புதிய எம்.பி.க்கள் சத்தியப்பிரமாணம் செய்ய முடியாதென சபாநாயகர் அறிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சி புதிதாக நியமித்துள்ள இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம் செய்துகொள்வது தொடர்பில் ஆளுந்தரப்பு எதிர்தரப்பு உறுப்பினர்களுக்கிடையே சுவாரஸ்யமான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. சுமார் ஒரு மணித்தியாலமாக வாதங்கள் நீடித்த போதிலும் புதியவர்களை சத்தியப் பிரமாணம் செய்வதற்குக் கடைசிவரை இடமளிக்க முடியாது என்று சபாநாயகர் தெரிவித்துவிட்டார்.

கடந்த பெப்ரவரி மாதம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்குப் பின்னர், அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்காகவென நேற்றைய தினமும் பாராளுமன்றம் இரண்டாவது தடவையாகக் கூட்டப்பட்டது. சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார தலைமையில் காலை 9.30ற்கு ஆறாவது பாராளுமன்றத்தில் இறுதி அமர்வு கூடியது.  அப்போது, முதலில் தமது புதிய உறுப்பினர்களுக்குச் சத்தியப்பிரமாணம் செய்ய இடமளிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சியின் பிரதம கொறடா ஜோசப் மைக்கல் பெரேரா சபாநாயகரைக் கேட்டுக் கொண்டார். அதன்போது அதற்கு இடமளிக்க முடியாது என்றும் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட போது உறுப்பினர்களாக இருந்தவர்கள் மாத்திரமே விசேட அமர்வில் பங்கேற்க முடியுமென்றும் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

“கலைக்கப்பட்ட பாராளுமன்றம் அதி முக்கியமான ஒரு விசேட அம்சத்துக்காகப் கூட்டப்பட்டிருக்கிறது. அதாவது அவரசகாலச் சட்டத்தைத் தவிர்ந்த வேறு எந்த விடயமும் இடம்பெற முடியாது. எனவே, புதியவர்கள் சத்தியப்பிரமாணம் செய்ய முடியாது. அரசியல் அமைப்பில் இது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது” என்று விவாதத்தை முடுக்கிவிட்டார் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ். அப்படியானால், 225 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்தில் இரண்டு உறுப்பினர்கள் குறைவாக உள்ளனர். எனவே, பாராளுமன்றச் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது” என்று வாதிட்டார் ஜோசப் மைக்கல் பெரேரா. விவாதத்தில் இணைந்துகொண்ட சபை முதல்வரான அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா, “இது தொடர்பில் சட்ட மா அதிபரிடமும் ஆலோசனை பெற்றிருக்கிறோம்.

புதியவர்கள் சத்தியப்பிரமாணம் செய்ய முடியாது. இன்று பாராளுமன்றம் கூடவிருக்கும் நிலையில் நேற்றிரவு ஒருவர் இறந்துவிட்டால், அந்த உறுப்பினருக்குப் பதிலாகப் புதியவரை நியமிக்க அவகாசம் இருக்கிறதா?” என்று ஜோசப் மைக்கல் பெரேராவிடம் கேள்வி எழுப்பினார்.

நான் இறந்தவர்களைப் பற்றிப் பேசவில்லை. உயிருடன் இருப்பவர்களைப் பற்றித்தான் கூறுகிறேன்” என்று பதில் கொடுத்தார் பெரேரா. இவ்வேளையில் கருத்துத் தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், “அவர்கள் இருவரும் ஏற்கனவே வர்த்தமானிப் பத்திரிகை மூலம் எம்.பி.க்களாக அறிவிக்கப்பட்டு விட்டார்கள். இனி அவர்கள் சம்பிரதாயமாக சத்தியப் பிரமாணம் செய்து கொள்ள இடமளிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒரு முக்கியமான வாக்கெடுப்பில் பங்கெற்பதற்கு அவர்களுக்கு உள்ள உரிமை மறுக்கப்படுவதாகும்” என்றார். ஆனால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பேராசிரியர் பீரிஸ் மீண்டும் தெரிவித்ததுடன், அவ்வாறான ஒரு நிலை இந்த விசேட அமர்வில் ஏற்பட வாய்ப்பில்லை என்று தெளிவுபடுத்தினார்.

இதன் போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, “இந்த விடயத்தைத் தீர்மானிப்பதற்காக கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டுமாறு சபாநாயகருக்குக் கடிதம் எழுதியிருந்தேன், அவர் எனக்குப் பதில் எழுதாமல், என் செயலாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்” என்றார். என்றாலும், அதனை நிராகரித்த சபாநாயகர், கடந்த அமர்வில் இணங்கிக்கொண்டதற்கு அமையவே இன்றைய பணிகள் நடைபெறுகின்றன என்று விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அமைச்சர்கள் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் இந்திக பண்டாரநாயக்க ஆகியோரின் வெற்றிடத்துக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள டி.எம்.பண்டாரநயாக்க, அநுர கொபல்லாவ ஆகியோரே சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டுமென எதிர்க்கட்சி கேட்டுக் கொண்டிருந்தது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *