இனியொரு முள்ளிவாய்க்கால் செய்திடோம் என்று சங்கே முழங்கு!!! : த ஜெயபாலன்

May18_2009_Rememberanceவன்னி யுத்தம் முற்றுப் பெற்று ஓராண்டுகள் நினைவு கூரப்படுகின்றது. சுதந்திர இலங்கையில் காலம் காலமாக தமிழ் அரசியல் தலைமைகளின் அரசியல் சாணக்கியம் என்பது நினைவு கூரலிற்கு அப்பால் ஓரடியும் எடுத்து வைக்கவில்லை. இதற்கு தமிழ் மிதவாதத் தலைமைகளோ தீவிரவாதத் தலைமைகளோ விதிவிலக்கல்ல. வன்னி யுத்தத்தைத் தடுப்பதற்கான அரசியல் வழிமுறைகள் இருந்த போதும் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதித்துவத் தலைமையும் அது தெரிவு செய்திருந்த ஒருவழி அரசியல்பாதையும் தமிழ் மக்களை பணயம் வைத்து தன்னுடன் மக்களையும் உடன்கட்டையேறச் செய்துள்ளது. ஆதன் ஓராண்டை சம்பிரதாயபூர்வமாக தமிழ் தேசியத் தலைமை தனது அரசியல் உயிர்ப்பிற்கு கையிலெடுத்துள்ளது.

சுதந்திர இலங்கையில் பல்வேறுபட்ட சமூக முரண்பாடுகள் இருந்த போதும் பிரதான முரண்பாடாக இருப்பது ஒடுக்குகின்ற ஆளும் குழுமத்திற்கும் ஒடுக்கப்படுகின்ற மக்களுக்கும் இடையிலான முரண்பாடு. இந்த முரண்பாட்டில் குறிப்பாக ஒடுக்கப்படுகின்ற தமிழ் சமூகத்திற்கும் ஒடுக்குகின்ற ஆளும் குழுமத்திற்கும் இடையிலான முரண்பாடு தமிழ் மக்கள் மத்தியில் பிரதான முரண்பாடாக இருந்து வந்துள்ளது. ஒடுக்குகின்ற குழுமம் அல்லது ஒடுக்குகின்ற அரசு தானாக முன்வந்து ஒடுக்குமுறையைக் கைவிடப் போவதில்லை. அது தொடர்ந்தும் ஒடுக்குமுறையை தக்க வைத்துக் கொள்வதற்கான வழிவகைகளை தொடர்ச்சியாகத் தேடிக்கொண்டே இருக்கும். ஆந்த ஒடுக்குமுறைக்கு எதிராக தலைமை தாங்குவதாகக் கூறிக்கொள்கின்ற சக்திகளுக்கே ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றிய பொறுப்பு உண்டு. அம்மக்கள் மேலும் ஒடுக்குமுறைக்கு உள்ளாவதை தடுத்து அல்லது மட்டுப்படுத்தி அம்மக்களின் உரிமைகளை வென்றெடுப்பது ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு தலைமை தாங்குபவர்களின் பொறுப்பு.
  
ஆனால் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கிய தமிழ்த் தேசியவாதத் தலைமைகளின் அரசியல் என்பது தமிழ் மக்களின் வாழ்வியலை மிகமோசமாகப் பின்னடையச் செய்துள்ளது. கடந்தகால வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டி 2009, 1983, 1977, 1956 என்று சிங்கள பேரினவாதத்தின் ஒடுக்குமுறையைக் காட்டி அரசியல் செய்கின்ற போக்கே தொடர்கின்றது. இந்தக் காலகட்டத்திற்கு இன்னும் சற்றுப் பின் சென்று பிரித்தானிய காலனித்துவம் தான் இவையெல்லாவற்றுக்கும் காரணம் என்று பழிபோடுவதும் இவர்கள் கையாள்கின்ற மற்றுமொரு யுக்தி. சுpங்கள பேரினவாதம், காலனித்துவம் பூச்சாண்டிகளெல்லாம் தமிழ் மக்களுக்குத் தெரியாததல்ல. இதனை ஆண்டாண்டு காலம் சொல்லிக் கொண்டு இருப்பதற்கு தமிழ் மக்களுக்கு அரசியல் தலைமை அவசியமில்லை. இந்தச் சூழலில் உங்களால் தமிழ் மக்கள் மீது நடத்தப்படுகின்ற ஒடுக்குமுறையை நிறுத்தவோ மட்டுப்படுத்தவோ முடியுமா? துமிழ் மக்களது உரிமைகளை வென்றெடுக்க முடியுமா? அதனைச் செய்ய முடியாத தலைமைகள் அப்பொறுப்பில் இருந்து தங்களை வெளியேறுவதே அழகு.

ஆனால் இதுவரை அவ்வாறு நிகழவில்லை. மீண்டும் மீண்டும் தமிழ் மக்களில் சவாரி செய்த தமிழ் தலைமைகள் சவாரி செய்வதில் ருசி கண்டனவேயன்றி இலக்கு நோக்கி நகரவில்லை. மாறாக அதற்கு எதிராகவே நகர்ந்துள்ளன. ஒடுக்கப்படுகின்ற தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கிய மிதவாதத் தீவிரவாதத் தமிழ் தேசியவாதத் தலைமைகளால் கடந்த அறுபது ஆண்டுகளில் தமிழ் மக்களுக்கு எதனையும் சாதிக்க முடியவில்லை என்ற உண்மையை ஏற்றுக் கொண்டு அதற்கான காரணத்தை கண்டறிய வேண்டிய அவசரமும் அவசியமும் தற்போது ஏற்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளை வெற்றிகொள்ள எவ்வாறு முடிந்தது என்ற இந்திய ஊடகவியலாளரின் கேள்விக்குப் பதிலளித்த பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ‘கடந்த 30 ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவத்தால் வெற்றிகொள்ள முடியவில்லை என்பதை ஏற்றுக் கொண்டு அதற்கான காரணங்களைக் கண்டு பிடித்து சரி செய்தோம்;. ஆட்சிக்கு வந்த 5 ஆண்டுகளிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழித்தோம்.’ என்று தெரிவித்திருந்தார்.

ஒடுக்குமுறை மேற்கொள்கின்ற அரசிடம் தனது இலக்குநோக்கி இருந்த விவேகமும் தூரநோக்கும் அதனிடமிருந்து விடுதலை பெறுவதற்காகப் போராடுவதாகக் கூறிக்கொண்டு தங்களை ஏகபிரதிநிதிகளாகக் அறிவித்த தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருக்கவில்லை. அதனாலேயே அரச இயந்திரம் ‘புரஜக்ற் பீக்கன்’ என்று கால அட்டவணை போட்டு தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க முடிந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் எதிரியின் பலத்தையும் பலவீனத்தையும் மட்டும் அறியாமல் இருக்கவில்லை தங்களுடைய பலத்தையும் பலவீனத்தையுமே அறியாமல் இருந்துள்ளனர்.

மூன்று தசாப்த கால விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் அனைத்துப் போராளிக் குழுக்களையும் மிதவாதத் தமிழ் அரசியல் தலைமைகைளயும் அழித்து தங்களை ஏக பிரதிநிதிகள் என்று அறிவித்தனர். மே 16 2009 வரை அவர்கள் ‘தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இறுதி யுத்தம்’ என்றும் ஒவ்வொரு நிலப்பரப்பையும் இழக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் போதும் வகை தொகையின்றி மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டு இருக்கும் போதும் ‘தமிழீழத்தை நெருங்கிவிட்டோம் என்றும் அறிவித்தனர். ‘தலைவர் திட்டமிட்டபடியே பின்வாங்குகிறோம். உள்ளுக்கு விட்டு அடிப்போம்.’ ஏன்று அரசியல் இராணுவ ஆய்வுகள் களைகட்டின. 30 ஆண்டுகால போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் மே 17 2009ல் இரவோடு இரவாக வரலாறாகிப் போனார்கள். வுரலாற்றை கற்றுக்கொள்ள மறுத்தவர்கள் தங்கள் உச்சவிலையை அதற்குச் செலுத்தினர். இவர்களால் அப்பாவி மக்களும் தங்கள் உச்சவிலையைச் செலுத்த வேண்டி ஏற்பட்டது.

ஆனால் இந்த மிக மோசமான நிலையிலும் மிதவாத தீவிரவாத தமிழ் தேசியத் தலைமைகள் தாங்கள் கடந்து வந்த பாதையை இதுவரை மீளாய்வு செய்யவில்லை. தமிழ் தேசியவாதத்தை புலம்பெயர்ந்த மண்ணில் உசுப்பி விட்டுக் கொண்டிருந்தவர்கள் தங்கள் கரங்களில் உள்ள இரத்தக் கறையைக் கண்டுகொள்ள மறுக்கின்றனர். உண்மையை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் ஒரு சமூகத்தைத் தலைமை தாங்குவதற்கான அடிப்படைத் தகுதியை இழக்கின்றனர். இத்தலைமைகள் கடந்த காலத் தவறுகளை ஏற்க மறுப்பது அதே தவறுகளை அவர்கள் மீண்டும் விடுவதற்கே வழிகோலும். தமிழ் மக்களுக்காக தமிழ் தலைமைகளால் எதனையும் சாதிக்க முடியாமல் போனதற்கான முழுமுதற் காரணம் அவர்களுடைய கட்சிசார்ந்த அல்லது தனிப்பட்ட சந்தர்ப்பவாத அரசியல் நிலைப்பாடுகளே. தங்களுடைய அரசியல் பற்றிய மதிப்பீட்டை அவர்கள் என்றும் மேற்கொண்டதில்லை. எதிரியின் மீது பழியைப் போட்டுவிட்டு எதிரியின் பலவீனத்தில் அரசியல் செய்கின்ற தலைமைத்துவமே இதுவரை இருந்துள்ளது. இன்றும் இருக்கின்றது.

இன்று புலம்பெயர் நாடுகளில் உள்ள முதலாளித்துவக் கட்சிகளே தேர்தலில் மக்கள் தங்கள் கட்சிக்கு வாக்களிக்கத் தவறும்பட்சத்தில் தாங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதை ஏற்று கட்சிப் பதவியில் இருந்து வெளியேறி புதிய தலைமைக்கு வழிவிடுகின்றார்கள். ஆனால் தமிழ் மக்களின் விடுதலையை முன்னெடுத்த மிதவாதத் தலைமையாக இருந்தாலென்ன, தீவிரவாதத் தலைமையாக இருந்தாலென்ன எப்போதும் மக்கள் அபிப்பிராயம் பற்றி கணக்கிலெடுத்ததில்லை.

எஸ் ஜே வி செல்வநாயகம் நோய்வாய்ப்படும் வரை அவரே தமிழரசுக் கட்சித் தலைவர் தலைவர், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் சுட்டுக் கொல்லப்படும் வரை அவரே தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர்நாயகம், தமிழீழ விடுதலைப் புலிகளால் அல்லது வேறுவழிகளில் கொல்லப்படும்வரை ஒரே தலைமையே அந்தந்த இயக்கங்களை வழிநடத்தியது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டு ஓராண்டு ஆகியும் கொல்லப்பட்டாரா இல்லையா என்ற விவாதம் தொடர்கிறது. அதற்கு இன்னமும் தலைமை இல்லை.

வன்னியில் மக்கள் தினம்தினம் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கையில் ஆட்சியாளர்களுடன் பேச மறுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் தற்போது அதே அரசுடன் பேசத் தயார் என்கிறார். இதையே அன்று அந்த அரசுடனும் பேசி தமிழீழ விடுதலைப் புலிகளுடனும் பேசி பணயமாக தடுத்து வைக்கப்பட்டு இருந்த ஆயிரக் கணக்கான வன்னி மக்களை பாதுகாப்பாக வெளியேற அனுமதித்து இருந்தால் இன்று எத்தனை ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும். ‘யுத்தத்தின் ஆரம்பத்திலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பால் புலிகளைப் பேச்சுவார்த்தைக்கு நிர்பந்தித்து இருக்க முடியும்’  என எம் கே சிவாஜிலிங்கம் 2009 பெப்ரவரியில் தேசம்நெற்க்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்து இருந்தார். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதனைச் செய்யவில்லை. இன்று சகல பழியையும் தமிழீழ விடுதலைப் புலிகளிலும் இலங்கை அரசின் மீதும் போட்டுவிட்டு தமிழ் மக்களின் அரசியல் தலைமையை ஆர் சம்பந்தன் தக்க வைத்துள்ளார். வன்னி மக்களின் இவ்வளவு அழிவிலும் ஆர் சம்பந்தனுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் பொறுப்பு உள்ளது. இந்த மக்களுக்கு ஏற்பட்ட இழப்பை தடுத்து நிறுத்தவோ மட்டுப்படுத்தவோ முடியாத இயலாமைக்காக ஆர் சம்பந்தன் தனது தலைமையைத் துறந்திருக்க வேண்டும்.

அதேபோல் தமிழ் மக்களால் தேர்தல் மூலம் நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வி ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈபிஆர்எல்எப் தலைவர் சிறிதரன் போன்றவர்கள் தங்கள் தலைமையை தொடர்ந்தும் வைத்திருப்பது மக்களுடைய தீர்மானத்திற்கு எதிரானது. இவர்கள் தங்கள் தலைமைகளைத் துறப்பதுடன் இவ்வமைப்புகள் தங்கள் அரசியல் பற்றி தீர்க்கமான முடிவுகளுக்கு வரவேண்டும். அவசியமானால் கூட்டிணைவை ஏற்படுத்துவது அமைப்பினைக் கலைத்துவிடுவது பற்றி இவர்கள் சிந்திப்பது அவசியம்.

தமிழ் மக்களின் தலைமைத்துவம் என்பது யாருக்கும் ஆயுட்காலப் பதவியல்ல. குறிப்பிட்ட காலத்தில் இத்தலைமைகளால் தமிழ் மக்களுக்கு எதனையும் சாதிக்க முடியாது போயுள்ள நிலையில் இவர்கள் தங்கள் தலைமைப் பொறுப்புக்களில் இருந்து ஒதுங்குவதே மேல். தென்னாபிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலா அம்மக்களின் விடுதலையை வென்றெடுத்து அம்மக்களால் நேசிக்கப்பட்ட போதும் தொடர்ந்தும் அந்தத் தலைமையை உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொள்ளவில்லை. தமிழ் சமூகம் அவ்வாறான தலைவர்களை உருவாக்காது போனது அல்லது அவ்வாறானவர்கள் கொல்லப்பட்டமை மிகவும் துரதிஸ்டமானது.

பொதுவாகவே இந்தத் தலைமையை தக்க வைத்துள்ளவர்கள் அமைப்பில் கட்சியில் உள்ளவர்கள் வற்புறுத்துகின்றார்கள், தலைமையை ஏற்பதற்கு ஆளில்லை போன்ற நொண்டிச்சாட்டுக்களையே தெரிவிப்பது வழமை. நீங்கள் தலைமையை உடும்புப் பிடியாகப் பிடித்து இருந்தால் ஒருவர் எப்படி தலைமை ஏற்க முன்வருவார். இத்தலைமைகளுடைய இவ்வளவு கால அனுபவமும் சாணக்கியமும் தமிழ் மக்களுக்கு எதையும் சாதிக்கவில்லை. ஆனால் தமிழ் மக்களுக்கு தங்கள் ஆயுட்காலம் முழுவதும் தலைமை தாங்குவதற்கு மட்டுமே அவை பயன்படுகின்றது.

இனியொரு முள்ளிவாய்க்கால் நோக்கி நாம் செல்லாது இருக்க வேண்டுமானால் தமிழ் மக்களினால் இதுவரை காலமும் எதனையும் சாதிக்க முடியாது போன காரணங்களை ஆராய்ந்து கண்டறிய வேண்டும். தமிழ் சமூகத்தின் அரசியல் பலத்தையும் பலவீனத்தையும் ஆராய வேண்டும். கடந்த ஆண்டு முள்ளிவாய்க்காலுக்கு வன்னி மக்களை அழைத்துச் சென்ற தமிழ் அரசியல் தலைமைகள் அவர்கள் தயாகத்தில் இருந்தாலென்ன புலம்பெயர் நாடுகளில் இருந்தாலென்ன அதற்கான பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டு தங்கள் தலைமைகளில் இருந்து வெளியேற வேண்டும். அல்லது வெளியேற்றப்பட வேண்டும். அதன் பின்னர் தமிழ் சமூகத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான புதிய திட்டமிடலை புதிய தலைமையொன்று முன்னெடுக்க வேண்டும். ஒரே குட்டையில் கூறிய மட்டைகள் தலைமைத்துவத்தை தங்கள் ஆயுள் வரைக்கும் தக்கவைப்பதற்கும் பழைய புதிய பிளாவில் பழைய கள்ளு அருந்தும் அரசியலுக்கும் முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும். இவற்றின் மூலமே இனியொரு முள்ளிவாய்க்கால் நோக்கி தமிழ் மக்கள் நகர்த்தப்படுவதை தடுக்க முடியும்.

இனியொரு முள்ளிவாய்க்கால் செய்திடோம் என்று சங்கே முழங்கு!!!

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 Comments

 • பல்லி
  பல்லி

  //தமிழீழ விடுதலைப் புலிகளை வெற்றிகொள்ள எவ்வாறு முடிந்தது என்ற இந்திய ஊடகவியலாளரின் கேள்விக்குப் பதிலளித்த பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ‘கடந்த 30 ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவத்தால் வெற்றிகொள்ள முடியவில்லை என்பதை ஏற்றுக் கொண்டு அதற்கான காரணங்களைக் கண்டு பிடித்து சரி செய்தோம்;.//

  ஆனால் உன்மை அதுவல்ல; அரசு எதிரியை நண்பனாக்கியது; புலி நண்பனை எதிரியாக்கியது, இது இரண்டுமே அரசுக்கு வெற்றி வாய்ப்பையும்
  புலியை அழிவுபாதையிலும் கூட்டி சென்றன;

  Reply
 • Jeyabalan T
  Jeyabalan T

  கோத்தபாய கண்டுகொண்ட காரணங்களில் நீங்கள் குறிப்பிட்ட எதிரியை நண்பனாக்கியது. கோத்தபாய தனது நேர்காணலில் இந்தியாவை எப்போதும் தங்கள் பக்கம் வைத்திருக்க என்னென்ன விடயங்களைச் செய்தோம் என்று தெளிவாகவே குறிப்பிட்டு உள்ளார். மேலும் 1987ல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பிரேசன் லிபரேசனுக்கு இந்தியா ஒப்பிரேசன் பூமாலையை மேற்கொண்டது போன்ற ஒரு நடவடிக்கையை புரஜக்ற் பீக்கனுக்கு பதிலாக இந்தியா ஒரு புரஜக்ற் போட்டுவிடாதபடி இலங்கை அரசைப் பார்த்துக் கொண்டது.

  http://www.dailymirror.lk/print/index.php/news/news/8982.html
  Nine decisions helped Lanka beat LTTE: Gotabhaya

  Reply
 • ram
  ram

  Exclusive: a senior Sri Lankan army commander and frontline soldier tell Channel 4 News that point-blank executions of Tamils at the end of the Sri Lankan civil war were carried out under orders.
  http://www.channel4.com/news/articles/politics/international_politics/sri+lanka+option/3652687

  Reply
 • Ajith
  Ajith

  another article to convince Rajapakse.

  Reply
 • விசுவன்!
  விசுவன்!

  கட்டாய வாசிப்புக்கு ஒரு மறு பிரசுரம்!

  வன்னி மக்களை புலி சுமந்த நாட்கள் – போர் குற்றவியல் நாள்.

  மூன்று நகரங்களின் வெற்றிகளாலும், ஒரு நகரின் தோல்வியாலும் உருவாக்கப்பட்ட மிக முக்கியமான கோட்டையே வன்னி. வன்னியென்று சாதாரணமாகச் சொல்லிவிட முடியாது. தமிழர்களின் இத்தனை வரலாற்றுக் காலங்களில் மிக முக்கியமான படையெடுப்புக்களைக் கண்டும், மண்டியிடாப் பூமி என அழைக்கப்பட்டிருந்தது. அதுவும் வரலாற்றில் இரண்டுமுறை வீழ்ச்சியுற்றது. ஒன்று, பண்டார வன்னியன் தோற்கடிக்கப்பட்டது. இரண்டாவது, பிரபாகரன் தோற்கடிக்கப்பட்டது. இரண்டு வீழ்ச்சிகளுமே தமிழ் மக்களின் வீழ்ச்சியாகக் கொள்ளப்பட வேண்டியதாகிப் போயிற்று.

  யாழ்ப்பாணம் அரசப் படைகளிடம் வீழ்ச்சியுற்றதும், விடுதலைப்புலிகள் தமது நிர்வாக நாடாக வன்னியையே பேணிவந்தனர். ஏறத்தாழ பதின்மூன்று வருடங்கள் தமிழீழப் போராட்ட வரலாற்றில் வன்னியே விடுதலைப்புலிகளின் தனி நாடாகியிருந்தது. வன்னியில் மிக முக்கியமான இராணுவ முகாம்கள் மாங்குளம், ஆனையிறவு, முல்லைத்தீவு, ஆகிய நகரங்களில் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றினை விடுதலைப்புலிகள் முற்றாகத் தகர்த்ததானது விடுதலைப்புலிகளின் வீரதீரங்களை உலக நாடுகள் பிரமிக்கும் அளவுக்குக் கொண்டு சென்றுவிட்டது. இந்நகரங்களின் வெற்றியின் பின்னர்தான் வன்னி விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் முற்றாக வந்திருந்ததாகக் கொள்ளப்பட்டது. வன்னியிலிருந்துதான் அரசுக்குரிய மிகமுக்கியமான கட்டமைப்புக்களையெல்லாம் உருவாக்கி ஒரு குட்டியரசாங்கத்தை நடத்தினார்கள், அங்கிருந்துதான் சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் போனார்கள்.அங்கிருந்துதான் ஏனைய மாவட்டங்களுக்கான நிழல் நிர்வாகங்களை நடத்தினார்கள். அங்கிருந்துதான் யுத்தங்களுக்குத் தயாராகினார்கள். அங்கிருந்துதான் யுத்த உபகரணங்களைத் தயாரிக்கக் கற்றுக்கொண்டார்கள். இது அவர்களின் தனி முயற்சியால் மட்டும் உருவானதல்ல. இறுதிவரை யுத்தங்களுடன் வாழ்ந்து வந்த வன்னிமக்களின் உயர்பங்களிப்புக்கள் எப்போதுமே இருந்து வந்திருந்தது.. மிக இறுக்கமான போர்நடந்த காலங்களில் விடுதலைப்புலி உறுப்பினர்களையும், அதன் தலைவர் பிரபாகரனையும் காப்பாற்றி வைத்திருந்தது வன்னிக்காடும் வன்னி மக்களும்தான்.

  இந்திய இராணுவம் விடுதலைப்புலிகளுடன் உக்கிரமான போர் நடத்திக் கொண்டிருந்தபோது மணலாற்றுக்காட்டில் பிரபாகரனுக்கு சைக்கிள் ரியூப்பிற்குள் உணவு கொண்டு சென்று கொடுத்த நபர் ஒருவருடன் நான் உரையாடியிருக்கின்றேன். அவர் அப்போதிருந்த இறுக்கமான சூழலையும் உயிராபத்துக்களையும் எனக்கு வர்ணித்தபோது. நான் அதிர்ந்து போய்விட்டேன். நிச்சயமாக அது இலகுவான காரியம் எனப்படவில்லை. இதுவொரு உதாரணம். அங்கு வாழ்ந்த ஒவ்வொரு குடிமகனும் ஏதோவொரு வகையான பங்களிப்புகளைச் செய்து வந்திருக்கின்றார்கள். பலர் அப்படி யொரு காரணத்திற்காக இராணுவத்தாலும், ஏனைய ஆயுதக்குழுக்களாலும் கொல்லப்பட்டுமிருக்கின்றார்கள். இவற்றினையெல்லாம் தாண்டி அவர்கள் விடுதலைப்புலிகளை ஆதரித்துஇ அவர்களுக்குப் பல வழிகளிலும் உதவி வந்திருக்கின்றார்கள் என்றால் அவர்கள் விடுதலைப்புலிகள் மீதும், தமிழீழத்தின் மீதும் மிக விருப்புக் கொண்டவர்களாகவே இருந்து வந்திருக்கின்றர்கள் என்பது புலனாகும்.

  இப்படியிருந்த மக்கள் திட்டித் தீர்க்கும் காலம் பின்னாட்களில் வருமென்று விடுதலைப்புலிகளோ அல்லது வேறுயாருமோ நினைத்தேயிருந்திருக் கமாட்டார்கள். ஆனால் அது நிகழ்ந்தது. விடுதலைப் புலிகளின் உச்சமான எழுச்சியால் அவர்களுக்கு யுத்த நிறுத்தமென்ற நல்வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் அதனைச் சரியான வகையில் பயன்படுத்தத் தவறியதால் அதுவே அவர்கள் பலவீனமடையவும், வீழ்ச்சியடையவும் காரணமாகியிருந்தது. வன்னி இறுதியுத்த நிலவரப்படி யுத்த நிறுத்தக் காலத்தில் அரசப் படைத்தரப்பு போர் உத்திமுறைகளையும், ஆயுதத் தளவாடங்களையும் வளர்த்துக் கொண்டதாகவும், விடுதலைப்புலிகள் தம்மைத் தயார்ப்படுத்தத் தவறியிருந்ததாகவும் அறிந்துகொள்ள முடிந்திருக்கின்றது. அப்படியென்றால் அவர்கள், ஏறத்தாழ நான்கு வருடங்கள் என்ன செய்தார்கள் என்பது விடை காண முடியாத புதிர்தான். ஆனாலும் சில விடயங்கள் வெளிப்படையானவையாகவும் இருந்தன இந்தக் காலத்தில்தான் வன்னிக்குள்ளும், வெளியிலும் பணம் உழைக்கும் முதலீடுகள் இடப்பட்டன, வரிகள் வசூலிக்கப்பட்டன, பொறுப்பாளர்கள் பலர் ஆடம்பரமான வீடுகள் கட்டினார்கள், அதிகமான போராளிகளுக்குத் திருமணங்கள் செய்து கொடுக்கப்பட்டன. ஆனால் படை திரட்டுவதற்கான முயற்சிகளோ, பிரச்சாரங்களோ, மக்களுடனான கலந்துரையாடல்களோ அங்கு நடைபெறவில்லை. விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி இங்கிருந்துதான் தொடங்கியதாகக் கருதமுடிகின்றது. வலுக்கட்டாயமாக விடுதலைப் புலிகளால் யுத்தநிறுத்தமானது உடைக்கப்பட்டதனைத் தொடர்ந்து வந்த காலங்களும், தொடர்ந்து அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளும் இன்னுமின்னும் அவர்களைப் படுபாதாளத்தில் தள்ளிக்கொண்டிருந்தது. இதனை மக்கள் முன்கூட்டியே உணர்ந்து கொண்டளவிற்கு விடுதலைப்புலிகள் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. அப்படி அவர்கள் உணர்ந்திருந்தால் மிகவும் புத்திசாலித்தனமான முடிவுகளை அவர்களால் எடுத்திருக்க முடியும். ஆனால் இறுதிவரை அவர்கள் எந்தப் புத்திசாலித்தனமான முடிவுகளையும் எடுக்கவில்லை. அப்படி எடுத்திருந்தால் இத்தனை பாரிய அழிவுகளையும், தோல்விகளையும் மக்களும், அவர்களும் சந்தித்திருக்க வேண்டிவந்திருக்காது.

  விடுதலைப்புலிகளின் மிக முக்கியமான தோல்வி. செஞ்சோலை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல். இதுவே முதலாவது தோல்வியெனவும் கொள்ளலாம். ஆனால் அவர்கள் அதனைத்தமக்கான அரசியல் வெற்றியாக மாற்றியிருந்தார்கள். அதன் எதிரொலியே புலம்பெயர் நாடுகளிலும், தமிழகத்திலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களுமாகும். பாடசாலை மாணவர்களுக்கு ஆயுதப்பயிற்சி கொடுத்து அவர்களை இளைஞர் சேனையாக மாற்றிப் போர்க்களத்திற்கு அனுப்புவது அவர்களின் திட்டம். இது மாணவர்களின் விருப்பத்தோடு நிகழ்ந்ததல்ல. கட்டாயத்தின் பேரில் நிகழ்த்தப்பட்ட ஒரு இரகசிய நடவடிக்கை. இந்தப் பயிற்சிக்குச் செல்லாத மாணவர்கள் பாடசாலை சென்று கல்வி கற்கமுடியாது என்ற கண்டிப்பான உத்தரவு போடப்பட்து. துரதிஷ்டம் என்னவென்றால் படிப்பில் ஆர்வம்மிக்க மாணவர்களே அங்கு சென்றிருந்தார்கள். மறுநாள் முகமாலையில் போர் தொடங்கப்பட்டிருந்தது. நான்காவது நாள் வன்னியின் ஒட்டு மொத்த மக்களையே துயருள் ஆழ்த்திச் சென்ற செஞ்சோலை வளாகத்தின் மீதான விமானத்தாக்குதல் நிகழ்ந்தது. ஐம்பத்திரண்டு மாணவர்கள் கொல்லப்பட்டார்கள். இந்நிகழ்வானது மக்களுக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையே சிறு இடைவெளியை ஏற்படுத்தியிருந்தது. போர் தொடங்கப்பட்டாயிற்று, படைபலமில்லை. அடுத்தகட்ட நடவடிக்கை “வீட்டுக்கொருவர் கட்டாயமாகப் போராட்டத்தில் இணைந்து கொள்ளவேண்டும்” என்பதாக இருந்தது. சந்திகளிலும் தெருக்களிலும் இளைஞர்கள், யுவதிகள் வலுக்கட்டாயமாகப் பிடித்து வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டார்கள். இது வன்னிமக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் ஆயுதத்தின் முன் அவர்கள் ஏதும் செய்ய முடியாதவர்களாகவே இருந்தார்கள். கட்டாய ஆட்சேர்ப்பானது வன்னியெங்கும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. தெரு ஒவ்வொன்றும் இளம்பிராயத்தினரற்று வெறிச்சோடிப் போயிருந்தது. எஞ்சிய பலர் பெரும் காடுகளுக்குள் ஒளித்திருக்கப் பழகிக்கொண்டார்கள். ஒருகட்டத்தில் விடுதலைப்புலிகளால் அவர்களைப் பிடிக்கமுடியாது போக, பிணைக் கைதிகளாகத் தந்தையோ அல்லது தாயோ கொண்டுசெல்லப்பட்டு கடினமான வேலைகள் வாங்கப்பட்டதோடு களமுனைக்கும் கொண்டு செல்லப்பட்டிருந்தார்கள். இதனால் காடுகளுக்குள் ஒளித்திருந்தவர்கள் தமது பெற்றோரைப் பிணையெடுப்பதற்காக விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து கொண்டார்கள். இப்படி விருப்பற்றவர்களை யுத்தத்தில் பயன்படுத்தத் துணிந்தது விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இரண்டாவது காரணமாகியது.

  அனுபவமற்றவர்கள், இயல்பிலேயே பயம்மிக்கவர்கள் எவ்வாறு களத்தில் நின்று போராடுவார்கள்? அவர்கள் களத்தினை விட்டு ஓடி வருவதும், பின் அவர்களைப் பிடித்துக் கொண்டு போவதுமாக கயிறிழுப்பது போன்ற விளையாட்டே அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இது அரச படைத்தரப்பு வன்னிக்குள் நுழைவதற்கு சாத்தியமானதாகிப் போனது. இங்கு வேடிக்கையென்னவென்றால் களத்தில் நின்று போராடியவர்களைவிட கட்டாய ஆட்சேர்ப்பு செய்வதற்கு விடப்பட்ட போராளிகள் அதிகம். கட்டாய ஆட்சேர்ப்பில் கொண்டு செல்லப்பட்ட பிள்ளைகள் வரிசை, வரிசையாக உயிரற்ற பிணமாகக் கொண்டுவரப்பட்டார்கள். இது வன்னி மக்களின் மனதில் பெரும் துயராகக் கவிந்ததோடு விடுதலைப்புலிகளை வெளிப்படையாகத் திட்டவும் தூற்றவும் செய்திருந்தது. அவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாது ஒரு திறந்த சிறைச்சாலைக்குள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். வன்னியில் வாழ்ந்து வந்த மக்கள் விரும்பியோ விரும்பாமலோ வீட்டுக்கொருவரைப் போராட்டத்தில் இணைத்திருந்தார்கள். இந்நிலையிலும் சிலர் தமது பிள்ளைகளைக் கடல் வழியாகப் படகின் மூலம் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டு வந்திருந்தார்கள். இது உண்மையில் துணிகரச் செயல்தான். கடற்பிராந்தியமெங்கும் கடற்புலிகளின் பாதுகாப்பு படைகள் நிறுத்தப்பட்டிருக்கும், கடலில் அவர்களின் படகுகள் றோந்து வந்துகொண்டிருக்கும்இ இதனையெல்லாம் தாண்டி அவர்களை ஏமாற்றிச் செல்வதென்பது கடினமானதுதான் பலர் பிடிபட சிலர் தப்பிச் சென்றிருக்கின்றார்கள். வன்னியை விட்டுத் தப்பிச்செல்ல நினைப்பவர்கள் புலிகளின் பார்வையில் தேசத்துரோகிகள். அகப்பட்டுக் கொண்டால் தண்டனை கடுமையாக இருக்கும். மொட்டையடித்து தெருத்தெருவாகப் பார்வைக்கு விடப்பட்டவர்களும் உண்டு.

  மக்களின் வயிறு பற்றியெரியத் தொடங்கியது. சபிக்கத் தொடங்கினார்கள். நாசமாகிப் போகப்போகிறீர்கள் என்று திட்டினார்கள். அவர்கள் எதனையும் பொருட்படுத்தவில்லை அடுத்தடுத்து தோல்விகளைச் சந்திக்கத் தொடங்கினார்கள். முக்கியமான போராளிகள் இருந்த இடங்களில் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அதில் பல முக்கியஸ்தர்கள் உயிரிழந்தார்கள். வன்னியின் பகுதிகள் அடுத்தடுத்து வீழத்தொடங்கியது. பின்வாங்கத் தொடங்கினார்கள், எதிர்த்தும், சில இடங்களில் எதிர்க்காமலும் பின்வாங்கினார்கள். அதனையும் எப்போதும் சொல்வது போலவே தற்காலிகப் பின்னடைவென்றே சொன்னார்கள். அதனை அவர்கள் “கிட்டவரட்டும், திட்டமிருக்கு” என்ற ரிதம் கலந்த வார்த்தைகளால் சொல்லத் தொடங்கியிருந்தார்கள். இந்த வார்த்தையானது பின்னாளில் மக்களிடம் ஒரு நையாண்டி வார்த்தையாக மாறியிருந்தது. கிளிநொச்சியைப் பிடிப்பதற்கு இராணுவமும், தடுப்பதற்கு விடுதலைப்புலிகளும் கடுமையான யுத்தம் செய்திருந்தார்கள். விடுதலைப்புலிகள் தமது உச்சக்கட்ட சண்டையை அப்போதுதான் செய்தது. அது மீண்டும் வன்னிமக்கள் சிலருக்கு சிறு நம்பிக்கையைக் கொடுத்தது. “சிலர் எங்கடை பொடியல் விடமாட்டார்கள், இனித்தான் பொடியல் சண்டை செய்யப்போறாங்கள்” என்று சொன்னார்கள். ஆனால் கிளிநொச்சியும் இறுதியில் வீழ்ச்சியுற்றது.

  மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்து வந்து கிளிநொச்சியில் வாழ்ந்தவர்கள் ஏறத்தாழ பத்தாவது தடவையாகவேணும் இடம் பெயர்ந்திருக்க வேண்டும். ஒவ்வொரு இடமாகத் தமது உடமைகளையும் பிள்ளைகளையும் காவிக்கொண்டு செல்லும் பரிதாபம் மிகக் கொடுமையானது. ஒவ்வொரு தடவையும் பொருட்களை ஏற்றிக்கொண்டு செல்வதற்கு வாகனச் செலவு கொடுக்க வேண்டியிருந்தது. இப்படி மன்னாரிலிருந்து பதினைந்தாவது தடவையாக இடம்பெயர்ந்து வலைஞர்மடத்துக்கு வந்திருந்த ஒருவர் ‘தான் மன்னாரிலிருந்து வலைஞர் மடத்திற்கு வரும்வரைக்கும் கொடுத்த வாகன ஏற்றுக்கூலி இரண்டு பெண்பிள்ளைகளுக்கு சீதனம் கொடுக்கக் காணும்’ எனச் சொன்னார். இப்படி எத்தனையோ ஆயிரம் குடும்பங்கள் செலவழித்து விட்டு இறுதிக்காலங்களில் சாப்பிடுவதற்கு வழியில்லாமல் பட்டினி கிடந்திருக்கின்றார்கள்.

  இப்படி இப்படியே எல்லா நகரங்களும் வீழ்ச்சியுற, அரசப் படைகள் உடையார்கட்டு, தேவிபுரப் பகுதிகளைப் பாதுகாப்பு வலயம் என அறிவித்திருந்தது. இதனைக் கேள்விப்பட்ட மக்கள் பல இடங்களிலுமிருந்து அப்பகுதிகளுக்குச் செல்லத் தொடங்கினார்கள். சனம் நிறைந்த சனக் காடாகியிருந்தது அப்பகுதி. ஆனால் அங்குதான் வன்னி யுத்தத்தில் முதல்முதல் அதிகூடிய மக்கள் அரச படைகளின் ஏவுகணைத் தாக்குதல்களில் பலியாகியிருந்தார்கள். அந்த ஏவுகணைகள் அப்பகுதியில் விழுவதற்கு ஒரு காரணமும் இருந்தது. விடுதலைப் புலிகள் தமது ஆட்லறி ஏவுகணைகளை அப்பகுதியிலிந்தே ஏவிக் கொண்டிருந்தார்கள். எது எப்படியோ, மக்கள் தொடர்ந்து அப்பகுதியில் கொல்லப்பட்டுக் கொண்டேயிருந்தார்கள். இருந்தும் மக்கள் முடிந்தளவுக்கு பதுங்குக் குழிக்குள் பாதுகாப்பாக இருந்தார்கள். ஆனால் எவ்வளவு நேரம்தான் இருக்க முடியும்? பிள்ளைகளுக்குப் பசிக்குமே, பொருட்கள் தட்டு பாடாகியிருந்தது. எப்போதாவது நிவாரணக் கடைகளில் சாமான்கள் கொடுப்பார்கள் அதற்கு வரிசையில் சென்று நிற்கவேண்டும். இல்லையென்றால் குடும்பமே பட்டினிகிடக்க வேண்டி வரும். பிள்ளைகளுக்கு பால் மாவு கொடுக்கப்படும் போது நீண்ட வரிசையில் நிற்கவேண்டிவரும். இப்படியான நேரங்களில் மக்கள் சாவதனை எப்படி யாரால் தடுக்கமுடியும். தெருக்களே ஓலங்களாலும், ஒப்பாரிகளாலும் நிறைந்திருந்தது. யார் விழுந்தாலும், யார் காயப்பட்டாலும் யாரும் யாரையும் பார்ப்பதில்லை. ஒவ்வொருவரும் தம்மைத்தாமே காப்பாற்றிக் கொள்வதற்காக முண்டியடித்து ஓடிக்கொண்டிருந்தார்கள். தெருக்களில் பிணங்கள் தேடுவாரற்றுக் கிடந்தன. சில உடல்கள் அந்த இடத்திலேயே கிடங்கு கிண்டித் புதைக்கப்பட்டுமிருந்தது. இதனைவிட மோசமாகவே அடுத்துவந்த யுத்தமுமிமியிருந்தது. மக்கள் ஏவுகணைகள் ஏவப்படாத நேரங்களாகப் பார்த்து உடையார் கட்டு, தேவிபுரப் பகுதிகளிலிருந்து இரணப்பாளை, பொக்கனை, வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தார்கள். பின் தேவிபுரப் பகுதியையும் அரசப்படைகள் கைப்பற்றிக்கொண்டன. மணலாற்றுக் காட்டுப்பகுதியிலிருந்து யுத்தம் செய்த படைகள் முல்லைத்தீவு வரையான பகுதிகளைக் கைப்பற்றிக்கொள்ள மக்கள் பொக்கனை தொடக்கம் முள்ளி வாய்க்கால் வரையான பகுதிக்குள் வந்து அடைபட்டுப் போனார்கள்.

  ஏறத்தாழ ஏழு சதுர கிலோமீற்றர் பரப்பளவிற்குள் மக்களும், விடுதலைப் புலிகளும் அடைபட்டுக் கிடந்தனர். அப்போது இரணைப்பாளையும் கைவிடப்பட்டிருந்தது. விடுதலைப்புலிகள் போர் தொடங்கும் போது ஏறத்தாழ ஐயாயிரம் சதுர கிலோமீற்றர் பரப்பளவினைத் தம்வசம் வைத்திருந்தார்கள். மிகமுக்கியமான உயிரிழப்புக்களும், புலிகளின் கொள்கை மாற்றங்களும் இங்குதான் நிகழ்ந்தன. விடு தலைப்பபுலிகள் இறுதியாக இந்தப் பிரதேசத்தையேனும் தக்கவைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு போர்செய்தார்கள். ஆனாலும் உக்கிரமான போரல்ல. அப்போதும் அவர்களுக்குப் படைபலம் போதுமானதாக இல்லை. அதனால் ‘வீட்டுக்கொருவர், நாட்டுக்காக மற்றவர்கள்’ என்று சொல்லியபடி. எஞ்சியவர்களையும் வீடுவீடாகச் சென்று பிடிக்கத் தொடங்கினார்கள். இப்போது பதினான்கு வயதுக்கு மேற்பட்டவர்களும், பதின்மூன்று வயதாகினும் தோற்றமுள்ளவர்களும் கொண்டு செல்லப்பட்டார்கள். அப்போது எனக்கொரு நண்பர் சொன்னார் “இப்போது அவர்களுக்குத் தேவை நிறைகூடிய சதைக்கட்டிகள்தான்.” மக்கள் பேதலித்துப் போனார்கள், நிம்மதி இல்லாதவர்களானார்கள், பைத்தியம் பிடித்தவர்கள் போலானார்கள். பல இடங்களில் எதிர்ப்புகள் எழத்தொடங்கின. பல போராளிகளை மக்கள் செமையாக அடித்துமிருந்தார்கள். ஆனால் அந்த எழுச்சியை விடுதலைப்புலிகள் மிக இலகுவாக அடக்கினார்கள். இரண்டு இடங்களில் எதிர்த்துக் கதைத்தவர்கள் சிலரை ஈவுஇரக்க மற்றுச் சுட்டார்கள் ஆயுதத்தின் மீதான அச்சம் மக்களை மண்டியிடச்செய்தது. பிள்ளைகளை இழுத்துச் செல்லப் பார்த்துக் கொண்டே இருந்தவர்கள் பிணமாக வரவும் பார்த்துக்கொண்டிருக்கும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார்கள். இருந்தாலும் சில இடங்களில் சிலர் எதிர்க்கவும் செய்தார்கள்.

  இப்படியொரு இறுக்கமான சூழ்நிலையில் மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் செல்வது என்ற முடிவோடு இருந்தார்கள். ஆனால் போவதற்கு மிக அசாத்தியமான துணிச்சல் தேவைப்பட்டது. மிகவும் துணிந்தவர்கள் போய்க்கொண்டிருந்தார்கள்.அப்போது விடுதலைப்புலிகளுக்கு இராணுவத்தை தடுத்து நிறுத்துவதோடு இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் செல்லவிருக்கும் மக்களையும் தடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. அதற்கு அவர்கள் இராணுவத்தைத் தடுப்பதற்கு எப்படித் தாக்குதல் நடத்தினார்களோ அதுபோலவே மக்கள் மீதும் தாக்குதல் நடத்தினார்கள். ஆயுதங்கள் மக்களை நோக்கியும் திருப்பப்பட்டிருந்தன. மக்கள் உள்நுழையக்கூடிய பாதைகளில் மிதிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. அதில் நிறையப்பேர் காலற்றும், இறந்தும் போயிருக்கின்றார்கள். போர் முனை மக்களுக்கு மிக அண்மையிலேயே இருந்தது. நான் நினைக்கிறேன், உலக வரலாற்றிலேயே போர் முனைக்கு மிக அண்மையாக வாழ்ந்த மக்கள் வன்னியில் வாழ்ந்த மக்களாகத்தான் இருக்குமென்று. துப்பாக்கிச் சன்னங்கள் மிகச் சாதாரணமாக வரும். அதற்கு விலக்குவதற்கு பழகிக்கொண்டார்கள். இருந்தும் பலர் எதிர்பாராத விதமாக காயப்பட்டோ, இறந்தோவிருக்கிறார்கள்.

  அப்போதெல்லாம் பதுங்குக்குழிகளே வீடாகிப்போயிருந்தது. சமையலைக் கூட சிலர் பதுங்குக்குழிக்குள் அல்லது பதுங்குக் குழிவாசலில் செய்து வந்திருந்தார்கள். சிலர் எப்போதாவது சமைப்பவர்களாக இருந்தார்கள். வைத்தியசாலை காயக்காரர்களால் நிறைந்து வழிந்தது. மருத்துவ வசதியற்ற நிலையிலும் விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவும் அரச மருத்துவர்களும் தம்மால் முடிந்தளவு சிகிச்சை செய்து கொண்டிருந்தார்கள். ஆனாலும் பாரிய காயக்காரர்களைத் தப்பவைக்க முடியவில்லை. திருகோணமலையிலிருந்து கப்பல் வரும்போது பாரிய காயக்காரர்கள் கப்பல் மூலமாக சிகிச்சைக்கு அனுப்பப்பட்டிருந்தார்கள். அதுவும் நிரந்தரமாக நடைபெற்றது என்று சொல்லமுடியாது. இறப்புக்கள் தொடர்ந்து நடந்து கொண்டேயிருந்தன. போரும் உக்கிரமடைந்து கொண்டிருந்தது. விடுதலைப்புலிகளால் இனியும் தாக்குப்பிடிக்க முடியாது என்ற சூழலில் அவர்கள் இரண்டு மிக முக்கியமான தாக்குதல்களைச் செய்வதற்கு திட்டமிட்டிருந்தார்கள்.

  ஒன்று, புதுக்குடியிருப்பு ஆனந்த புரத்துக்குள் மிக முக்கியமான தளபதிகள், முக்கியமான ஆயுதத்தளவாடங்களுடன் சென்று மேற்கொள்ளவிருந்த தாக்குதல். இராணுவத்தால் முறியடிக்கப்பட்டது மட்டுமல்ல. நான்கு பக்கங்களாலும் சூழ்ந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதும் விடு தலைப்புலிகளின் மிகமுக்கியமான போர் உபாயங்களை நன்கறிந்த தளபதிகள் கொல்லப்பட்டார்கள். இது விடுதலைப்புலிகளின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இழப்பாகும். இதுபற்றி அப்போது நண்பர் ஒருவர் ‘விடுதலைப்புலிகளின் சக்திவாய்ந்த இராணுவ இயந்திரங்கள் அழிக்கப்பட்டு விட்டதென குறிப்பிட்டிருந்தார்.

  இரண்டாவது கடல்வழியாக தேவிபுரப் பகுதிக்குள் நுழைந்தார்கள். அதுவும் பாரிய தோல்வியுடனும், பாரிய இழப்புக்களுடனும் முடிவுற்றது. இனி வெறும் தக்கவைக்கும் முயற்சிகளே செய்யமுடியுமென்ற சூழலிலும் இந்தியா அல்லது வேறு நாடுகளின் மூலம் ஏதாவது வழி பிறக்கும் என்ற நம்பிக்கையிலும் இருந்தார்கள். அதுவரையில் தக்க வைக்க வேண்டுமென்ற நிலை, இறுதியாக ஒரு துண்டுப்பிரசுரம் விடுதலைப்புலிகளால் விடப்பட்டிருந்தது. அதில் நாற்பத்தைந்து வயதிற்குட்பட்ட அனைவரும் போராடுவதற்கு வரவேண்டும் என்றும் அழைத்துச் செல்வதற்கு போராளிகள் வருவார்கள், அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும், எதிர்ப்பவர்கள் ஆண்,பெண் பேதமின்றி அந்த இடத்திலேயே தண்டிக்கப்படுவார்கள் என்றுமிருந்தது. இது மக்களுக்குப் பெரும் இடியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அது அவ்வளவு சாத்தியப்படவில்லை என்றாலும் பலர் களமுனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றார்கள். தேசியப் பணியென்று காவலரண்கள் அமைப்பதற்கு வலுக்கட்டாயமாகக் கொண்டு சென்றவர்களில் பலர் வீடு திரும்பவில்லை.

  புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலிருந்து இராணுவத்தினர் மாத்தளனை ஊடருத்து தாக்குதல் மேற்கொண்டு மாத்தளனைக் கைப்பற்றினார்கள். அன்று மட்டும் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் சென்றிருந்தார்கள். இது இராணுவமே எதிர்பார்த்திருக்காத தொகை. மாத்தளனும் வீழ்ச்சியுற்றது இறுதியாக வலைஞர்மடமும் முள்ளிவாய்க்கால் பகுதியுமே எஞ்சியிருந்தது. மக்கள் எப்படியாவது இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடுவதென்ற குறிக்கோளோடு இருந்தார்கள். விடுதலைப்புலிகள் விடுவதில்லை என்ற குறிக்கோளோடு இருந்தார்கள். மக்கள் இரவுகளில் இரகசியமாகப் போவதும் பின் சூடுவாங்கித் திரும்புவதுமாக இருந்தார்கள். சிலர் அப்படியிருந்தும் உள் நுழைந்தும் விடுவார்கள், இன்னும் சிலர் சில பொறுப்பாளர்களின் துணையுடன் சென்று விடுவார்கள். ஒன்றுமியலாத மக்கள் மட்டும் ஏதும் செய்வதறியாது யுத்தத்தின் வலியையும், இழப்புக்களையும் சுமந்துகொண்டு வாழ்ந்தார்கள், புலிகள் போகச்சொன்ன இடத்திற்கெல்லாம் போனார்கள்.

  இறுதியாக வலைஞர்மடமும் இழக்கப்படப்போகும் நிலையில் விடுதலைப்புலிகள் மக்களை முள்ளி வாய்க்கால் பகுதிக்குப் போகச் சொன்னார்கள். போக மறுத்தவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள், துரத்தப்பட்டார்கள். சிலர் இரகசியமாக எங்கேனும் இருந்து விட்டு இராணுவத்தினர் வந்ததும் சரணடைந்து விடுவார்கள். அதுவும் முடியாதவர்கள் முள்ளிவாய்க்காலுக்குச் சென்றார்கள். இறுதிவரை விடுதலைப்புலிகள் மக்களை இராணுவப்பகுதிக்கு செல்வதனை தடுத்துக்கொண்டே இருந்தார்கள். அதற்கென விசேடமான படையணியும் செயல்பட்டுவந்திருந்தது. வலைஞர்மடமும் வீழ்ச்சியுற்றது. முள்ளிவாய்க்கால் வரலாற்றின் மிகமுக்கியமான பகுதி. இறுதி யுத்தம் நடந்த பகுதி மட்டுமல்ல, இரண்டரை சதுரகிலோமீற்றர் பரப்பளவிற்குள் ஏறத்தாழ ஒன்றரை இலட்சம் மக்கள் வாழ்ந்திருந்த பகுதி. உலக வரலாற்றிலேயே மிகக் குறைந்த நிலப்பரப்பில் மிகக்கூடிய மக்கள் வாழ்ந்த பகுதியும் இதுவாகத்தானிருக்கும். மிகநெருக்கமாக இருந்ததால் மக்கள் சொல்லமுடியாத பல துயர்களுக்குள்ளாகினார்கள். மலம் கழிப்பதற்கு இடமற்றிருந்தது. தண்ணீர் தட்டுப்பாடாகியிருந்தது. வறண்ட பூமியாக இருந்ததனால் பதுங்குக் குழிகள் அமைக்கமுடியாத நிலை எந்த நேரமும் எறிகணை விழலாம். யாரேனும் சாகக்கூடும். பக்கத்தில் அழுகுரல் கேட்டால் கூட யாரும் சென்று பார்க்கமுடியாத நிலை. பிணங்கள் தெருக்களில் அடக்கம் செய்வதற்கு யாருமற்றுக் கிடந்தன. அடக்கம் செய்வதற்குரிய அவகாசமும் அற்றிருந்தது. பிணங்களிலிருந்து புழுக்கள் வெளிவரத் தொடங்கியும் மக்கள் அருகிலேயே இருந்தார்கள், அதிலிருந்தே சாப்பிட்டார்கள். அப்படியான சூழ்நிலையிலும் கூட மக்களை அவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்வதற்கு அனுமதிக்கவில்லை.

  இறுதிவரை தடுத்துக் கொண்டேயிருந்தார்கள், இறுதிவரை சுட்டுக்கொண்டேயிருந்தார்கள். இதில் வேடிக்கையென்னவென்றால் தடுத்தவர்களும், சுட்டவர்களும் இறுதியில் இராணுவப் பகுதிக்குள் தமது குடும்பத்தோடு வந்து சேர்ந்தார்கள். அவர்கள்தான் மக்களின் முன் வீராவேசமாகக் கதைத்தவர்கள். வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழியைப் போட்டுடைத்த கதையாக இராணுவத்திடம் செல்கிறீர்கள் என கேட்டவர்கள். நாட்டுக்காகத் தமது உயிரை எந்த நேரத்திலும் கொடுக்கத் தயாராக இருப்பதாகச் சொன்னவர்கள். ஒவ்வொரு வீட்டிலும் சென்று பிள்ளைகளை வலுக்கட்டாயமாக சண்டைக்களத்துக்குக் கொண்டு சென்றவர்கள். பிள்ளையைவிடாத பெற்றோரைத் தமது சப்பாத்துக் கால்களால் உதைத்தவர்கள். இறுதி வரை தமது சயனற் குப்பியாலோ அல்லது தாம் வைத்திருந்த ஆயுதங்களாலோ தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளாமல் குடும்பத்துடன் தப்பி வந்துவிட்டார்கள். இப்போதுதான் பிரபாகரன் முதலாவதாகவும், இறுதியான தோல்வியைச் சந்தித்துக்கொண்டார். இதில் இன்னொரு வேடிக்கையுமிருக்கின்றது. அப்படிப்பட்டவர்களில் சிலரை அரசத் தரப்பே தடை முகாமிலிருந்து விடுதலை செய்திருக்கின்றது.

  இறுதியாக முள்ளிவாய்க்காலும் வீழ்ச்சியுற்றது. விசுவாசமான போராளிகள் நேர் எதிரே நின்று போரிட்டு மாண்டுபோனார்கள். மற்றவர்கள் துப்பாக்கிகளையும், சயனற் குப்பிகளையும் கழற்றி எறிந்துவிட்டு, எவரிடம் மக்களை மண்டியிடக் கூடாது என்று சொன்னார்களோ தடுத்தார்களோ, அவர்களிடமே மண்டியிட்டார்கள். மக்கள் சொத்துடமைகளையெல்லாம் விட்டுவிட்டு, இழப்புக்களின் வேதனைச்சுமையையும், போர் தந்த தழும்புகளையும் சுமந்துகொண்டு எப்போதுமே எதிரியாகக் கற்பனை செய்திருந்த அரசப் படைகளைச் சரணடைந்திருந்தார்கள்.

  1. யாழ்ப்பாண வீழ்ச்சியினை விடு தலைப்புலிகள் தற்காலிகப் பின்னடைவென்றே இறுதிவரை சொல்லிவந்திருக்கின்றார்கள். ஆனால் மிகமுக்கியமான குறிப்பு என்னவென்றால் மீண்டும் யாழ்ப்பாணத்தினை இறுதிவரை அவர்கள் கைப்பற்ற முடியாதவர்களாகவே இருந்தார்கள்)

  2. யுத்தநிறுத்தமானது அரசப் படைத்தரப்பால் உடைக்கப்பட்டதென விடுதலைப்புலிகள் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்கள். ஆனால் இரண்டு தரப்புக்குமே சமாதானத்திலும், யுத்தநிறுத்தத்திலும் நம்பிக்கையோ, விருப்போ இல்லை. அவர்களின் பல நடவடிக்கைகள் இதை அப்பட்டமாக வெளிப்படுத்தின.

  3. செல்வந்தர்கள் தமது முழுச் சொத்துக்களையும் விடுதலைப் புலிகளுக்கு எழுதிக் கொடுத்து விட்டுப் போன நிகழ்வுகளும் நடைபெற்றிருக் கின்றன.

  4. சில அரசியல்வாதிகளும், புலம் பெயர் நாட்டிலிருந்த சிலரும் மக்கள் புலிகளை விட்டுவர விருப்பமில்லாமல் இருக்கின்றார்கள் என்று அப்போதும் சொல்லிக்கொண்டிருந்தது.

  Reply
 • kathieravelu
  kathieravelu

  A very good article telling the truth. Let us face the truth and find ways and means of correcting the mistakes. One way MIGHT be the change of Leadership. But that MAY not solve the problem. Spiritual persons say tha ALL religions lead the way to GOD. Likewise the Leaders of every political party say that they are going to lead the people to Heaven. Everyone wants to stay in power or come to power and to reach that end, they might promise the Heaven. The writer MAY not be an exception but I do admire his sayings. .

  It is Western political culture to resign from leadership if the party loses the election. But the Eastern culture is different. For example take the main opposition party in Sri Lanka. It has lost a large number of elections. The members are putting on pressure but still the Leader does not want to resign. The same with every party in Sri Lanka or India or any other country in the East.

  So it is left to the people including the Tamils in every country to search their inner soul and tell he truth as to what we are trying to achieve.

  It is my humble opinion that everyone wants to live in peace and prosperity with dignity and harmony in life. To achieve this end there might be many ways. One such way is given below which has been circulated to many. Critical comments on the views expressed below are welcome.It may be for or against. ALL comments are welcome.

  Humbly submitted for your kind perusal and comments. Some of the main objectives of these suggestions is to eradicate corruption, injustice and discrimination- some of the real causes for the problems in Sri Lanka coupled with the whipping-up anti-Tamil feelings by the Sinhala POLITICIANS to continue in power countered by the Tamil politicians for the same reason.

  Some suggestions that would help to create a UNIQUE SYSTEM OF GOVERNANCE that would ultimately bring in GOOD GOVERNANCE by showing the way out for injustice, discrimination, oppression and corruption born due and bred by the present system of governance that is mistakenly or mischievously termed as democratic by persons who call themselves political scientists.

  “Even the demand for devolution needs to be reframed as a demand for democratization that brings government closer to all the people, not just minorities, apart from being made far stronger than the 13th Amendment, which has loopholes allowing the Centre to take back the devolved powers. Along with the demand for abolition of the Executive Presidency, and further devolution to smaller units, it would give all the people of Sri Lanka more control over their lives, instead of having their lives ruled by a remote power in Colombo that knows little and cares less about their needs”.

  So, it is high-time we start to RETHINK in terms of a solution that would address the ASPIRATIONS ALL THE PEOPLE in the country, not just the aspirations of the Tamils, in a just and meaningful way rather than continue to criticize other people for their “faults

  A UNIQUE concept that moves towards a meaningful and just power-sharing arrangement (not devolution) based on true democracy – a large number of people participating in the governance of the country based on equality, equity – is a great deviation from the usual thinking of the meaning of the word “sharing of power” is given below for the perusal and comments of concerned people.

  The best political solution for a good system of governance to address the problems faced by various sections of the Sri Lankan society – particularly the poor, the politically weak and the various categories of “Minorities” who do not carry any “political weight” – would be to DILUTE the powers of all elected representatives of the people by separating the various powers of the Parliament and by horizontally empowering different sets of people’s representatives elected on different area basis to administer the different sets of the separated powers at different locations.

  It has to be devolution HORIZONTALLY where each and every set of representatives would be in the SAME LEVEL as equals and in par and NOT VERTICALLY, where one set of representatives would be above (more powerful than) the other, which is the normal adopted practice when talking of devolution, in this power-hungry world. It is because “devolution of power” has been evolved “vertically”, we have all the trouble in this power-hungry world. So, for sustainable peace it should not be the present form of “devolution of power” but “dilution of powers” or “meaningful sharing of powers” in such a way that no single person or single set of people’s representatives be “superior” to another.

  This system would help to eradicate injustice, discrimination, corruption and oppression – the four pillars of an evil society – and help to establish the “Rule of Law” and “Rule by ALL” for sustainable peace, tranquility and prosperity and a pleasant harmonious living with dignity and respect for all the inhabitants in the country. Everyone must have similar powers, rights, duties and responsibilities and most importantly everyone should be deemed “equal” and treated “equitably” before the law not only on paper but also practically – be it the Head of State, The Chief Justice or the voiceless poor of the poorest in the country.

  Since all political and other powers flow from the sovereignty of the people, it is proposed herein that these powers be not given to any ONE set of representatives but distributed among different sets of people’s representatives (groups) elected on different area basis (village and villages grouped) to perform the different, defined and distinct functions of one and the same institution – the Parliament – like the organs of our body – heart, lungs, kidneys, eyes, nose, ear etc. – performing different and distinct functions to enable us to sustain normal life.

  In these suggestions the powers of Parliament have been so separated and distributed among different sets of people’s representatives in different areas so as to dilute the powers of an individual representative or that of a set of representatives in any area. (Dilution is better than Devolution).

  Reply
 • விசுவன்!
  விசுவன்!

  /another article to convince Rajapakse./ Ajith on May 18, 2010 9:35 pm

  Ajith so what is your reply for …

  வன்னி மக்களை புலி சுமந்த நாட்கள் – போர் குற்றவியல் நாள்.???

  Reply
 • Jeyabalan T
  Jeyabalan T

  விசுவன் நீங்கள் பதிவு செய்துள்ள கட்டுரை மிக முக்கியமான வரலாற்று ஆவணம். இதனை களத்தில் நின்ற ஒருவரே பதிவு செய்திருக்க முடியும். இதனை எங்கிருந்து மீள் பிரசுரம் செய்துள்ளீர்கள் என்பதனை பதிவிடவும்.

  த ஜெயபாலன்.

  Reply
 • ஸ்ரீலங்கா கார்டியன்
  ஸ்ரீலங்கா கார்டியன்

  அப்பட்டமான உண்மை தமிழர்கள் பகுத்தறிவுக்கொவ்வாத முரண் நிலை அரசியலைத் தவிர்த்து யதார்த்தமானதோர் அணுகுமுறையை மேற்கொள்ளவேண்டும். : டி.பி.எஸ் ஜெயராஜ்

  நீங்கள் என்னதான் சொன்னாலும் இலங்கைத் தமிழர்களில் பெரும்பான்மையினர் பிரிக்கப்படாத இலங்கையில் தான் வாழப்போகின்றார்கள். தங்களுடைய தலைவிதி சிங்களவரின் தலைவிதியோடு பின்னிப்பிணைந்தது.

  விடுதலைப்புலிகள் தமிழர்களுக்கு மீளமுடியாத தீங்கு விளைவித்து விட்டார்கள். இப்பொழுது தாங்கள் கசப்பான யதார்த்த நிலைமைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. சின்னாபின்னமாக போனவற்றைப் பொறுக்கிக்கொண்டு வாழ்க்கையைத் தொடரவேண்டும்.

  இலங்கைத் தமிழர்கள் அடியுண்டு போன நொறுங்குண்ட மக்கள் பிச்சைவேண்டாம் நாயைப்பிடி என்ற நிலைமை.

  ஆனால் எம் மக்களுடைய நெகிழ்ந்து கொடுக்கும் திறன் குறித்து எனக்கு நம்பிக்கையும் பெருமையும் உண்டு. ஒரு சமாதான காலம் கிடைத்தால் நாம் படிப்படியாக சுதாகரித்துக் கொள்ளமுடியும்.

  தமிழர்கள் பகுத்தறிவுக்கொவ்வாத முரண் நிலை அரசியலைத் தவிர்த்து யதார்த்தமானதோர் அணுகுமுறையை மேற்கொள்ளவேண்டும். கடும் போக்கைக் கடைப்படிப்போமாயின் நாம் மேலும் ஒடுக்கப்பட்டுவிடுவோம். சிங்கள வல்லூறுகள் மேலும் மேலும் எம்மை அழிக்க முயல்கையில் புலம் பெயர் முட்டாள்களின் கொள்கைகளும், தமிழ்நாட்டு கோமாளிகளின் கூத்துக்களும் அதற்குத் தூப மிடுகின்றன.

  இன்று தமிழ்தேசியக் கூட்டமைப்பு தனது கடந்தகால விடுதலைப்புலிகள் அரசியலில் இருந்து மெல்ல விடுபட முயல்கின்றது. அது ஊக்குவிக்கப்பட வேண்டும்.

  இன்று ராஜபக்ஸ அரசு உச்சத்தில் இருக்கின்றது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதிகாரத்தில் இருக்கும் அவருடன் நாம் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும்.

  சிங்கள கடும்போக்காளர்கள் எம்மை மேலும் நசுக்கவே முனைவர். நாம் எம்மைத் தற்காத்துக்கொண்டு அம்முயற்சியை எதிர்க்க வேண்டும். தனி நாட்டுக் கொள்கையை முன்னெடுத்துக்கொண்டு அதைச் செய்யமுடியாது.

  ஓன்றுபட்ட ஸ்ரீலங்கா என்ற வரையறைக்குள் நின்றபடியே சிங்கள தீவிர செயற்பாடுகளை நாம் கட்டுப்படுத்தி முன்செல்லவேண்டும். அவர்களுடனான உரையாடல் பிரிவினை பற்றியதாக அன்றி உலகம் முளுவதும் ஏற்றுக்கொள்ளப்படும். மனித உரிமைகள் ஜனநாயகம் மற்றும் பன்மைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையிலானதாக இருக்க வேண்டும்.

  ஒரு நாளில் அல்லது இரவோடிரவாக மாற்றங்களைக் கொணர வல்ல மந்திரக் கோல் யார்கையிலும் இல்லை. இது ஒரு பகீரத முயற்சி. வேறு வழியில்லை. தமிழ்ஈழம் என்பது ஒரு வழியே அல்ல. தமக்கு எது நன்மை பயப்பது என்பதை ஸ்ரீலங்காவில் வாழும் தமிழர்களே முடிவு செய்ய வேண்டும். நாங்கள் மிகுந்த அடக்கமாக அவர்களுக்குத் தார்மீக ஆதரவு வழங்கலாமேயொழிய அவர்கள் என்னசெய்யவேண்டும் என்று கட்டளை இடுவதோ சொல்லாடலில் ஈடுபடுவதோ சரியல்ல. சென்ற நூற்றாண்டில் முப்பதுகளில் இருந்தே தமிழர்கள் சிங்கள மேலாதிக்கத்தை எதிர்த்து வந்துள்ளனர். இன்று அந்தப் போராட்டம் இராணுவரீதியாக முறியடிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அப்போராட்டத்தின் அரசியல் வேர்கள் அப்படியே உள்ளன.

  எதிர்ப்பியக்கப் படிமுறையின் ஒரு கட்டத்தில் ஆயுதப்போராட்டம் தொடங்கியது. ஆந்த இராணுவ வலுவை நாம் பேரம் பேசும் சக்தியாக மாற்றியிருந்தால் இந்த மட்டில் கூட்டாட்சி கைக்கெட்டியிருக்கும். விருதலைப்புலிகள் தவறவிடப்பட்டவொன்றான சந்தர்ப்பங்கள் பல. 2002 இல் எய்தப்பட்ட ஒஸ்லோ உடன்படிக்கை அவற்றுட் சிறந்தத. அது கூட்டாட்சி முறையைப் பரிசீலிப்பதற்கு இணங்கியது.

  ஆயுதப் போராட்டம் வியத்தமானது என்பதை உணர்ந்த நான் அணுகுமுறையை மாற்றி அரசியல் தீர்வுக்குப் போகும்படியும், புலிகளைத் திரும்பத்திரும்ப வேண்டிக் கொண்டேன். அதற்காக நான் புலிப்புகழ்பாடுவோரால் பரிகசிக்கப்பட்டேன். அச்சுறுத்தப்பட்டேன். தொந்தரவுக்குள்ளானேன். இன்று புலிகள் இல்லை. தமிழர்கள் படுபயங்கரமான நிலையில் இருக்கின்றார்கள். அதற்கு நான் காரணமல்ல புலிகளே காரணம்.

  புலிகள் அழிவுசெய்தபோது அமைதியாக இருந்த அல்லது அவர்களை உற்சாகப்படுத்தியோர் என்னைக் கேட்கிறார்கள். தமிழர் நிலைமை பற்றி என்ன சொல்லுகிறீர்கள்? ஏதோ இந்த நிலைமைக்கு நான் பொறுப்பு என்பது போல.

  அண்மைக்கால சம்பவங்களால் நான் மிகுந்த வேதனைக்குள்ளாகியிருக்கின்றேன். உண்மையில் கடந்த காலம் பற்றிப் பேச நான் விரும்பவில்லை. ஆனால் புலிகளின் அடிவருடிகள் எனக்கு எரிச்சலூட்டுகிறார்கள் . பேசும்படி நிர்ப்பந்திக்கின்றார்கள்.
  இன்று தமிழர்கள் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் ஒரு மோசமான நிலைமையிலிருந்து மீளும் வழியைப்பார்க்க வேண்டும். முதலில் நாம் எம்மை மீளக்கட்டியெழுப்பவேண்டும். போரால் ஏற்பட்ட சேதங்களைத் திருத்துவதும் இயல்புநிலைக்குத்திரும்புவதும் முன்னுரிமை பெற வேண்டும்.

  எமது மக்கள் முழுமையாக மீளக் குடியமரவேண்டும். உயர் பாதுகாப்பு வலயங்கள் குறைக்கப்;படவேண்டும். பாரிய புனர் நிர்மாணப்பணி காத்திருக்கின்றது. 10000க்கும் அதிகமான புலி உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டு சமூகத்தோடு மீள இணைக்கப்படவேண்டும். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டோர் விடுவிக்கப்படவேண்டும். விவசாயம் மீன்பிடி சிறுகைத்தொழில் எல்லாம் புத்துயிர்ப்புப் பெற்று பொருளாதாரம் மேம்பட வேண்டும். சுற்றுலாத்துறை விருத்தி செய்யப்படுதலும் அந்நிய முதலீடு ஊக்குவிக்கப்படுதலும் அவசியம் செய்வதற்கு எவ்வளவோ உண்டு.

  இவற்றையெல்லாம் செய்ய சிங்கள மேலாண்மையுள்ள அரசாங்கத்தின் சிங்கள ஜனாதிபதியோடு ஒத்துழைக்க வேண்டும் வேறு வழியில்லை. சமாந்தரமாக அதிகாரப்பரவலாக்கத்துக்கு நாம் முயற்சிசெய்யவேண்டும். புலிகள் வலுவோடு இருந்த வேளையில் இம் முயற்சியை மேற்கொண்டிருந்தால் அதிகம் கிடைத்திருக்கும். அந்தப் பலம் இல்லாத நிலையில் நாம் அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் தாராளப்போக்கில் தங்கியிருக்க வேணட்டியுள்ளது.

  மேற்குலகின்மீதோ இந்தியாவின்மீதோ தங்கியிருப்பதில் அர்த்தமில்லை. தமிழராகிய நாம் சிங்கள மக்களை நோக்கி நேசக்கரம் நீட்டவேண்டும். அரசியல் ஏற்பாடுகளுக்காக கொழும்பின்மீது வெளியார் அழுத்தத்தைப் பிரயோகிக்க முயல்வதில் அர்த்தமில்லை. நிர்ப்பந்தத்தின் பேரில் சிங்களவர்கள் இணங்கினாலும் அவர்கள் திரைக்குப் பின்னால் அதைச்செயலிழக்கச்செய்வர். (13 வது திருத்தத்திற்கு நேர்ந்தது போல)

  சிங்கள அரசியல் அரங்கு மனசாரத்தரவேண்டும். அழுத்தத்தினால் அல்ல. இதற்கு ஏற்றவர் மகிந்தா தான் சிங்களவர்கள் அவரை நம்புகின்றார்கள். அவர் செய்யும் எதுவும் ஏற்றுக்கொள்ளப்படும். அவர் சிங்களவர் நலன் பேணுபவர் என்பதில் ஐயம் எதுவுமில்லை.

  ஆனால் நாங்கள் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். நாம் கேட்கும் அனைத்தையும் மஹிந்தா தருவார் என எதிர்பார்க்கக்கூடாது. அது நடக்காது. ஏனெனில் சில கோரிக்கைகள் மஹிந்தவுக்கு உடன்பாடானவை அல்ல. அதற்கும் மேலாக சிங்கள மக்கள் தன்மீது வைத்த நம்பிக்கைக்கு மாறாக அவர் போக மாட்டார்.

  ஆக தற்போக்கு வரையறைக்குட்பட்ட சில உரிமையாளர்களையும் சலுகைகளையுமே எதிர்பார்க்கலாம். என்னைப்பொறுத்தவரை அதுபோதும்.

  என்னபாடுபட்டும் வன்முறைக்கும் தீவிரவாதத்துக்கும் திரும்புவதைத் தவிர்க்கவேண்டும். அது தற்கொலைக்கு ஒப்பானது. ஓற்றையாட்சியை மஹிந்த கைவிட்டபோது வடக்கு கிழக்கு இணைப்புக்கும் அவர் சம்மதிக்கமாட்டார்.

  நடைமுறைச்சாத்தியமானது என்வென்றால் இப்பொழுதிருக்கும் மாகாணசபை முறைமையை வலுப்படுத்துவதாகும். முழுமையான முறைமையை வலுப்படுத்துவதாகும். முழுமையான சமஸ்டி முறைமையை ஒரு தூர இலக்காக வைத்துக்கொண்டு சிங்களவர்களோடும் முஸ்லிம்களோடும் சேர்ந்து செயற்படவேண்டும். ஒற்றையாட்சிக்குள் எவ்வளவு அதிகாரப் பரவலாக்கத்தை பெறமுடியுமோ அதைப்பெற முயல வேண்டும்;. தமிழ்மொழி அமுலாக்கல் முழுமையாக நிறைவேற முயற்சி செய்யலாம். அது அரசியல் யாப்பில் ஏலவே இருப்பது.

  அதிகாரப்பகிர்வின் மூலம் கிடைக்கும் அதிகாரத்தை எமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்யவும் பயன்படுத்தலாம். ஆனால் இவை ஒருமைப்பட்ட நாடு என்ற வரையறைக்குள் தான் நடைபெறவேண்டும். இனவெறிபிடித்த சிலர் தவிர நியாயமான போக்குடைய சிங்களவர்களுக்கு பிரிவினைவாதம் மீண்டும் இனி எழாது என்ற நம்பிக்கை வரவேண்டும்.

  ஒற்றுமைப்பட்டுப் பணியாற்றுவோமாயின் தற்பொழுது நிலவும் பகைமையான சூழல் படிப்படியாகக்குறைந்துவிடும். ஓற்றையாட்சியின் கீழ் எமக்குக்கிடைக்கும் அதிகாரங்களும் உரிமைகளும் எமது அபிலாசைகளை உள்ளடக்கப் போடுமானவையாகக் கண்டால் ஒரு பிரச்சனயும் இல்லை.

  ஆனால் உண்மையாகவே அவை போதாமல் இருந்தால் எங்களுக்கு ஏன் அதிக அதிகாரங்கள் தேவை என்பதைச் சங்கள மக்கள் உணரச்செய்யவேண்டும். சுமுகமான முரணற்றநிலையில் சிங்கள அரசுக்கட்டமைப்பு எம்முடைய அக்கறைகளையும் புரிந்துகொள்ளும். பரிவுகாட்டும்.

  தமிழர்களைப்பொறுத்தவரை கிடைக்கமுடியாததற்கு ஆசைப்படுதல் தற்கொலைக்கொப்பானது. அடையக்கூடியதை ஏற்றுக்கொள்ளுதல் புத்திசாலித்தனமானது.

  எங்களிடம் ஒரு வேட்டி இருந்தது. அதன் தரம் போதாதென்று ஒரு பட்டு வேட்டிக்கு ஆசைப்பட்டோம். எமக்கு ஒரு கதர் வேட்டி தரப்பட்டது. அதை நிராகரித்து பட்டு வேட்டிக்காக போராடினோம். இப்பொழுது எம்மிடம் வேட்டி இல்லை. ஏம் நிர்வாணத்தை மறைக்க ஒரு கோவணம் மட்டுமேயுள்ளது. நாங்கள் தொடர்ந்தும் முரண் நிலைப்பாட்டையே முன்னெடுப்போமாயின் கோவணமும் பறிபோய்விடும்.

  முரண்நிலை அரசியலை தமிழர் கைவிடவேண்டும் என்று சொல்லும் போது அவர்களுக்கு நான் ஒரு தெரிவையும் தரவில்லை என்று நீங்கள் சொல்லக்கூடும். உண்மையில் தற்சமயம் எமக்குத் தெரிவு ஏதும் இல்லை.

  தமிழர்களுடைய பரிதாபநிலையை மூடிமறைத்து அவர்களுக்கு ஒரு தன்மான உணர்வின் சாயலைத்தரவே நான் முனைகின்றேன்.

  இலங்கைத் தமிழர்களுக்கு ஸ்ரீலங்கா தாயகமாதலாலும் என்ன பிரச்சனை இருந்தாலும் அவர்கள் இங்கேயே வாழவேண்டியவர்கள் என்பதாலும் இந்த இக்கட்டான நிலைமையைச் சாதகமாக மாற்றிக் கொள்ளும்படி தமிழர்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.

  நன்றி – ஸ்ரீலங்கா கார்டியன்

  Reply
 • விசுவன்
  விசுவன்

  //எங்களிடம் ஒரு வேட்டி இருந்தது. அதன் தரம் போதாதென்று ஒரு பட்டு வேட்டிக்கு ஆசைப்பட்டோம். எமக்கு ஒரு கதர் வேட்டி தரப்பட்டது. அதை நிராகரித்து பட்டு வேட்டிக்காக போராடினோம். இப்பொழுது எம்மிடம் வேட்டி இல்லை. ஏம் நிர்வாணத்தை மறைக்க ஒரு கோவணம் மட்டுமேயுள்ளது. நாங்கள் தொடர்ந்தும் முரண் நிலைப்பாட்டையே முன்னெடுப்போமாயின் கோவணமும் பறிபோய்விடும்//

  அது மட்டுமா நோர்வே வந்து எங்களுக்கு டவுசர் தந்ததே அதையும் அல்லவா மறுத்தோம்.

  Reply