ஜனாதிபதி விரைவில் யாழ் செல்ல முடிவு! – ‘தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ ஜனாதிபதி புலம்பெயர்ந்த தமிழ் குழுவிற்கு உறுதி

விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டு இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். புலம்பெயர்ந்த தமிழ் குழு ஒன்று ஜனாதிபதியை அலரிமாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்திருக்கிறார்.

மேலும் வரும் தேர்தலையொட்டிய பிரச்சாரங்களுக்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விரைவில் யாழ்ப்பாணம் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அண்மையில் எதிர்க் கட்சிக் கூட்டின் வேட்பாளர் யாழ் சரத்பொன்சேகாவின் யாழ் விஜயத்தைத் தொடர்ந்து மகிந்த ராஜபக்சவும் யாழ் செல்லத் தீர்மானித்து உள்ளதாக இக்குழுவில் இடம்பெற்ற உறுப்பினர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் மகிந்த ராஜபக்சவின் யாழ் விஜயத்தின் போது இச்சந்திப்பில் கலந்தகொண்ட பலரும் அவருடன் சமூக அளிப்பார்கள் எனத் தெரிவித்தார். இப் புலம்பெயர் குழுவில் இடம்பெற்ற சிலர் ஏற்கனவே மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்கும்படி யாழ் மக்களைக் கேட்க உள்ளனர்.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டாக்டர் நெயல் நடேசன், சவூதி அரேபியாவிலிருந்து டாக்டர் இராஜசிங்கம் நரேந்திரன், லண்டனிலிருந்து இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த சந்திப்பில், டாக்டர் இராமநாதன் நரேந்திரநாதன் (அவுஸ்திரேலியா) மயில்வாகனம் சூரியசேகரம் (லண்டன்), சபாபதி சுப்பையா குகநாதன் (பிரான்ஸ்), இக்னேசியஸ் செல்லையா யோகநாதன் மனோரஞ்சன் (கனடா), முருகபூபதி (அவுஸ்திரேலியா) ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழ் மக்களின் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக இக்குழுவினர் மகஜர் ஒன்றைக் கையளித்ததுடன், அதுதொடர்பாக நீண்டநேரம் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினர்.

இடம்பெயர்ந்த மகக்ளின் மீள்குடியேற்றம், உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல், வடக்கு கிழக்கின் கல்வி, அபிவிருத்தி திட்டங்கள், புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் தாயகம் வந்து செல்வதில் உள்ள சிக்கல்கள் போன்ற விடயங்கள் குறித்து ஜனாதிபதிடன் கலந்துரையாடினர். தமிழர்களின் அதியுயர் பிரச்னையான இனப்பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாகவும் இக்குழு உரையாடி உள்ளது.

சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்த போது, “எந்தத் தமிழர்களையும் தேவையில்லாமல் சிறையில் வைத்திருப்பது தமக்கு விருப்பமானதல்ல. சட்டப்படியான விசாரணைகளை துரிதப்படுத்தி அவர்களை விடுதலை செய்யுமாறு ஏற்கனவே தான் நீதி அமைச்சின் செயலாளருக்கு பணித்துள்ளேன்” என அவர் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு இணைப்பை ஏற்படுத்தப் போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிர்த்தரப்பு ஜனாதிபதி பேட்பாளர் உறுதியளித்துள்ள நிலையில் வடக்கு கிழக்கு இணைக்கப்படுவதை தான் அனுமதிக்கப் போவதில்லை என மகிந்த ராஜபக்ச அறிவுறுத்தி உள்ளார். இந்தப் பின்னணியில் யாழ் செல்லவுள்ள மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களைத் திருப்திப்படுத்துவதற்கான சில விடயங்களை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் யாழில் ஜனாதிபதியின் உரை தமிழில் முழுமையாக இடம்பெறும் என்றும் அதற்கான பயிற்சிகளை அவர் எடுத்துவருவதாகவும் தெரியவருகின்றது. எதிர்க் கட்சி வேட்பாளர் நல்லூர் கந்தசாமி கோலிலில் சேட்டைக் கழற்றி விட்டு வழிபட்டதைப் போல் மகிந்த ராஜபக்சவும் ஏதாவது தேர்தல் ஸ்ரண்ட் செய்யலாம்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • சாந்தன்
    சாந்தன்

    இந்த மகஜர், புலம்பெயர்ந்த குழு, அரசியல் கைதி, மீழ்குடியேற்ரம், சட்டப்படியான, விசாரணை,துரிதம்….என அறிக்கையில் இன்னோரன்ன ஸ்ரன்டுகள் இருக்கே. இதில் இன்னுமொரு ஸ்ரன்ரா ?

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    ”…“எந்தத் தமிழர்களையும் தேவையில்லாமல் சிறையில் வைத்திருப்பது தமக்கு விருப்பமானதல்ல…..”

    தேவையுடன் தான் சிறையில் வைத்திருக்கிறார் எனச் சொல்லாமல் சொல்கிறாரா?

    Reply
  • kamal
    kamal

    /எதிர்க் கட்சி வேட்பாளர் நல்லூர் கந்தசாமி கோலிலில் சேட்டைக் கழற்றி விட்டு வழிபட்டதைப் போல் மகிந்த ராஜபக்சவும் ஏதாவது தேர்தல் ஸ்ரண்ட் செய்யலாம்/

    புலிகளின் தாக்குதலால் தனக்கு ஏற்பட்ட காயத்தை தமிழ்ச்சனத்துக்குக் காட்டுவதற்காகவே சரத் சேட்டைக் கழட்டிப்போட்டு நின்றார்.

    Reply
  • Anonymous
    Anonymous

    புலம் பெயர்ந்த தமிழ் குழு எப்போதாவது அந்த மக்களுடன் நின்று, எந்த வகையில் பணி புரிந்தார்கள் என கேட்கிறேன். இவர்கள் யாரைப் பிரதிநிதிப்படுத்தப் போனார்கள்? ஒரு தமிழ் பா.உ.வை வாங்க முடியாத குழுவை மகிந்தா சந்திக்கிறதின் பின்னாலுள்ள சிந்தனை என்ன?

    Reply
  • S Kuganathan
    S Kuganathan

    தமிழ்கைதிகள் விரைவில் விடுதலை: நீதி அமைச்சின் செயலாளர் தகவல்!

    விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படவிருப்பதாக நீதி அமைச்சின் செயலாளர் சுகத கம்லத் தெரிவித்துள்ளார்.

    இந்தக் கைதிகளின் விடுதலை தொடர்பாக புலம்பெயர்ந்த தமிழ்ப் புத்தீஜீவிகள் குழு ஒன்று அவரை நேற்று சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தை நடாத்தியபோதே அவர் இத்தகவலைத் தெரிவித்தார். புலம்பெயர்ந்த தமிழ் புத்திஜீவிகள் குழு ஒன்று ஜனாதிபதியை அண்மையில் அலரிமாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தது.

    இச்சந்திப்பின்போது தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இந்த தமிழ் அரசியல்கைதிகள் விடுதலை குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தபோது,

    “எந்தத் தமிழர்களையும் தேவையில்லாமல் சிறையில் வைத்திருப்பது தமக்கு விருப்பமானதல்ல. சட்டப்படியான விசாரணைகளை துரிதப்படுத்தி அவர்களை விடுதலை செய்யுமாறு ஏற்கனவே தான் நீதி அமைச்சின் செயலாளருக்கு பணித்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

    இதனையடுத்து இந்த குழுவின் சார்பில் டாக்டர் நொயல் நடேசன் (அவுஸ்திரேலியா), இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (பிரிட்டன்), டாக்டர் இராமநாதன் நரேந்திரநாதன் (அவுஸ்திரேலியா) சபாபதி சுப்பையா குகநாதன் (பிரான்ஸ்) ஆகியோர் நீதி அமைச்சின் செயலாளரை அவரது அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை சந்தித்து இதுதொடர்பாக கலந்துரையாடினர்.

    இந்தச் சந்திப்பின்போது, உடனடியாக சட்ட மா அதிபர் மொகான் பீரிஸ் இவர்களுடன் தொடர்புகொண்ட அவர், இந்தக் கைதிகளின் விடுதலை தொடர்பாக சிறப்பு அதிகாரிகள் குழு ஒன்று நியமிக்கப்பட்டு அவர்கள் கைதிகள் ஒவ்வொருவரினதும் விடயங்கள் தொடர்பாக தனித்தனியாக ஆராயப்பட்டு வருவதாகவும் இவர்களில் பெரும் எண்ணிக்கையானவர்கள் ஒரு சில நாட்களில் விடுவிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

    கொழும்பு சிறையில் 359 பேரும், மகசின் சிறையில் 120 பேரும், மட்டக்களப்பு சிறையில் 9 பேரும், அனுராதபுரம் சிறையில் 45 பேரும், போகம்பரை சிறையில் 56 பேரும் திருகோணமலை 66 பேரும், தங்காலை 2 பேரும், நீர்;கொழும்பு 13 பேரும் தற்போது தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் இவர்களில் பெரும்பான்மையானவர்களே விடுதலை செய்யப்படவிருப்பதாகவும் நீதி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

    Reply
  • Appu hammy
    Appu hammy

    regardless of Tamils or Sinhalese, all who has commited war crimes should be punished. People should remember that international laws are above national law. By doing so, we can stop the repeation of the war crime not only in Sri Lanka, but also in the other part of the world.

    Reply