எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை இனிமேல் அரசாங்கத்தில் இணைப்பதில்லை என்ற வாக்குறுதியை மீறி பிரபாகணேசன், திகாம்பரம் ஆகிய இருவரையும் நேற்று ஜனாதிபதி மகிந்தராஜபக்ச தமது அரசாங்கத்தில் இணைத்துக் கொண்டதால் ஐக்கிய தேசியக் கட்சியினர் சீற்றமடைந்துள்ளனர். ( ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து போட்டியிட்ட பிரபா கணேசன், திகாம்பரம் ஆகியோர் ஆளும் கட்சியில் இணைந்தனர்!!! )
தமது கட்சிக்கும் அரசாங்கத்திற்குமிடையில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இனிமேல் நடைபெற மாட்டாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் காமினி ஜயவிக்கிரம பெரேரா நேற்று நடாளுமன்றில் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் அரசமைப்புத் திருத்தம் தொடர்பான சநதிப்புகள் நடைபெற்று வந்தன. இதன் ஒரு கட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்தில் சேர்த்துக்கொள்வது தொடர்பாக உரையாடிய போது இனிமேல் அவ்வாறு நடைபெறாது என ஜனாதிபதி வாக்குறுதி அளித்திருந்தார். இந்த வாக்குறுதியை மீறி நேற்று ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களான இருவரை ஜனாதிபதி அரசாங்கத்தில் சேர்த்துக் கொண்டுள்ளார். இதன் காரணமாக இனிமேல் அரசாங்கத்துடன் எவ்விதப் பேச்சுக்களும் நடைபெற மாட்டாது என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
நடாளுமன்றத்திற்குப் பொறுப்புக் கூறும் வகையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் பதவியை உருவாக்கவது, 17வது திருத்தச்சட்டம், தேர்தல் முறையை மாற்றுதல் என்பவை தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அரசாங்கத்திற்குமிடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. இதில் பல விடயங்களில் தமது ஆதரவை அரசிற்கு வழங்குவதாக ஐக்கிய தேசியக் கட்சியும் தெரிவித்திருந்தது. இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதிக்கும் எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்றும் இடம்பெறவிருந்தது இச்சந்திப்பும் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு இன்னும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களே தேவைப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.