பாராளுமன்ற அமர்வுகளை அடுத்த வருடம் ஜனவரி 5 ஆம் திகதி வரை ஒத்திவைப்பது தொடர்பான பிரேரணை 35 மேலதிக வாக்குகளால் நேற்று (8) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 89 வாக்குகளும் எதிராக 54 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
பாராளுமன்ற அமர்வுகளை 2010 ஜனவரி 5 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கான பிரேரணையை சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சபையில் சமர்ப்பித்தார். ஆனால் இதற்கு ஐ.தே.க., ஜே. வி.பி ஆகிய கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்ததோடு இந்த பிரேரணை தொடர்பில் வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென கோரின.
இந்த வாக்கெடுப்பில் ஆளும் தரப்பு எம்.பிக்கள் ஆதரவாக வாக்களித்ததோடு ஐ.தே.க, ஜே.வி.பி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர். பாராளுமன்றம் டிசம்பர் 8, 9, 10 மற்றும் 11ஆம் திகதிகளில் கூடும் என பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் ஏனைய தினங்களில் பாராளுமன்றம் கூடுமா என ஜே. வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா,
இந்த வருடத்தில் டிசம்பர் 8ஆம் திகதி மட்டுமே பாராளுமன்றம் கூடும் என கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் அரசாங்கம் அறிவித்தது. சில எதிர்க்கட்சிகள் இதற்கு ஆட்சேபம் தெரிவித்ததால் இது தொடர்பான பிரேரணை சபையில் முன்வைக்கப்பட்டது. இதற்கு முன்னரும் இவ்வாறு சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.