ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்குச்சாவடிகளில் முறைகேடுகள், குழப்பங்கள் நடைபெறாதவாறு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்கு பொலிஸ் திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களத்தின் சிரேஷ்ட ஊடக பேச்சாளர் (சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்) நிமல் மெதிவக்க தெரிவித்தார்.
நீதியும், நேர்மையுமான ஒரு தேர்தலை நடத்துவதற்கும் அமைதி யான முறையில் மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்வதற்கும் ஏதுவாக வாக்குச் சாவடிகள் அனைத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாகவும் இதற்கான திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் தலா இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வீதம் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள். 5 வாக்குச் சாவடிகளை உள்ளடக்கியதாக நடமாடும் பொலிஸ் ரோந்து சேவையும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
இலங்கையிலுள்ள 432 பொலிஸ் நிலையங்களுக்கும் தலா ஒரு குழு வீதம் கலகம் அடக்கும் பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்படவும் உள்ளதென பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.
அத்துடன் தேர்தல் சட்டங்களுக்கு அமைவாக பொலிஸாரின் பாதுகாப்புடன் கட்டவுட்டுகள், பேனர்கள், போஸ்டர்கள் அகற்றும் வேலைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.