் அல்லது தங்களது அரசாங்கம் பெற்ற போர் வெற்றி என்பது சாதாரண சுரண்டப்படும் மனிதர்களுக்கு கிடைத்த வெற்றியல்ல. மாறாக இந்த வெற்றியானது சாதாரண சிங்கள மொழி பேசும் மனிதர்கள் மீது சிங்கள பௌத்த பேரினவாதத்தைக் கட்டமைத்த இனவாத சக்திகளின் வெற்றி என்பதானால் உடன்பட முடியவில்லை. இதை நீங்கள் புரியாதிருப்பதனால் கவலைகொள்கின்றேன். மூன்றாவது அடக்கப்பட்டுவரும் தமிழ் பேசும் மனிதர்களின் மீதான தொடர்ச்சியான அடக்குமுறையின் மீதும் அவர்களின் நியாயமான உரிமைக்கான விடுதலைக்கான போராட்டத்தின் தோல்வியின் மீதும் கொண்டாடப்படுகின்ற வெற்றியே இது. இதனால் நீங்கள் அல்லது தங்களது அரசு போரில் வெற்றிபெறவில்லை என நான் கூறவில்லை.

சிங்களம் பேசும் மனிதர்கள் அல்லது அவர்களது அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளார்கள். தமிழ் பேசும் மனிதர்கள் அல்லது புலிகள் இயக்கம் தோற்றுப்போய்விட்டார்கள். ஆனால் அடக்கப்படுகின்ற மனிதர்களின் சார்பாக இந்த வெற்றியுடன் உடன்படவோ ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை. இதன் அர்த்தம் நான் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என்பதல்ல. அதாவது புத்தரை அவரின் போதனைகளை நான் புரிந்து ஏற்றுக்கொண்ட போதும் நான் ஒரு பௌத்த மதத்தினரோ அல்லது அந்த அடையாளத்தைக் கொண்டவரோ அல்ல. இதேபோல் நான் ஏற்கனவே கூறியதுபோல் நான் தமிழ் பேசினாலும் எனது அடையாளம் தமிழ் என்பதை நான் ஏற்பதில்லை. ஆனால்; ஒருவர் தமிழ் மொழியை பேசுகின்றார் என்பதற்காகவும் தமிழ் அடையாளத்தைக் கொண்டிருக்கின்றார் என்பதற்காகவும் அவர் அடக்குமுறைக்கு உள்ளாவதை எதிர்கின்றேன். இந்த அடக்குமுறையானது போர் முடிந்த பின்பும் தொடர்வது மேலும் கவலைக்குரியதும் துரதிர்ஸ்டமானதுமாகும். ஆகவே தமது உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் இன்றும் போராட வேண்டிய தேவை தமிழ் பேசும் மனிதர்களுக்கு உள்ளது என்றே நான் உணர்கின்றேன். அதற்கான சுழல் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன…

சமூக மாற்றத்தை விரும்பும் ஒருவர்; எந்த அடக்குமுறைகளுக்கும் அடிப்படையில எதிரானவராக இருப்பார். இந்தடிப்படையில் இலங்கையில் வாழ்கின்ற தமிழ் பேசும் மனிதர்களின் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கவும் செயற்படவும்; வேண்டிய பெறுப்பும் நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. ஏனனில் அது நியாயமான தேவையாக இன்றும் உள்ளது. உதாரணமாக என்பதுகளின் கடைசியில் ரோகன வீஜய வீரவை சிறிலங்கா அரசாங்கம் கொன்ற பொழுதும் நான் கவலைப்பட்டேன். இதன் காரணம் நான் ரோகண வீஜய வீரவை ஆதரிப்பவரோ அல்லது அவருடன் உடன்பாடு கொண்டதனாலோ அல்ல. மாறகா அவருடைய கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் மீது விமர்சனம் உள்ளது. ஆனால் அவரும் அவரது இயக்கத்தின் செயற்பாடும் போராட்டமும் அடக்கப்பட்டு சுரண்டப்படும் பரந்துபட்ட பெரும்பான்மை வறிய சிங்கள மொழி பேசும் மனிதர்களின் வாழ்வுடனும் அவர்களின் விடுதலைக்கான சுதந்திரத்திற்கான போராட்டத்துடன்; பிண்ணிப்பினைந்திருந்தது. அந்த அடக்கப்பட்ட சுரண்டப்படும் சிங்களம் பேசும் மனிதர்களின் குரலாக அன்று ரோகன வீஜய வீரவும் அவரது இயக்கமும் ஒலித்துக்கொண்டும் இயங்கிக்கொண்டும் இருந்தார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் மறுபுறம் அந்த சுரண்டப்படும் சிங்கள் மொழி பேசும் மனிதர்களின் போராட்டம் அடக்கப்பட்டதற்கும் தொடர்ந்தும் அவ்வாறு அடக்கப்பட்டு கொண்டு இருப்பதற்கும் ரோகண வீஜய வீரவின் தலைமையும் அவரது இயக்கம் அல்லது கட்சியின் கொள்கைகளும் ஒரு காரணமாக இன்றும் இருக்கின்றன. மேலும் இவர்களும் எந்த அடக்கப்பட்ட மனிதர்களின் வீடுதலைக்காகப் போராடினார்களோ அவர்களுக்கு எதிராக பல்வேறு காரணங்களைக் கூறி (உதா. துரோகி, உளவு பார்ப்பவர்) தமது ஆயுதங்களை திருப்பினர். இவ்வாறன காரணங்களுக்காக பலருக்கு அவர்கள் மீது இன்றும் கோவம் மற்றும் விமர்சனம் உள்ளது என்பதை இங்கு குறிப்பிடப்படவேண்டியுள்ளது. ஏனனில் இதுபோன்றதொரு சுழலில்தான் தமிழ் பேசும் மனிதர்களும் வாழ்ந்தார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய தேவையுள்ளது.

இதேபால் புலிகள் மீதும் பல தமிழ் பேசும் மனிதர்களுக்கு கோவமும் விமர்சனமும் அன்றும் இருந்தது இன்றும் உள்ளது. ஏனனில் புலிகளின் தலைமை சாதாரண தமிழ் பேசும் மனிதர்களை மட்டுமல்ல சாதாரண அடக்கப்படுகின்ற சுரண்டப்படுகின்றன சிங்கள மனிதர்களின் ஆதரவை தமக்குப் பெறுவதற்குப் பதிலாக அவர்களை பல்வேறு சந்தர்ப்பங்களில் படுகொலை செய்து கொன்றுள்ளார்கள். இது புலித் தலைமையின்; தவறான ஒரு செயற்பாடு என்பதை பல தமிழ் பேசும் மனிதர்கள் அன்றே புரிந்திருந்தார்கள். இன்றும் புர்pந்துகொள்கின்றார்கள். ஆகவே புலித் தலைமையின் இவ்வாறான செயற்பாட்டிற்காக, சிங்களம் பேசும் மனிதர்களிடம் குறிப்பாக அடக்கப்பட்டு சுரண்டப்படுகின்ற மனிதர்களிடம், நல்லுறவையும் கூட்டுறவையும் விரும்பும் தமிழ் பேசும் மனிதர்கள் சார்பாக இந்த சந்தர்ப்பத்தில் மன்னிப்பு கேட்பது பொருத்தமானதும் அவசியமானதும் ஒன்று எனக் கருதுகின்றேன். புலிகளின் தலைமையுடன் பெரும்பாலான விடயங்களுடன் உடன்பாடு இல்லாததால் அவர்களின் ஆதரவாளராகக் கூட பல தமிழ் பேசும் மனிதர்கள் என்றும் தம் வாழ்வில் இருந்ததில்லை. இதன் அர்த்தம் அவர்களின் உருவாக்கத்திற்கான பின்னனியையும் இருப்பின் அடிப்படைக்கான நியாயத்தன்மையையும் மறுப்பதோ நிராகரிப்பதல்ல.

ஏனனில் புலிகளின் தோற்றத்திற்கு அடிப்படையில் பல அரசியல் காரணங்களும் அதற்கான சுழலும் இலங்கையில் இருந்தது. அதாவது புலிகளின் ஆயுத வழி அல்லது இராணுவ செயற்பாடுகளுடன் தமிழ் பேசும் மனிதர்களின் அரசியல் கோரிக்கைகளும் அதற்கான போராட்டமும் பின்னிப் பிணைத்திருந்தது. இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மனிதர்கள் சிங்கள மொழி மற்றும் பௌத்த மதம் போன்றவற்றை பேசாது பின்பற்றாது இன்னுமொரு மொழியான தமிழையும் வேறு மதங்களையும் பின்பற்றுகின்றார்கள் என்பதனால் தொடர்ச்சியாக அடக்கப்பட்டு அழிக்கப்பட்டு வந்துள்ளனர். இந்த அடக்குமுறைகளும் அழிவுச் செயற்பாடுகளும் எந்தடிப்டையிலும் நியாயமற்றவை என்பதை சிந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் புர்pந்துகொள்வர்கள். மேலும் இவ்வாறன செயற்பாடுகள் புலிகளை ஆயுதரீதியாக தோற்கடித்த பின்னரும் தொடருகின்றமை மிகவும் கவலைக்குரிய ஒரு விடயமும் யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாததுமாகும். இந்த இனரீதியான அடக்குமுறைகளும் அழித்தொழிப்புகளும் தமிழ்பேசும் மனிதர்கள் முகம் கொடுக்கின்ற பொருளாதார சுரண்டல்களுக்கும் அக சமூக அடக்குமுறைகளுக்கும் அப்பால் அவர்களது பொதுவான அடையாளத்தின் அடிப்படையிலையே அவர்கள் எதிர்கொள்கின்றனர்.

குறிப்பாக இலங்கை சுதந்திரம் அடைந்த 1947ம் ஆண்டிலிருந்து திட்டமிட்டு இந்த அடக்குமுறை நடைபெற்று வருகின்றது என்பதை சிங்களம் பேசும் மனிதர்கள் நடுநிலையாக நின்று பார்ப்பார்களேயானால் புரிந்துகொள்வார்கள். ஒவ்வொரு ஆட்சியிலும் தமிழ் பேசும் மனிதர்கள் மீதும் அவர்களது அடையாளங்களின் அடிப்படையிலும் அதன் மீதுமான அடக்குமுறைகளும் அழித்தொழிப்புகளும் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன என்பதை அதைப் புரிந்துகொண்ட மற்றும் அவர்களின் விடுதலைப்போராட்டத்தின் அவசியத்தை ஏற்றும் கொண்ட பல்வேறு சிங்க மொழி பேசும் அறிஞ்ர்கள், சிந்தனையாளர்கள், மற்றும் அரசியற் செயற்பாட்டாளர்கள் எழுதியும் பேசியும் வந்துள்ளனர். ஆகவே, அதை நான் இங்கு மீண்டும் பட்டியில் போடவேண்டிய அவசியமில்லை என்றே கருதுகின்றேன். அமைதியிலும் சமாதானத்திலும் பிரச்சனைக்கான தீர்வுகளிலும் அக்கறையுள்ளவர்களும் எந்த அடக்குமுறைகளுக்கும் எதிராக போராடும் உணர்வுள்ளவர்களும் இவ்வாறான விடயங்களைத் தேடிப் படிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

இவ்வாறன சமூக அரசியல் மற்றும் பொருளாதார காரணங்களும் சுழல்;களும் தான் புலிகள் மற்றும் ஜேவிபி போன்ற இயக்கங்கள் உருவானதற்கான காரணங்களாக இருந்திருக்கின்றன அல்லது உருவாக்கப்பட்டிருந்து. மேலும் இவர்களது வன்முறை செயற்பாடுகள் மோசமானவையாக இருந்தபோதும் பரந்துபட்ட அடக்கப்பட்ட மற்றும் உரிமைகள் மறுக்கப்ட்ட மனிதர்கள் இவ்வாறன இயக்கங்களுக்கு ஆதரவளித்தனர். ஏனனில் இந்த மனிதர்களின் அரசியல் , பொருளாதரா, மற்றும் மனித உரிமைகள் போன்ற கோரிக்கைகளை இந்த இயக்கங்கள் பிரதிபலித்தன. இன்றும்கூட இந்த இயக்கங்களின் தோற்றத்திற்கான காரணங்கள் தீர்வு காணப்படாது இருக்கின்றன. இவ்வாற பிரச்சனைகளுக்கு தீர்வுகளை முன்வைத்து இக் காரணங்களை நிவர்த்தி செயவதற்குப பதிலாக இதுவரையான அனைத்து அரசாங்கங்களும்; மேற்குறிப்பிட்ட குழுக்களின் வன்முறை செயற்பாடுகளுக்கு நிகராக எந்தளவிலும் குறைவில்லாது அல்லது அவற்றைவிட அதிகமாகவே மேற்கொண்டு வந்திருக்கின்றனர். இன்றும் அவ்வாறே தொடர்கின்றனர்.

ஜேவிபி இயக்கம் அன்று போராடியதற்கு குறிப்பான சில சமூக காரணங்கள் இருந்தன. ஊதாரணமாக, பொருளாதார சுரண்டல். விலைவாதி அதிகரிப்பு. மனித உரிமைகள் மற்றும் சமூக அரசியல் கட்டமைப்புகள் என்பவை சிலவாகும்;. ஆனால் ஜேவிபி இயக்கத்தை அழித்த பின்பும் அந்த இயக்கம் தோன்றியதற்கான காரணங்களை களைவதற்கு அல்லது தீர்ப்பதற்குப் மாறாக, சிறிலங்கா அரசாங்கமானது; முன்பு இருந்ததை விட சுரண்டல் மற்றும் விலைவாசிகள் என்பவற்றை அதிகமாக்கியுள்ளது. மனித உரிமைகள் எல்லைகள் மீறி அடக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் இதற்கான போரட்டம் மட்டும் அடக்கப்பட்டுள்ளது. ஆனால் இப் பிரச்சனைகளை முன்வைத்து ஜேவிபி போன்றதொரு இயக்கம் மீண்டும் உருவாகாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

இதேபோன்று சிறிலங்கா அரசாங்கம் வடக்கு கிழக்கில் இன்று என்ன செய்து கொண்டிருக்கின்றது என்பது அனைவரதும் கவனத்திற்கு அக்கறைக்கும் உரியது என்றே உணர்கின்றேன். இன முரண்பாட்டிற்கு உடனடியான அரசியல் தீர்வு ஒன்றை முன்வைப்பதற்குப் பதிலாக பாரிய இரணுவ முகாம்களை நிறுவுகின்றது. சந்திக்கு சந்தி புத்தரின் சிலைகளை நடுகின்றது. திட்டமிட்ட குடியேற்றங்களை செயற்படுத்துகின்றது. ஆனால் தொடர்ந்தும் அரசியல் உரிமைகளை மட்டும் மறுக்கின்றது. அதாவது புலிகள் போன்ற தமிழ் இயக்கங்கள் தோன்றியதற்கான காரணங்களை களையவோ அப் பிரச்சனைகளை தீர்க்கவோ சிறிது கூட சிறிலங்கா அரசாங்கம் முயற்சிப்பதாகத் தெரியவில்லை. இவ்வாறன நிலைமை மேலும் தொடருமாயின் வெகுவிரைவில் புலிகள் போன்ற அல்லது அதைவிட வலுவான ஒரு அரசியல் அல்லது ஆயுதப் போராட்ட இயக்கம் மீண்டும் உருவாகுமாயின் ஆச்சரியமானதல்ல. ஏனனில் அதற்கான காரணிகள் இன்றும் இலங்கையில் நிலவிக் கொண்டிருக்கின்றன. ஆகவே மேலும் ஒரு போரை தவிர்க்க வேண்டுமாயின், வன்முறையற்ற சமூகத்தை உருவாக்க வேண்டுமாயின், அநியாயமாக குறிப்பாக இளம் உயிர்களை பலியிடப்படுவதிலிருந்து தவிர்க்க வேண்டுமாயின், அமைதியிலும் சமாதானத்திலும் மனித உரிமைகளிலும் அக்கறையுள்ளவர்கள் ஒன்றுபட்டு; ஆரோக்கியமான அரசியல் வழிமுறைகளில் உடனடியாக செயற்படவேண்டிய ஒரு காலகட்டம் இது.

புத்தரின் வழி பிரக்ஞையுடன் செயற்பட்டு புத்தரின் மீது இயல்பான விருப்பத்தையும் நம்பிக்கையையும் உருவாக்குவதே ஆரோக்கியமான வழிமுறையாகும். இதற்கு மாறாக சிறிலங்கா அரசாங்கம் புத்தரை அதிகாரத்துவத்தினுடாக வடக்கு கிழக்கு பகுதிகளில் சிலைகளாக நிலைநாட்டி புத்த மதத்தை ஆக்கிரமிப்புணர்வுடன் பரப்புவதை கௌதம சித்தாத்தர் என்ற புத்தர் கூட இன்று இருந்திருந்தால் உடன்படமாட்டார் என்றே நான் நம்புகின்றேன். ஏனெனில் புத்தர் சிலைகள் மூலம் அவரையே ஆக்கிரமிப்பாளராக்குவதுடன் அவரின் போதனைகளுக்கு எதிரானதாகவும் அவரை அவமதிக்கும் ஒரு செயலாகவுமே அரசாங்கத்தின் செயற்பாடுகள் இருக்கின்றன. புத்தரின் போதனைகளை மதிக்கும் பின்பற்றும் ஒவ்வொருவரும் சிறிலங்கா அரசாங்கம் இவ்வாறு செய்வதை எதிர்ப்பார்கள் அல்லது எதிர்க்கின்றனர் எதிர்க்கவேண்டும். இவ்வாறான செயற்பாடுகளை நியாயமாக சிந்திக்கும் ஒவ்வொருவரும் எதிர்ப்பார்கள் என்றே நம்புகின்றேன். அல்லது மேற்குறிப்பிட்ட செயற்பாடுகள் புத்தரின் மீது ஆர்வத்தை தூண்டுவதற்குப் பதிலாக மேலும் எதிர்ப்புணர்வை அதிகரித்து அவரை குறிப்பாக தமிழ் பேசும் மனிதர்களிடம் இருந்து அந்நியப்படுத்தவே உதவும். புத்தரின் போதனைகள் மனித வளர்ச்சிக்கு மிக முக்கியமானவை. இனிவரும் காலங்களில் அதன் முக்கியத்துவம் அதிகரிக்கும் சாத்தியங்கள் தெரிகின்றன. ஆனால் அதை மேற்குறிப்பிட்டதற்கு மாறாக புத்தரின் போதனைகளின் வழி நாம் உதாரணமாக வாழ்ந்து பிற மனிதர்கள் மீது நம்பிக்கையை உருவாக்குவோமாயின் புத்தரை அவரின் போதனைகளை மனிதர்கள் புரிந்துகொள்வர்கள். மேலும் புத்தரை ஒரு ஆக்கிரமிப்பாளராக்க (பார்க்க) வேண்டிய அவசியம் யாருக்கும் இருக்காது. மாறாக புத்தர் மீதும் அவரது போதனைகள் மீதும் இயல்பாகவே மனிதர்களுக்கு மதிப்பும் விருப்பமும் ஏற்படும்.

இன்று நாம் குறிப்பாக முற்போக்கு சிந்தனையுள்ள சிங்கள மொழி பேசும் மனிதர்கள் செய்ய வேண்டியது என்னவெனில் இன அடக்குமுறை செயற்பாடுகளுக்கு எதிராகவும் ஒரு நியாயமான அரசியல் தீர்வை இலங்கை அரசாங்கம் முன்வைப்பதற்கும் தேவையான அரசியல் அழுத்தத்தை அக்கறையுள்ளவர்கள் கொடுக்கவேண்டும். உதராணமாக இடம் பெயர்ந்த தமிழ் பேசும் மனிதர்களை உடனடியாக மீளக் குடியமர்த்தல். அகதி முகாம்களை மூடுதல். ஆரசியல் கைதிகளை விடுதலை செய்தல். இராணுவ முகாம்களை தமிழ் பிரதேசங்களிலிருந்து அகற்றுதல். இன் முரண்பாட்டிற்கான அரசியல் தீர்வை உடனடியாக முன்வைக்க நிர்ப்பந்தித்தல். இவ்வாறன விடயங்களே உடனடியாக முக்கியத்தும் கொடுத்து முன்னெடுக்கப்பட வேண்டியவை. மேலும் சிங்களம் பேசும் மனிதர்களிடம் மேலும் பிரக்ஞையை வளர்ப்பதன் மூலம் அவர்கள் எவ்வாறு சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு அடிமையாகவும் தமிழ் பேசும் மனிதர்களை எதிரிகளாகவும் நடாத்துகின்றனர் என்பதையும் குறிப்பாக புத்தரின் போதனைகளுக்கு எதிராகவே அவர்களது வாழ்க்கை குறிப்பாக அரசியல் சிந்தனைகளும் செயற்பாடுகளும் இருக்கின்றது என்பதை புரியவைத்து உணர்த்துவது ஒவ்வொருவரதும் இன்றியமையாத பொறுப்பாகின்றது. கடந்த காலங்களில் இடதுசாரிகள் தவறிழைந்தது போல் அல்லாது இன்றைய சிங்கள முற்போக்கு சிந்தனையாளர்கள் இதில் மிகவும் கவனம் எடுத்து தீர்க்க தரிசனத்துடனும் உறுதியாகவும் செயற்படவேண்டிய காலம் இது. அதை அவர்கள் செய்வார்களா? இன்று இவ்வாறு செய்யத் தவறுவோமாயின்…

ஆட்சியாளர்களோ அடக்குமுறையாளர்களோ தொடர்ந்தும் வெல்வதுமில்லை….
அடக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் தோற்பதும் இல்லை….
என்ற உண்மை ஒரு நாள் உணரப்படலாம்.

ஆனால் முன்னெடுக்கப்படும் போராட்டம் எந்தளவு பிரக்ஞையுடன் வன்முறையில்லாது ஆரோக்கியமா முன்னெடுக்கப்படுகின்றது என்பதில் தான் அதன் உண்மையான வெற்றி தங்கியுள்ளது.

நட்புடன்
மீராபராதி

சிங்கள மொழி தெரிந்த தமிழ் பேசும் நண்பர்களே! மேற்குறிப்பிட்ட கட்டுரை சிங்கள மொழி பேசும் மனிதர்கள் வாசிக்கவேண்டியது என நீங்கள் உணர்ந்தால் மொழிபெயர்ப்பு செய்யவும்…. நட்புடன் நன்றிகள்.

சிங்களம் பேசும் மனிதர்களுக்கு ஒரு கடிதம்…..நட்புடன் சிங்களம் பேசும் நண்பர்களுக்கும் மற்றும் சக மனிதர்களுக்கு
http://meerabharathy.wordpress.com

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 Comments

 • nantha
  nantha

  புத்தரின் சிலைகள் பற்றி பேசியுள்ள கட்டுரையாளர் புலிகளின் ஆட்சியில் வன்னியில் எத்தனை கத்தோலிக்க கோவில்கள் கட்டப்பட்டன என்பதானும் அறிந்து சொன்னால் நல்லது. வன்னியில் பல லட்சங்கள் செலவில் ஒரு சில கத்தோலிக்கர்கள் வாழும் கிராமங்களில் கத்தோலிக்க கோவில்கள் கட்டியதை இந்துக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் ஆனால் இந்துக்கள் போதி மாதவன் என்று நம்பும் புத்தரின் சிலைகள் மீது இத்தனை கடுப்பு காட்ட வேண்டிய நியாயம் என்னவோ?

  தமிழர்களின் வாழ்வு கலாச்சாரம் என்பவற்றோடு எதுவித சம்பந்தமும் இல்லாத “கிறிஸ்தவம்” பற்றி மவுனம் சாதிக்கும் கட்டுரையாளர் புத்தரின் சிலைகள் பற்றி துள்ளிக் குதிக்கத் தேவையில்லை!

  வன்னியில் மக்கள் பட்டினி என்று புலிகளும் பாதிரிகளும் சொல்லிக் கொண்டு லட்சக் கணக்கில் செலவு செய்து உருத்திரபுரம் போன்ற கிராமங்களில் எப்படி கத்தோலிக்கக் கோவில்கள் கட்ட முடிந்தது என்று சொல்லுவாரா?

  தமிழ் என்ற போர்வையில் கிறிஸ்தவ ஆக்கிரமிப்பு நடத்தினால் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கட்டுரையாளர் எதிர்பார்க்கிறாரா?

  Reply
 • meerabharathy
  meerabharathy

  நட்புடன் நந்தாவிற்கு….
  தங்கள் குறிப்புக்கு நன்றிகள்…
  முதலில் நான் எந்த ஒரு சமய நிறுவனத்தையும் சார்ந்தவனல்ல….
  இந்த நிறுவனங்களில் எனக்கு நம்பிக்கையும் இல்லை..
  அனைத்து மத நிறுவனங்களும் மனிதர்களின் பயம் மற்றும் மூட நம்பிக்கைகளையே மூலதனமாக கொண்டு செயற்படுகின்றன…
  அடிப்படையில் இவை வியாபார நிறுவனங்களே…
  எந்த ஒரு நிறுவனமும் ஒரு மனிதரது பிரக்ஞையை வளர்ப்பதற்கோ…
  அம் மனிதரது வளர்ச்சிக்கோ மாற்றத்திற்போ வழிகாட்டுபவையாக இல்லை…

  மேலும் இன்று மனிதர்கள் பின்பற்றும் ஒவ்வொரு மதமும்.. வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டங்களில்… ஆதிக்க சக்திகளாலால் இந்த மனிதர்கள் மீது திணிக்கப்பட்டவையே….
  தமிழ் பேசும் மனிதர்களைப் பொறுத்தவரை… கிரிஸ்தவம் இஸ்லாமிய மதம் மட்டுமல்ல இந்து மதமும் இம் மனிதர்கள் மீது திணிக்கப்பட்ட மதமே….ஆகவே இம் மதங்களின் ஆதிக்கத்திலிருந்தும் மனிதர்கள் விடுதலையடைய வேண்டிய தேவையுள்ளது….

  புலிகளின் ஆதிக்கத்தின் கீழ் வன்னியில் கிரிஸ்தவக் கோயில்கள் கட்டப்பட்டனவா என்பதை நான் அறியேன்…. மற்றும் புலிகளுக்கும் இந்தக் கோயில்களுக்குமான தொடர்பு என்ன என்பதையும் நான் அறியேன்… தாங்கள் இது தொடர்பாக ஒரு கட்டுரையை எழுதலாமே…

  மேற்குறிப்பிட்ட கட்டுரையை நான் எழுதியதற்கு காரணம்…. இன்றைய அரசியல் சுழலே… மனிதர்கள் சுயமாக மதங்களைப் பின்பற்றவேண்டும்….
  ஆனால் சிறுவயதிலையே மனிதர்கள் காயடிக்கப்படுகின்றார்கள்… இப்படிக் காயடிக்கப்பட்டவர்கள் தான் எதிர்காலத்தில்.மததத்தின் பெயரால் மதம பிடித்தலைகின்றனர்….

  நான் புத்தரின் போதனைகளை மதிப்பவர்… அவை வெறும் போதனைகள் அல்ல…. ஒவ்வொரு மனிதரும் தாமே பரிசோதனை செய்து பார்க்கக் கூடிய… விஞ்ஞான ரீதியான அணுகுமுறையைக் கொண்டது.. இப் பரிசோதனைகள் மூலம் அதன் பலன்களை அறிந்துகொண்டு…
  எங்கள் வாழ்க்கையில் நாம் அதைப் பயன்படுத்தலாம்…

  அதேவேளை நான் புத்தரை மதிப்பவர் என்பதற்காக .. ஆட்சியாளர்களால் ஒரு பிரசேதம் திட்டமிட்ட அடிப்படையில்…அதிகாரத்தின் மூலம்
  பெளத்த பிரதேசம் ஆக்கப்படுவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாதல்லவா? ஆகவே தான் எனது கருத்தை முன்வைத்தேன்…..
  மற்றும்படி தமிழ் பேசும் மனிதர்கள் புத்தர் போதனைகளைப் புரிந்துகொண்டு தம் வாழ்வில் பயன்படுத்துவார்கள் எனின் அதற்காக மகிழும் முதல் மனிதர் நானாகயிருப்பேன்…
  எது எப்படியோ
  புத்தரின் சிந்தனைகள் இனிவரும் காலத்தில்…மனித வாழ்வில் இருந்து ஒதுக்க முடியாததாக இருக்கும் என்றே நம்புகின்றேன்…
  நன்றி
  மீராபாரதி

  Reply
 • PALLI
  PALLI

  //அனைத்து மத நிறுவனங்களும் மனிதர்களின் பயம் மற்றும் மூட நம்பிக்கைகளையே மூலதனமாக கொண்டு செயற்படுகின்றன…
  அடிப்படையில் இவை வியாபார நிறுவனங்களே…
  எந்த ஒரு நிறுவனமும் ஒரு மனிதரது பிரக்ஞையை வளர்ப்பதற்கோ…
  அம் மனிதரது வளர்ச்சிக்கோ மாற்றத்திற்போ வழிகாட்டுபவையாக இல்லை…

  மேலும் இன்று மனிதர்கள் பின்பற்றும் ஒவ்வொரு மதமும்.. வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டங்களில்… ஆதிக்க சக்திகளாலால் இந்த மனிதர்கள் மீது திணிக்கப்பட்டவையே….
  தமிழ் பேசும் மனிதர்களைப் பொறுத்தவரை… கிரிஸ்தவம் இஸ்லாமிய மதம் மட்டுமல்ல இந்து மதமும் இம் மனிதர்கள் மீது திணிக்கப்பட்ட மதமே….ஆகவே இம் மதங்களின் ஆதிக்கத்திலிருந்தும் மனிதர்கள் விடுதலையடைய வேண்டிய தேவையுள்ளது//

  மீரா இதுதான் உன்மை, யதார்த்தம் அதை புரியாதவரை முரன்பாடுகள் ஏதோ ஒரு வழியில் வந்துகொண்டே இருக்கும்; இந்த கருத்தில் பல்லி முழுமையாக உடன்படுகிறேன்,
  நட்புடன் பல்லி;

  Reply
 • nantha
  nantha

  புத்தரின் சிலைகள் சந்ததிக்குச் சந்தி வைக்கபடுவது தெரிந்துள்ள உங்களுக்கு வன்னி முழுவதும் கிறிஸ்தவ கோவில்கள் கடந்த முப்பது ஆண்டுகளில் எப்படி வந்தன என்பது தெரியாமல் இருப்பது கவலைக்குரிய விடயமே! பாதிரிகள் புலிகளுடன் பங்காளிகளாகி “தமிழ் ” மொழிக்கு சேவை செய்யப் புறப்பட்டார்களா அல்லது வத்திக்கன்/இங்கிலாந்து ஆகியவற்றின் கட்டளையை ஏற்று முதலில் தமிழர்களை மதமாற்றம் செய்து வெள்ளைகளின் “விசுவாசிகள்” ஆக்க புறப்பட்டர்களா என்பதை சிந்திப்பது நல்லது.

  மதங்கள் மூலம் அரசியல் நடப்பது யாவரும் அறிந்த விஷயம். இலங்கையைப் பொறுத்த அளவில் பெரும்பான்மை இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும் மத ரீதியான சண்டைகள் கிடையாது. இரு பக்கத்திலும் இருக்கும் கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவ ஆட்சிக் காலத்திலிருந்து பௌத்தர்களும் , இந்துக்களும் ஒன்று சேர்வது தங்களுக்கு அவலம் என்பதை அறிந்து கிறிஸ்தவ ஆட்சியாளர்களின் உதவிகளுடனும், சலுகைகளுடனும் பல விஷ வித்துக்களை இருபக்கமும் விதைததுள்ளனர். அவை இன்று மரமாகி இரு சாராருக்கும் அழிவையே கொடுக்கின்றன.

  எனவே இந்துக்களும், பௌத்தர்களும் இந்த கிறிஸ்தவர்களைக் கண்டு கொள்ளாமல் விட்டு சௌஜன்யத்துடன் நடக்க என்ன செய்ய வேண்டும் என்பது முக்கியமான காரியமாகத் தெரிகிறது!

  Reply
 • BC
  BC

  கட்டுரையாளரின் பின்னோட்டம் உண்மையை கூறுவதாக உள்ளது.

  Reply
 • அ. பிரதாபன்
  அ. பிரதாபன்

  //மதங்கள் மூலம் அரசியல் நடப்பது யாவரும் அறிந்த விஷயம். இலங்கையைப் பொறுத்த அளவில் பெரும்பான்மை இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும் மத ரீதியான சண்டைகள் கிடையாது. இரு பக்கத்திலும் இருக்கும் கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவ ஆட்சிக் காலத்திலிருந்து பௌத்தர்களும் , இந்துக்களும் ஒன்று சேர்வது தங்களுக்கு அவலம் என்பதை அறிந்து கிறிஸ்தவ ஆட்சியாளர்களின் உதவிகளுடனும், சலுகைகளுடனும் பல விஷ வித்துக்களை இருபக்கமும் விதைததுள்ளனர். அவை இன்று மரமாகி இரு சாராருக்கும் அழிவையே கொடுக்கின்றன.//

  The above statement should be investigated further…

  Reply
 • Loven
  Loven

  You all try to put the blame on everything except our stupidity. Christians, Indians, Chinese, West………… everyone’s fault except the Stupidity of Singhalese and Tamils.

  Reply
 • cheap siththanantha
  cheap siththanantha

  Loven on August 13, 2010 10:25 am

  Loven you sre absolutely right.

  I am happy atleast one person has understood the dynamics of Sri Lankan stupidity on both side of the divide.

  Theethum Nantrum Pirar Thara Vara.

  Reply