நான்காம் முறையாக தொங்கு பாராளுமன்றம் (hung Parliament) ஒன்றை அமைப்பதுக்கான தேர்தலாகவே இத்தேர்தல் பலராலும் பார்க்கப்படுகின்றது. இதை சரியாக விளங்கிக் கொண்ட, எதிர்கட்சி தலைவர் டேவிட் கமமொரன் (David Cameron) இத்தகைய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி விடவேண்டாம் என வாக்காளர்களை கெஞ்சாக் குறையாக கேட்கிறார். இவரை பொறுத்தவரை தொங்கு பாராளுமன்றம் அல்ல பிரச்சினை. யாருடன் கூட்டு சேர்வதென்பதே இவரை அரித்துக் கொண்டிருக்கும் விடயம். அறுதி பெரும்பான்மை இல்லாத நிலையில், அதாவது 326 ஆசனங்கள் கிடைக்காவிட்டால், ஆகக்கூடிய பெரும்பான்மையில் ஆட்சி செய்வதென்பது சர்க்கஸ்காரர்கள் (circus) கயிற்றில் நடக்குமாப் போல் சாதாரண மனிதன் செய்யும் முயற்சி போன்றது. விழுவது நிச்சயம். எனவே பழமைவாத கட்சி(Conservertive) கேட்பது அறுதி பெரும்பான்மை. ஆனால் கிடைக்கத்தான் வாய்ப்பில்லை.
ஆளும் தொழிற்கட்சியோ (Labour) மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்தால் இன்றைய முக்கிய பிரச்சினையான பொருளாதார பிரச்சினையை சீர்செய்து விடுவோம் என்கின்றனர். கோர்டன் பிறவுன் (Gordon Brown) மிகவும் பணிவாக எமக்கு இப்படி சொல்கின்றார், ’13 வருடங்கள் தன் கட்சியால் செய்ய முடியாது போனதை (அல்லது தான் செய்ய எத்தனிக்காத விடயத்தை) அடுத்த ஐந்து வருடத்தில் செய்து முடிப்பாராம்’. மந்திரத்தால் மாங்காய் பழுக்க வைப்பதை அனேகமாக மக்கள் விரும்புவதில்லை. இது அவருக்குப் புரியவில்லை போலும்.
பந்தயத்தில் நம்பிக்கையோடு ஓடும் அடுத்த குதிரை தாராளவாத ஜனநாயக (Liberal Democratic) கட்சி. அதன் தலைவர் நிக் க்லெக்( Nick Clgge ) ஒரு விடயத்தை தெளிவாக சொல்கிறார் (தேசம்நெற்காரர் புலி ஆதரவாளர்களிடம் சொல்வது போல்) ஒளிவு மறைவு வேண்டாம், பொருளாதார பிரச்சினை பொதுபிரச்சினை ஒன்றாக இருந்து பேசுவோம். குடிவரவு பிரச்சினை ஏற்கனவே புரையோடிப்போன பிரச்சினை அதை ஏற்றுக் கொண்டு பரிகாரம் தேடுவோம். அத்தோடு இந்த இரண்டு பெரிய கட்சிகளும் நாட்டை குட்டிச் சுவராக்கிவிட்டனர். நாட்டை என்னிடம் தாருங்கள், பரிகாரம் என்னிடம் உண்டு என்கிறார். மக்கள் குழம்பி போய்விட்டார்கள்.
13 வருடம் உண்மைதான், பிறவுன் என்ன செய்வார் பாவம். இந்த பிளயார் (Blair) அடித்துவிட்டு ஓடி (hit and run) விட்டார். ஆகவே படைகளை ஈராக்கில் இருந்தும், ஆப்கானிஸ்தானிலிருந்தும் இலகுவில் விலக்கிக்கொள்ள முடியாது. அதாவது ராணுவ செலவை கட்டுப்படுத்துவது என்பது யோசிக்கவே முடியாத விடயம். பிறவுனின் கெட்ட காலமோ என்னவோ உலக பொருளாதார சரிவு (economic downturn) வேறு. சின்ன, சின்ன நாடுகளை தூக்கி விடவேண்டாமா என்ன? உலக தலைமைத்துவ நாடுகளில் ஒன்றல்லவா யூ.கே. ஓபாமா கூட தனது எதிரி சீனாவிடம் கடன் வாங்கி அமெரிக்க பொருளாதாரத்தை சீர் செய்தார்தானே என்று மனுசன் கஸ்டப்பட்டு பல நாடுகளிடம் கடன்வாங்கி மற்ற நாடுகளையும் தூக்கிவிட்டு, தன் நாட்டின் பொருளாதாரத்தையும் சீர்செய்து வருகிறார். அப்புறம் ஏன் அவருக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கக்கூடாது என்று மக்கள் யோசிக்கும் போதுதானே இந்த பத்திரிகைகள், குறிப்பாக கார்டியன் (Guardian), தி ஒப்சேவர் (The Observe ) என்பன நிக் க்லெக்குக்கு ஆதரவு கொடி காட்டிவிட்டார்கள்.
லிபரல் டெமொக்ரடிக் கட்சி மெது மெதுவாக வளர்ந்து வரும் கட்சி. இவர்களின் வளர்ச்சி பெடி அஸ்ட்ரோன் (Peddy Astron), சார்ல்ஸ் கெனடி ( Charles Kennedy ) ஆகியோரின் தலைமையில் மிகவும் உறுதியாக மேல் நோக்கிச் சென்றது. இப்போது அறுவடை காலம். நிக் க்லெக்கின் ராசிபலன் இலக்கம் 10ல் கண் வைத்துவிட்டார். இருந்தும் இலக்கம் 10 நிக் க்லெக்கு சற்று பெரியது.
அரசர் 2ம் சார்ல்ஸ்சின் (King Charles II) பரம்பரையில் வந்த நான் பிரதமர் பதவியை கை நழுவவிடுவதா? ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள நினைப்பதில் (TULF போல) என்ன தவறு என்று நேரடியாக கேட்காவிட்டாலும் நாடு குட்டிச் சுவராகிவிட்டது. தொழிற்கட்சியே அதற்கு காரணம். ஐரோப்பிய ஒன்றியம் (European Union) எம்மை சகல வழிகளிலும் கட்டுப்படுத்துகிறது. நாம் என்ன யாருக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர்களா? நாட்டில் அதிகரித்துள்ள குற்றச் செயல்களை குறைக்க வேண்டாமா? என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே செல்கிறார் டேவிட் கமரொன். கடைசி 24 மணித்தியாலத்திலும் தூக்கமின்றி பிரச்சார வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இருந்தும் இலக்கம் 10 கை நழுவியே செல்கிறது.
யார் யார் எது செய்தாலும் முடிவு பின்வருமாறு அமையுமென்றே எதிர்பார்க்கப்படுகின்றது. பழைமைவாத கட்சி முதலாவது இடத்துக்கும், இரண்டாம் மூன்றாம் இடங்களுக்கு முறையே லிப்.டெம், தொழிற்கட்சி தள்ளப்படும் அல்லது தொழிற்கட்சி இரண்டாம் இடதுக்கும், லிப்.டெம் மூன்றாம் இடத்துக்கும் இடம் மாறலாம். அல்லது இந்த ஒழுங்கு கூட மாற்றமடைந்தாலும் தாராளவாத ஜனநாயக கட்சியின் இணைவு இல்லாமல் யாரும் இம்முறை ஆட்சி அமைக்க முடியாது என்பதனால் இத் தேர்தலில் லிப். டெம் மிக முக்கியம் இடம் பெறுகிறது.
எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் பொது சேவைகளுக்கான செலவினங்கள் மிகவும் குறைக்கப்படும் என்பதாலும், வரிகள் அதிகரிக்கப்படும் சாத்தியம் மிக அதிகமாகக் காணப்படுவதாலும், நாடு இன்னுமொறு 4, 5 ஆண்டுகளுக்கு மந்த கதியிலேயே பொருளாதாரத்தில் மேல்நோக்கிச் செல்லும் என்பதாலும் இந்த இரண்டு பெரிய கட்சிகளின் கொள்கை விளக்கங்களுக்கு சற்று மாற்றமாக பேசும் லிப்.டெம் எதிவரும் அரசாங்கத்தை தீர்மானிக்கும் அளவுக்கு போதியளவு வாக்குகள் பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அரச செலவீனங்கள் தொடர்பான நிக் க்லெக்கின் வாதம், ஆப்கானிஸ்தனில் இருக்கும் ஜக்கிய இராட்சிய படைகளை மீளப் பெறுவதின் மூலமும், ட்ரெய்டன் (Trident missile) அணு ஏவுகணை திட்டத்தை கைவிடுவதின் மூலமும் பெருந்தொகை பணத்தை மீதப்படுத்தலாம் என்பதாகும். அந்த பணத்தை தேசிய சுகாதார சேவைக்கும் (NHS ), கல்வி அபிவிருத்திக்கும் பயன்படுத்தலாம் என்பதும் க்லெக்கின் திடமான வாதாட்டம். அதேபோல் கறுப்பு பொருளாதாரத்திற்கு (black economy)காரணமாக இருக்கும் சட்டபூர்வமற்ற குடிவரவு (illegal immigrants) காரர்களை வெளியே கொண்டு வருவதன் மூலம் அவர்களை நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்ய ஏற்பாடு செய்வதும், இனிமேல் இந்த சட்ட விரோத குடியேற்றகாரர்களை கட்டுப்படுத்த சரியான திட்டமிடலை செய்ய இது பெரிதும் வழிவகுக்கும் என்பதுமாகும். இந்த வாதம் அனேகமாக வாக்காளர் மத்தியில் பல கேள்விகளை ஏற்படுத்தியுள்ளதை நாம் அலட்சியம் செய்து விட முடியாது. மனிதன் வெளிப்படையாக பேசுகிறார். ஆனால் “வெளிப்படையாக பேசல்” என்ற தன் கொள்கையில் விடாப்பிடியாக இருப்பாரா?, பேசுவதுடன் மாத்திரம் நின்று விடுவாரா? அல்லது செயல்வீரனாக திகழ்வாரா? என்பதுதான் அந்த கேள்விகள்.
நான் எந்த பேயுடனும் சேர்ந்து பணியாற்ற தயங்கமாட்டேன் என்று நிக் க்லெக் கூறினாலும், கொள்கை ரீதியில் பழைமைவாதிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முன்வரமாட்டார். பொதுவாக மாணவர்களின் அபிமானத்தைப் பெற்றுள்ள நிக் க்லெக் தொழிற்கட்சியுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க தயார் நிலையில் உள்ளார். தொழிற்கட்சியும் வேறு தேர்வு இல்லாமல் அல்லது கொள்கை ரீதீயில் சற்று ஒத்துபோக கூடியவர்கள் என்ற ரீதியில் லிப்.டெம் உடன் சேர்ந்து ஆட்சி அமைக்க தீர்மானித்து விட்டனர்.
இருந்தும் இங்கே ஒரு அரசியல் விளையாட்டு நடைபெறவுள்ளதை யாரும் கண்டுகொள்ளாமல் இருக்கமுடியாது. அதாவது; தொழில் கட்சி மூன்றாம் இடத்தை பெற்று லிப்.டெம் முடன் சேர்ந்து அரசாங்கம் அமைக்க நேரிடும் பட்சத்தில், நிக் க்லெக்கின் முக்கிய மூன்று கோரிக்கைகள் 1. பிரதமர் பதவி, 2. நிதி மந்திரி பதவி (Chancellor of Exchequer), 3. வெளிநாட்டு அமைச்சு பதவி என்பன லிப்.டெம் முக்கு தரப்பட வேண்டும் என்பதாகும். தொழிற்கட்சி இரண்டாம் இடத்தை பெறும் போது நிக் க்லெக்கின் இரண்டு கோரிக்கைகள் 1. நிதி மந்திரி, 2. வெளி நாட்டலுவல்கள் அமைச்சு பதவிகள். இந்த கோரிக்கைகள்தான் தொழிற்கட்சிக்குள் பிரச்சினையை தோற்றுவிக்கப் போகிறது.
தொழிற்கட்சி மூன்றாமிடத்தை பெறும்போது, நிக் க்லெக்கின் கோரிக்கையை ஏற்று ஆட்சியில் தொடர்ந்தும் இருக்க கோர்டன் பிறவுனை வெளியேற்றவும் பலர் தயாராகவுள்ளனர். அவர்களில் மண்டெல்சன் பிரபு ( Lord Mandelson), உதவி பிரதமர் ஹரியட் ஹார்மன் (Harriet Harman ), நீதி அமைச்சர் ஜக் ஸ்ட்ரோ (Jack Strow ), வெளி நாட்டமைச்சர் டேவிட் மிலபண்ட் (David Milaband ) ஆகியோர் முக்கியமானவராவர். ஒரு வேளை க்லெக்கின் கோரிக்கை நிறைவேறலாம். அது அவர் கட்சி பெறும் ஆசனங்களைப் பொறுத்தது. அப்படியானால் கோர்டன் பிறவுனின் நிலை? அம்போ.
ஆனால் தொழிற்கட்சி முதலாம் அல்லது இரண்டாம் இடத்திற்கு வரும் போது, லிப்.டெம் முக்கு நிதிஅமைச்சு பதவி கொடுத்தாவது அக்கட்சியை தம்பக்கம் வைத்திருக்க வேண்டிய தேவை தொழிற்கட்சிக்குண்டு. அதைவிட அதிகம் எதிர்பார்ப்பது க்லெக்குக் ஆபத்தாக முடியாவிட்டாலும் லிப்.டெம் மின் நிலைமையை கஸ்டத்துக்குள்ளாக்கும் அபாயம் உள்ளது. இருந்தும் ஆளும்கட்சி ஆசனமா அல்லது எதிர்கட்சி ஆசனமா என்ற கேள்விக்கு முகம்கொடுக்க நேரிடும்போது தொழிற்கட்சி கோபத்துடனும், சலிப்புடனும் லிப்.டெம் மை அரவணைத்தே செல்லும். நிக் க்லெக் இந்த சந்தர்ப்பத்தை தவற விடமாட்டார் என்றே தெரிகிறது. எனவே பழைமைவாத கட்சி ஆட்சிக்கு வருவதை தவிர்க்கும் வகையில் தொழிற்கட்சி, லிப்.டெம் கூட்டணி தவிர்க்கப்படலாகாது. ஏற்பாடுகளும் அதை நோக்கியே போகின்றன.
ஆக தொழிற்கட்சிக்கு எப்படியாவது ஆட்சியை தக்கவைக்க வேண்டும், பழைமைவாத கட்சியை பொறுத்தவரை 13 வருடங்களுக்குப் பின்னும் ஆட்சியை கைப்பற்றவில்லை என்றால் அந்த கட்சியின் மீதான நம்பிக்கையீனம் அதிகரிக்கும், கமெரோனின் மாணவபருவ கனவு சுக்கு நூறாகிவிடும். ஆனால் க்லெக்குக்கோ தனது கோரிக்கைகளை எந்த அளவுக்கு அதிகமாக அடையலாம் என்பதை தவிர வேறு பிரச்சினைகள் இருப்பதாக தெரியவில்லை. ஏனெனில் அவர்தான் அடுத்த அரசாங்கத்தை தீர்மானிப்பவர் (king maker) .
யார் ஆட்சிக்கு வரினும் எதிர்வரும் ஐந்து ஆண்டுகள் கடினமானவை. ஆட்சியாளர்களுக்கு மாத்திரமல்ல, பொது மக்களுக்குமே. சமூகநல உதவியில் வாழ்வோர் இப்போதே தொழில் தேட ஆரம்பிக்க வேண்டும். பிரஜா உரிமை பெற விரும்புவோர் நல்ல பிள்ளைகளாய் இருக்கப் பழக வேண்டும். ஆங்கிலம் தெரியாதோர் பிரஜாவுரிமை பற்றி யோசிக்கத் தேவையே இல்லை. கிட்டடியில் ஓய்வூதியம் பெற யோசித்தோர் உடனடியாக யோசினையை மாற்றி 70 வயது வரையினும் மாரடிக்க வேண்டும். வரி செலுத்துவோர் வயிற்றை சற்று இறுக்கமாக கட்டிக்கொள்ள வேண்டும். மொத்தத்தில் எல்லோரும் சற்று அனுரிசத்து செல்லவேண்டும்.
ஐஸ்லாந்து, கிரீஸ் நிலைமைக்கு நாட்டை இட்டுச் செல்லாது ஏனைய ஐரோப்பிய நாடுகளுக் சமமாக யூ.கே யை கட்டி எழுப்பவேண்டியது அடுத்த கூட்டரசாங்கத்தின் பொறுப்பு மிக்க பணி. செய்வார்கள் என நம்புவோம்.
முஹம்மத் எஸ்.ஆர். நிஸ்த்தார்.