”இப்ப நாங்கள் அழுவதில்லை. சும்மா பார்த்துக் கொண்டிருப்பம். என்ன நடக்கிறது எண்டு.”: நேர்காணல் தொகுப்பு : ரி சோதிலிங்கம் & எஸ் குமாரி

வன்னி முகாமிலிருந்து தனது உறவினர்களால் பொறுப்பெடுக்கப்பட்டு சாவகச்சேரி – மிருசுவில் பகுதியில் மீள குடியேற சென்ற இளம்தாயொருவர் மனம்விட்டு தனது அனுபவத்தை தேசம்நெற்றுடன்  பகிந்துகொண்டார். சில நாட்களாக அவருடன் உரையாடியதைப் பதிவு செய்து இங்கு தொகுத்துள்ளோம். தனது அனுபவத்தையும் அங்குள்ள நிலைமைகள் மற்றும் தான் இடம்பெயர்ந்த வாழ்கையில் எதிர்கொண்டவற்றையும் அவர் பகிர்ந்து கொண்டார். அவ்விளம்தாய் கல்லூரிப் படிப்பையோ அல்லது பல்கலைக் கழகப்படிப்பையோ கற்றதாகத் தெரியவில்லை. ஆனால் கல்லூரியிலும் பல்கலைக் கழகத்திலும் கற்க முடியாத வாழ்க்கைப் பாடத்தை அவர் கற்றுத் தெளிந்துள்ளார். ஆய்வாளர்களும் பேப்பர் மார்க்ஸிஸ்டுக்களும் கைவாராத வலிந்து நிறுவ முயலும் தங்கள் அறிவுப் புலமையை அந்த தாய் போகிற போக்கிலேயே சொல்லிச் செல்கின்றார். இத்தாயினுடைய வாழ்வியல் அனுபவம் ஒரு வரலாற்றுப் புத்தகம் என்றால் மிகையல்ல. தேசம்நெற் வாசகர்களுக்காக அந்தப் புத்தகத்தை திறந்தே வைக்கின்றோம்.

._._._._._.

கச்சாய் எங்கள் சொந்த இடம். எனக்கு ஆறு சகோதரர்கள். மூன்றாவது  சகோதரன் சாவகச்சேரி புலிகளின் பொறுப்பாளராக இருந்த கேடியால் சுட்டுக் கொல்லப்பட்டவர். எங்களுடைய குடும்பம் ரெலோக் குடும்பம் என்ற காரணத்திற்காக 1985ம் ஆண்டு இந்தக் கொலை நடந்தது. மற்றைய சகோரதங்கள் சாவகச்சேரியிலும் பளையிலும் இருந்தவர்கள். அவர்களுடனும் சிலகாலங்கள் தங்கி வாழ்ந்துள்ளோம், இது புலிகளுக்கு பயந்து வாழ்ந்தகாலம். இதன் பின்னர் நாங்கள் சாவகச்சேரியை சொந்த இடமாக ஆக்கிக் கொண்டோம். புலிகளின் காலத்தில் எல்லாம் நாங்கள் சாவகச்சேரி ஆட்கள் ஆகிவிட்டோம். எமக்கு படிப்பதற்கு காசு இல்லை. தொழில் இல்லை. அப்பா தோட்டம் அல்லது கூலி வேலைதான் செய்து பிழைப்பு நடக்கும். என் தம்பி ஜந்தாம் வகுப்பு படிக்கிற காலத்தில் புலிகளின் முகாம்களுக்கு போய் வேலை செய்வார். அந்த நேரத்தில் நல்ல காசு, நல்ல சாப்பாடு கிடைக்கும். எங்கள் குடும்பத்திற்கும் சாப்பாடு கொண்டு வருவார்.

ஆனையிறவு சண்டையுடன் தம்பி புலிகளோடதான். அதற்குப் பிறகு தம்பியுடன் தொடர்பு இல்லாமல் போய்விட்டது. அவர் எங்கேயெனத் தெரியாது. இந்தக்காலம் எங்களுக்கு சாப்பாட்டுக்கே வழியில்லை. நாங்கள் கச்சாய் அங்க இங்க என்று அலைந்து திரிந்தோம். எங்கேயாவது ஏதாவது தொழில் துறை கிடைக்குமா அல்லது தோட்டம் செய்ய இடம் கிடைக்குமா என்பதுதான் எங்கட ஏக்கம். அப்பா சாவகச்சேரியில் சந்தை வேலைகளில் கொஞ்சம் காசு உழைப்பார். வேலையில் சாப்பாட்டு சாமான்கள், சந்தை சாமான்கள் வரும். இப்படியே காலம் போய்விட்டது. 1994 களில் சாவகச்சேரியில் இராணுவம் புகுந்து சுடவும் குண்டுபோடவும் தொடங்கி விட்டது. ஒருநாள் அப்பா வீட்டுக்கு வரவில்லை. எங்களுக்கும் அப்பாவிற்கு என்ன நடந்ததென தெரியாது. இந்தக்காலத்தில சாவகச்சேரியில கடைகளுக்குள் சில உடல்களைப்போட்டு எரித்தவர்கள். அதிலதான் எங்கட அப்பாவும் என்று நாங்கள் நினைக்கிறோம். புலிகளும் திடீர் திடீர் என ஏதும் செய்வாங்கள். ஆமியும் அடிக்கும். இப்படி சிலகாலம். பிறகு சனங்கள் வன்னிக்கு போய்விட்டனர். கன காலம் சாவகச்சேரி வெறிச்சோடிக் கிடந்தது.

அம்மா நான் தங்கச்சி  மூன்றுபேரும் பூநகரி வந்தோம், பிறகு கிளிநொச்சிக்கு புலிகளின் பிரதேசத்திற்கு வந்திட்டோம். கிளிநொச்சி வரமுன்னரே அடுத்த தம்பியும் புலிகளுடன் போய்விட்டார். இங்கு வந்த பிறகு நாங்கள் புலிகளுக்கு உதவி செய்தால் காசு வரும் சாப்பாடு, உடுப்பு வரும். நான் அம்மா தங்கச்சி புலிகளின் வேலைகள் செய்வோம். கூட்டுதல், துப்பரவு, தோட்டங்கள் செய்தல், அவர்களின் இடங்கள் துப்பரவு வேலைகள் செய்வோம். இந்தக் காலத்தில் தம்பியின் தொடர்பு திரும்ப வந்தது. தம்பி வரும்போது ஏதேனும் தருவார். உதவிகள் செய்வார். இந்தக் காலம் எங்களுக்கும் காசு நல்ல புழக்கம். பிறகு 8ம் வாய்காலில் ஒருவீடு புலிகளின் ஆட்கள் தந்தார்கள். சின்ன வீடு ஓடுகள் இல்லை. நாங்கள் கிடுகு தகரங்களால் வேய்ந்து அங்கேயே இருக்க ஆரம்பித்தோம்.

எங்கள் மாமாமார் வேறு பெரிய சாதி ஆட்களை கட்டிக்கொண்டு போய்விட்டினம், அவர்கள் திரும்பி வரமாட்டினம். எங்களோட தொடர்புகளும் இல்லாமல் போய்விடும். இப்படித்தான் பல அம்மா வழித்தொடர்புகள் எங்களுடன் தொடர்பு இல்லாமல் போனது. இதுகள் நாங்கள் ஆரம்பத்தில் கச்சாயில் இருக்கும்போது நடந்தது. எங்கட அண்ணாவை சுட்டதில் அம்மாவுக்கு இப்பவும் தான் புலிகளில் கோபம். கேடி சாவகச்சேரி கொடிகாமம் பகுதியில் எத்தனை ரெலோ பொடியங்களை சுட்டவங்கள் என்று அம்மா திரும்ப திரும்ப சொல்லி அழுவா. வருடம் தீபாவளி நல்லநாள் பெருநாள் வரும்போதெல்லாம் அம்மா இதை சொல்லி அழுவா. அப்பாவும் போனபிறகு எங்களுக்கு எல்லாம் மரத்துப்போச்சு. எங்கட அண்ணா லோகல் ரெயினிங் எடுத்தவராம்.  சாவகச்சேரி பொலீஸ்சை ரெலோ தாக்கும்போது ரெலோவுக்கு வேலை செய்தவராம். அம்மா இப்பவும் இதை சொல்லுவா. அம்மாவுக்கு இது பெரிய தாக்கம். எங்களுக்கு அண்ணா என்றுதானே இருந்தது. ஆனால் அம்மா நெடுக கதைப்பா புலிகளைப் பற்றிய கதைவரும் போதேல்லாம் அம்மா அண்ணாவைப் பற்றிய கதையை தொடக்குவா.

நான் கலியாணம் கட்டினவர் புலிகளில் இருந்தது எனக்கு தெரியாது. நான் நினைத்தேன் இவரும் என்னைப்போல புலிகள் சொல்லும் வேலைகளை செய்யதானே வாறவர் எண்டு நினைத்து பழகிக் கொண்டேன். 2001ல் எங்களுக்கு ஒரு பிள்ளை. இப்ப அவரும் எங்க எண்டு எனக்கு தெரியாது. இந்த கடந்த மே சண்டைக்குள்ளே முடிஞ்சிருக்க வேணும். என்னோட அவர் குடும்பம் என்கிற மாதிரியே இல்லை. எப்ப பார்த்தாலும் புலிகளிட்டை போயிடுவார். இடைக்கிடை வந்து போவார். எனக்கு என்ன ஏது என்றெல்லாம் தெரியாது. இப்படித்தான் எங்கட வாழ்க்கை போனது. எதிலும் ஒரு நிரந்தரம் இல்லாமல் வாழ்க்கையை ஓட்டியிருக்கிறம். அவருடைய சாதி சனம் அப்பா அம்மா யார் எங்க என்றுகூடத் தெரியாமல்த்தான் இருக்கிறம். இப்ப இப்படி அகதி முகாமில இருக்கிறமெண்டால் ஏன்? எத்தனையோ கதைச்சிச்சினம். பேசிச்சினம். இப்ப என்னடாவென்றால் அகதி முகாமில அரசாங்கத்தின்ர சாப்பாட்டை கேட்டு நிக்கிறம். ஏன்? இவ்வளவு காலமும் சொன்னதுகள் எல்லாம் பொய்யா?

எனது கணவர் தப்பி ஓடியிருப்பார் என்று நான் நினைக்கவில்லை. சிலருக்கு இயக்க வெறி ஆமியுடன் அடிபட்டுத்தான் சாவேன் என்கிற ஆட்கள். நான் நினைக்கவில்லை இவர் உயிருடன் இருப்பார் என்று. 

இயக்க பெயர் ‘தி…..’ சொந்தப்பெயர் ‘தி…… யோ…..’ பெயர்கள் எவ்வளவு உண்மையானவைகள் என்று கூட நாங்கள் யாரையம் கேட்டதில்லை. இப்ப நான் பல விடயங்களில் விடிந்து எழும்பினமாதிரி இருக்கிறது. இதற்கு முன்பு இப்படி யோசித்தது இல்லையே? வாழ்க்கை என்பது எவ்வளவு விடயங்கள் என்பதை இப்ப இந்த முகாமில் இருக்கும்போது யோசிக்கிறேன்.

இப்பதானே தெரியுது நாங்கள் என்ன மாதிரியான சூழ்நிலையில் இருந்திருக்கிறோம் என்று. இந்த கடைசியாக சண்டை பிடிக்கும்போது கனசனம், புலிகள் எல்லாரும் காட்டுக்கை ஓடினவையள், அவையளுக்கு என்ன நடந்ததோ?, சிலவேளை அவர்களும் பிடிபட்டு இருப்பினம், அல்லது சண்டைபிடித்து செத்திருப்பினம், ஆமிக்கு இது பெரிய பிரச்சினையாக தெரியவில்லை. ஏன் இவ்வளவு காலமும் இப்படியான அழிவை உருவாக்காமல் விட்டுட்டு இருந்தவையள். காட்டுக்கை ஓடின புலிகளுக்கு பிறகும் தொடர்பு இருந்தது. இவையள் சொல்ல சொல்ல அவையளும் அங்க இருந்து அடிச்சவையள் என்று கேள்விப்பட்டோம். எல்லாம் காலையில வெளிக்கிட்டால் மத்தியானம் சேர்ந்திடக்கூடிய காடுகள்தான் பெரிய தூரமில்லை.

முகாமில் நான் அம்மா பிள்ளை தங்கச்சி நாலுபேரையும் இன்னொரு குடும்பத்துடன் பொலிஸ் சேர்த்துவிட்டது. அவையும் 8ம்வாய்காலில் இருந்தவையள். ஆனா எங்களுக்கு அவையளை பழக்கமில்லை. இவையின்ர பிள்ளையை புலிகள் வீட்டுக்கு ஒரு ஆள் எண்டு பிடிச்சுப்போய் பிறகு பிள்ளையே தானாக ஓடிவந்துவிட்டது. இப்ப எங்களோட இருக்குது. பொலீஸ்க்கு தெரியாது. மே மாதம் சண்டை நேரம் இவைகளுக்கு ‘தப்பிப் போனா சுடுவோம்’ எண்டு புலிகள் மிரட்டியதாலே இவர்கள் தப்பி போகாமல் இருந்தவர்கள். ஒருநாள் இவையள் வெளிக்கிட்டு ஒடிப்போக புலிகள் பிடிச்சு வந்திட்டினம். இவர் அந்த நேரம் புலிகள் கேட்ட வேலைகள் செய்தவர் எண்டதால் சும்மா விசாரித்துப்போட்டு விட்டவையள். இல்லாட்டி சுட்டிருப்பினம். அதுக்குப்பிறகு புலிகள் இவையளை போகச் சொல்லியும் இவையள் போகவில்லை. போகச் சொல்லிப்போட்டு சுட்டுப்போடுவினம் எண்ட பயம். அவையள் கெட்டிக்காரர்கள் தங்கட குடும்பத்தோட வந்திட்டினம். கன குடும்பங்கள் தங்கட ஒரு குடும்ப உறுப்பினரை எண்டாலும் இழந்திருக்கினம். எவ்வளவு தான் புலிகள் என்ன சொன்னாலும் சனம் சரியான புத்திசாலிகள். எப்பிடி எங்கேயிருந்து தப்புவது எண்டு ஆட்களுக்கு தெரியும்.

இப்ப சாவகச்சேரி முந்தின மாதிரியே இல்லை. ரவுன் பக்கம் நல்ல மாற்றங்கள். ஆட்கள் கடைகள் கண்ணிகள் எண்டு தொடங்கி விட்டினம். சிலவேளை எங்களுக்கு வன்னி  நிலைமைகளுடன் பார்க்கும்போது இப்படியோ அல்லது முகாமில் இருந்து வரண்ட மண்டைக்கு இப்படி தெரியுதோ என்னவோ. முன்பக்கங்கள் எல்லாம் நல்லாக துப்பரவாகத்தான் இருக்கு. ஊர்மனைகள் பல நல்ல இடங்கள் தோட்ட காணிகள் எல்லாம் காடுபத்திப் போய்விட்டது. முன்பு நாங்க தோட்டம் செய்த காணிகள் பார்க்கவே ஏலாது. அம்மாவுக்கு எல்லா இடங்களும் தெரியும். எங்களுக்கு தெரிஞ்ச சனங்கள் ஒண்டு இரண்டு பேர்தான். மற்றவர்கள் எல்லாம் புதிய பரம்பரை. பழைய ஆட்கள் வெளிநாடு போய்விட்டினம். இல்லாட்டி கொழும்பிலாக்கும். என்னுடைய பார்வைக்கு முந்தினமாதிரி சாதி சனம் எண்டு பார்க்க முடியாதமாதிரி இருக்குது.

இப்ப எங்களுக்கு குடும்ப அட்டை தரப்பட்டுள்ளது. வேற இடங்கள் போகப் பயம். யாரும் என்ன கேட்பாங்களோ என்ற பயம். ஒரு கொஞ்சப்பேர் தாங்கள் தான் எல்லாம் எண்டு நடக்கினம். அவையளின்ர வேலையே யாரும் புலியோ – புலிகளுக்கு ஆதரவு கொடுக்கினமோ எண்டு அறிவது தான். வன்னியை விட இங்கே தான் ஆட்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் அதிகமாக பயப்பிடுகினம். ஆனால் ஆமி நல்லா நடக்குது. சனங்களிடம் தமிழில் பேசுகிறாங்கள் இப்படியே இருந்தா சனமும் பிரச்சினை எண்டு சொல்லாது தானே.

போர் முடிஞ்சது நல்லது போலக்கிடக்கு. எங்களுக்கு புதிய ஊர் வந்தமாதிரி இருக்கிறது. அப்பாவின் அண்ணா இங்கே இருக்கிறார்கள். அவர்களின் மகன்கள் தான் எங்களை இங்கே எடுத்தவர்கள். அவரோ அரசாங்கம் செய்தது சரி என்கிறார். அவையளுக்கு எண்டைக்குமே புலிகளைப் பிடிக்காது. அவருடைய மனைவி ஆட்கள் எல்லாரும் ஈபிஆர்எல்எப் இயக்கத்தோட தொடர்பில் இருந்தவையள். இவையள் எல்லாரும் இப்ப ஈபிடிபி யுடன் வேலை செய்கினம் போலிருக்கிறது. நாங்கள் எதுவும் நடக்கட்டும் எண்டு இருக்கிறம். பல தடவைகள் பல சாவுகளை கண்டுவந்தவர்கள் நாங்கள். இந்த கடைசி யுத்தத்தில்தான் இடம்மாறி மாறி ஓடுறம் என்றில்லை. நெடுக மாறிமாறித்தான் ஓடி ஒளித்து வாழ்ந்திருக்கிறோம். இந்த முறை யுத்தத்தில் இடம் மாறுவதுடன் செல்லடி ரவுண்ஸ் எண்டு ஓடிஓடி பயந்து திரிந்தோம். நாங்கள் கஸ்டப்பட்டு விட்டோம்.

இப்ப இருக்கும் வீடும் நிரந்தரமில்லை. இதுவும் யாருடையதோ தெரியாது. பெரிய வீடு, பெரிய வளவு. வன்னியில பல பேருடன் இருந்தோம், இப்ப தனிய. ஒரு தென்னைமரத் தோட்டம். இங்கு எங்களுக்கு யாரும் என்ன செய்தாலும் யாருக்கும் எதுவும் தெரியவராது. சனத்துக்கும் யாருக்கும் என்ன நடந்தாலும் தெரியவும் விருப்பமில்லை. இங்கே இருப்பது சரியான பயம். இப்ப கொஞ்சம் பயம் தெளியுது. முகாமில் இருக்கும்போதும் இவ்வளவு பயப்பிட வில்லை. யுத்தத்திலிருந்து வந்த எங்களுக்கு இதுதான் பயமாக இருக்கிறது எண்டாலும் எது வந்தாலும் எதிர்கொள்ளுவது நாங்கள் தானே, எத்தனைகளை கண்டநாங்கள். ஆனாலும் எதுவும் நடக்கட்டும் எண்டுதான் இருக்கிறோம்.

எத்தனையோ சாவுகளையும் அழுகைகளையும் பார்த்து விட்டோம். இப்ப நாங்கள் அழுவதில்லை. சும்மா பார்த்துக் கொண்டிருப்பம். என்ன நடக்கிறது எண்டு. பார்ப்பமே அடிபட வேணும் என்று ஒரு சூழ்நிலை வந்தால் என்ன செய்வது சந்தித்தே தீரவேணும். அதிலையும் நாங்களும் சாகலாம். நாங்கள் பிறந்ததே கஸ்டப்பட்ட குடும்பத்தில். பணக்கார குடும்பத்திற்கு தான் மரியாதை, சொத்து சேர்த்த பணம் எண்டு பிரச்சினை. எங்களுக்கு அப்படி ஒண்டுமில்லை. எங்களுக்கு எங்கள் வாழ்க்கை பற்றிய ஏக்கம், பயம் இல்லை. இது வன்னியில் புலிகளோட இருக்கும் போதே இது இல்லாமல் போய்விட்டது. புலிகளும் ஒருமாதிரியான தைரியத்தில் எங்களை வளர்த்திட்டாங்கள்.

நாங்கள் அமைதியாக இருக்கிறம். பெரிசா கொதிச்சு எழும்ப வேணும் என்றால், செய்வது என்றால் எல்லாம் சரிவந்தால் செய்வோம். நாங்கள் தமிழர்கள் போராடியவர்கள் என்ற நிலைப்பாட்டை புரிந்தவர்கள். என்னிடம் வந்தால் நாங்களும் இணைவோம்.

எனது பிள்ளை தானாக வளரும், தானாக படிக்கும். நான் எப்பிடி படித்தேன், வளர்ந்தேன். அப்படி அதுவும் நடக்கும். எல்லாருக்கும் ஏதோ ஒருவழி உண்டு. அது தானா வரும். எங்களிட்டை வரும் வரை பார்த்திருப்போம். இங்கு எல்லாரும் எல்லாரையும் பார்த்துக் கொண்டிருக்கிற இடம் சின்ன சின்ன சந்தேகங்களும் பெரிய பிரச்சினைகளை கொண்டுவரும் போல இருக்கு.

எனக்குப் படிக்க விருப்பம் எப்படி படிப்பது. ஆங்கிலம் படிக்க விருப்பம். நிறைய பத்தகங்கள் படிக்க விருப்பம். ஆங்கிலப் புத்தகங்கள்தான் சரியாக விடயங்களை எழுதும். குமுதம், ஆனந்த விகடன் என்று இந்த குப்பைகள் எங்களுக்கு என்ன சொன்னது. எப்ப சரி சனத்திற்கு நல்ல விடயங்களை எழுதியிருக்காங்களா? கற்பனையாகவே இருக்கும் ஒரு ஆனந்தவிகடன் குமுதத்தில் ஒவ்வொரு தடவையும் தோட்டங்கள் பற்றியோ, ஒரு விவசாயிகளுக்கு ஒரு புத்திமதியோ எழுதியிருந்தாலும் எங்களுக்கு உதவியிருக்கும். இந்த புத்தகங்கள் பணக்காரருக்கு ஒரு பிரச்சினையுமில்லை கற்பனையாக வாசிக்கத்தான் உதவும். எங்களுக்கு அல்ல.

சாவகச்சேரியில் இருக்கிற மக்கள் எல்லாருமே வெளிநாடுபோக வேண்டும் என்றே உள்ளனர். வெளிநாடுகளில் உள்ள நீங்கள் எல்லோரும் ஏதோ எல்லாம் பெரிசு பெரிசா காட்டினால் அதைத்தானே மற்றவர்களும் ஆசைப்படுவினம். ஏன் அவர்களும் ஆசைப்படக் கூடாதா? எனக்கு அப்படி இல்லை. ஆனால் வன்னியில் புலிகளின் பெரியாட்களின் பிள்ளைகள் எல்லோரும்  வெளிநாடு போவதும் வருவதும் எல்லோருக்கும் தெரியும். அவர்கள் தங்களுடைய கப்பல்களால்த்தான் போய்வருவதாக அறிகிறோம். அவர்களுக்கும் இராணுவத்தின் பெரியவர்களுக்கும் தொடர்புகள் அதிகம் உண்டு என எல்லோரும் பேசுகிறார்கள். போராளிகளுக்கும் அவர்களின் வெளிநாடுகளில் உள்ள சிலருக்கும் கூட தொலைபேசி தொடர்புகள் இருந்தது.

புலிகளின் கீழ்மட்ட உறுப்பினர்கள் பெரியாட்கள் பற்றி கதைக்க மாட்டினம். அதெல்லாம் இரகசியமாகவே கருதப்பட்டது. கீழ்மட்டத்தில் உள்ளவர்களுக்கு புலிகள் தங்களை சாக அனுப்புகிறார்கள் என்ற குற்ற உணர்வு பல காலமாகவே இருந்தது. புலிகளின் இயக்கத்திலிருந்த பிரச்சினை இது. ஆனால் இதுபற்றி யாரும் பெரிதாக பேசுவதில்லை. சிலர் தங்கள் தலைவர்களிடம் இதுபற்றி சத்தம் போட்டுள்ளனர். சில லோகல் தலைவர்கள் தாமும் சேர்ந்து சத்தம் போட்டுள்னர். சில பெரிய தலைவர்கள் இவர்களுக்கு அடித்தும் உள்ளனர். புலிகளின் கீழ்மட்டத்து போராளிகள் சிலர் இராணுவத்திடம் ஓடியதற்கு இதுவும் ஒருகாரணம். தாம் சாக வேண்டி வரும் என்ற காரணத்தை தெரிந்தே இப்படி தப்பி ஓடினார்கள். இது கிளிநொச்சியில் நடந்தது. சில பிரிவினர் ஆயுதங்களுடன் தலைவர்களால் அனுப்பப்பட்ட போதிலும் அவர்கள் ஆயுதங்களை எறிந்துவிட்டு உடுப்புக்களை எல்லாம் களைந்து விட்டு நடந்து போய் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளனர். இப்படி போனவர்களை பின்னால் இருந்த புலிகள் சுட்டும் கொலை செய்துள்ளனர். பலவந்தமாக பிடித்துப் போய் இயக்கத்தில் சேர்த்தவர்களில் பலர் இதை செய்துள்ளனர். இதுவும் ஒருவகையில் புலிகளிடமிருந்து தப்பி ஓடுதல்தான்.

புலிகளின் குறுப் லீடர்ஸ் பெரிதாக படித்தவர்கள் இல்லை. எப்பவும் சிங்களவனுக்கு எதிராக போராடும் தன்மை கொண்டவர்களாகவே இருப்பார்கள். அதிகமான குறுப்லீடர்ஸ் தலைவர்களை சந்தித்ததே கிடையாது. எப்ப சரி ஏதாவது விழாக்கள் மாவீரர் தினம் எண்டு நடந்தால்  கொண்டாட்டம் தான். பெரியவரைப் பார்க்க எண்டு போறது. அங்க சிலவேளை சின்ன தலைவர்கள் தான் வருவினம். பெரிய தலைவர்களை சந்திப்பதே பெரிய விடயம். பல போராளிகள் சொல்லுகிற இடத்தில நின்று அடிப்பாங்கள் சண்டை பிடிப்பாங்கள். மற்றது யார் அடுத்த பக்கத்தில நின்று அடிக்கிறாங்கள் என்றே தெரியாது. சொல்லுற பக்கம் சொல்லுகிற நூலுக்கு அடிப்பாங்க.சொல்லுகிற திசைக்கு அடிப்பாங்க தவறுவந்தால் இவர்களை குற்றம் சொல்லுவாங்கள். இந்தப் பிரச்சினை பற்றி பல புலி போராளிகள் முன்பே பிரச்சினையாக சொல்லுவாங்கள். இவங்கள் எங்களை எப்பிடி குறை சொல்லமுடியும் என்று சத்தம் போடுவாங்கள்.

ஆனால் புலிகளுக்கு இந்த நிலை வரும் என்று எந்தப்புலியும் கனவு கூட காணவில்லை. எப்படியும் தலைவர் ஒரு வழி காண்பார். திரும்பியும் எங்கட இடங்களை பிடிப்போம், அடிபடுவோம் என்றுதான் எல்லாரும் நினைத்தவை. படிச்ச சனம் தங்கட படிப்பு வேலை உத்தியோகம் எண்டதில் சரியான அக்கறை. அதுக்காக இதெல்லாம் தேவையில்லாத சண்டை என்ற பேச்சு அவர்களிடம் இருந்தது. தங்களுக்குள்ள கதைப்பினம். சிலர் புலிகளைப் பார்த்து பேசுவினம், திட்டுவினம் பெரிசா சொல்லப்பயம் சுடுவார்கள் என்று. புலிகள் இப்படி ஆட்களை சந்தேகம் எண்டதும் சுடுவதும் சுட்டதும் தவறு. இது பல பிரச்சினைகளின் ஆரம்பமாக இருந்திருக்கிறது. எல்லாம் காலம் கடந்து தவறி விட்டது.

நாங்கள் கொஞ்சக் காலம் இங்கே இருந்திட்டு மிருசுவில் போக உள்ளோம் எங்களின் வேறு சொந்தக்காரர்கள் உள்ளனர்.

இப்போது சாவகச்சேரி கொடிகாமத்தில் பெருவாரியான ஆட்கள் ஈபிடிபியை ஆதரிக்கிறார்கள் போலத் தெரிகிறது. அவரிடம்தான் எல்லாம் எடுக்கலாம் பெறலாம் என நம்புகிறார்கள். வயது வந்த ரெலோ ஆட்கள் இப்பவும் ரெலோவுக்குத்தான் ஆதரவாக உள்ளனர். இவர்கள் ரெலோ திரும்ப வந்து இயங்கும் என்று நம்புகிறார்கள். எனது உறவினர்கள் ஈபிடிபிக்கு தான் ஆதரவு காரணம் ஈபிடிபி நிறையவே செய்கிறார். வடக்கு அபிவிருத்தித் திட்டம் என்று நிறையவே வேலைகள் நடக்கின்றது. இந்த வேலைகளை குழப்ப யாரும் இடமளிக்க மாட்டார்கள். அரச உதவி டக்ளஸ் மூலம்தான் கிடைக்கும்என நம்புகினம்.

இளவயதினர் போன், வாக்மான், ஜபொட், கமரா, ரிசேட், கப் எண்டு இராணுவத்திடம் உறவு கொள்கிறார்கள். இராணுவம் நல்லா தமிழ் பேசுகிறார்கள். அவர்களுக்கும் பேச வசதியா இருக்கு. சில பெண்பிள்ளைகள் கூட இராணுவத்திடம் பேசுகிறார்கள். அவர்களுக்கு ஒத்த வயதானவர்களிடம் உறவுகளும் வளர்கிறது என எனது அவதானத்திற்கு நினைக்கிறேன். தாய் தகப்பன்மார்கள் கூட பிள்ளைகளை கட்டுப்படுத்த மாட்டார்கள். முன்பு புலிகளுக்கு ஆதரவு அளித்த பலர் இன்று டக்ளஸ்க்குத் தான் வேலை செய்கிறார்கள். இயக்கம் பெரிய பிழை விட்டுவிட்டது. எதுக்கெடுத்தாலும் சுடு, அடி, சண்டை எண்டு இருந்திட்டார்கள். சனங்கள் என்றோ அவர்களின் பிரச்சினை என்பதையோ மற்ற இயக்கங்களை சேர்த்து செயற்பட வேணும் எண்டோ யோசிக்கவில்லை. எல்லோரையும் சேர்த்து போயிருந்தா இந்த பிரச்சினைகள் பல வந்திராது.

முஸ்லீம்கள் இருந்திருந்தால் இயக்கம் எப்பவோ இல்லாமல் போயிருக்கும் ஏனெண்டால் அவை எப்பவும் அரசாங்க அணைவிலதான் இருக்க விரும்புவினம். அரசாங்கத்திற்காக எதையும் செய்வினம். மாறி மாறி வாற அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்துதான் தாங்கள் தங்கட அரசியலை பார்க்கிறவர்கள். இயக்கத்துக்கு வேற வழியில்லை. அவையும் நாங்கள் போராட தங்களுக்கு மாநிலம் வேணும் எண்டால் இதென்ன. அவையும் அரசாங்கத்திற்கு எதிராக போராடலாம் தானே. எப்படி நாங்க போராட அவையள் அம்பாறையில் மாநிலம் கேட்பது. இதை முந்தியே கிழக்கு போராளிகள் அடிக்கடி கதைப்பினம்.

முஸ்லிம்கள் எப்பவும் சமயம்தான் முக்கியம். சமயம் தான் கதைப்பினம் தமிழ் இரண்டாம் பட்சம்தான். எங்களோட கதைக்கும்போது தமிழ் எண்டும் சிங்களவர்களோடு கதைக்கும்போது தாம் சிங்களம் படித்தவர்கள் என்றும் பேசுவார்கள். இதை நல்லாக நீங்களே அவதானிக்க ஏலும். இதனாலேதான் இயக்கம் இவர்களை நம்பவில்லை. அவர்களும் தமிழ்தான் தங்கட மொழி என்றால் ஏன் முஸ்லீம் கட்சிகள் தேவை. தமிழ் கட்சிகளல்லோ தேவை. அப்ப அவை சமயம் தான். இது எப்பவும் பிரச்சினையாகத்தான் இருக்கும்.

எனக்கு சிலர் காசு தந்தவைகள். பெரிசின்ர ஆட்கள் எண்டதான் நினைக்கிறேன். ஆனால் அவை சொல்லுகினம் எல்லாம் முடிஞ்சு போச்சு அங்க வன்னியில் ஒருத்தரும் இல்லை எல்லோரும் செத்துப் போயிட்டினம் என்று. எனக்கும் இது தெரியும். ஆனால் பல போராளிகள் கிளிநொச்சி சண்டையின் போது ஆனையிறவு பக்கத்தால் தப்பியோடினவர்கள். அப்படி வந்தவர்கள் இன்னும் பளை மிருசுவில் பகுதியில் இருப்பினம் என்றுதான் நான் நினைக்கிறேன். பிடிபடாமல் இருக்கவும் சந்தர்ப்பம் உண்டு. இதுதான் இராணுவம் இந்தப் பகுதியை கவனமாக அவதானிப்பது என்று நான் நினைக்கிறேன். அதனால் கொஞ்சம் சந்தேகம் எண்டாலே இராணுவம் வந்து விடும். எல்லாப் பக்கத்திற்கும் சந்தர்ப்பம் உண்டுதானே.

சாகவச்சேரி பிரதேசம் முன்னேற்றுவதை பார்த்தால் மகிந்தா யாழ்ப்பாணத்தில் தேர்தலில் வெற்றி பெறுவார் போல இருக்கிறது. சனத்திற்கு சந்தோசம் வாழ்க்கைதான் முக்கியம். சண்டை வேண்டாம் என்று நினைக்கிறார்கள்.

என்ன சொன்னாலும் சிங்கள நாட்டுக்காரங்களை நம்பவே முடியாது. எத்தனை வருடங்கள் எங்களின் உரிமைகளை ஏமாற்றியவர்கள்தான் இந்த சிங்களவர்களும் சுதந்திரக்கட்சியும், ஜக்கியதேசியக்கட்சியும்.

இங்க யாழ்ப்பாணத்தில சனங்களின் போக்கு மாறின மாதிரி வெளிநாடு போனசனங்களும் மாறியிருப்பார்கள். இனி எல்லாம் ஒன்றாகி விடுவாங்க எல்லாம் முடிந்துவிடும்.

ரிஎன்ஏ கூட்டணி எல்லோரும் முன்பு அடிபட்ட கோபம் வைச்சுத்தான் நடக்கிறார்கள். புலிகள் இவர்களை என்றுமே நம்புவதில்லை. நம்பவும் இல்லை. முன்பு புலிகள் மற்ற இயக்கங்களை கொன்றது தவறாகிப் போய்விட்டது. இதை எல்லோரும் கதைக்கினம். அவையள் திரைமறைவில செயற்படுவினம் என்பது புலிகளுக்கு தெரியும். அதால புலிகள் நம்பவில்லை. புலிகள் முந்தியே இந்த கட்சிகளுடன் சந்தோசமாக எல்லாப் பிரச்சனைகளையும் தீர்த்து இருக்கலாம். பிழைவிட்டிட்டினம். அரசியலைப் பற்றி கவலைப்படாமல் எல்லாம் இராணுவ நடவடிக்கை தான் என இருந்திட்டாங்கள். இது பிழை எண்டு இப்ப விழங்குது. எல்லாம் காலம் கடந்து போய்விட்டது.

மன்னார்ப் பகுதிக்கு ஆமி அடிக்க வரும்போது புலிகள் தங்களுக்கு ஆபத்து என்று விளங்கிக் கொண்டார்கள். ஓடிவிட்டாங்கள். அங்க கொஞ்சம் பிடிச்சுப்போய் பயிற்ச்சி கொடுத்தவர்களை நின்று அடிபடுங்கோ என்றுவிட்டுவிட்டு ஓடிவிட்டாங்கள். அந்த புதிய பிள்ளைகளால் தாக்குபிடிக்க முடியாதுதானே. அதிலும் பலர் பெண் பிள்ளைகள். பலர் துவக்குகளை போட்டு விட்டுப்போய் சரணடைந்து விட்டார்கள். புலிகள் அப்பவே கிளிநொச்சியிலிருந்து முல்லைத்தீவுக்கு ஓடிவிட்டாங்கள். அதால கிளிநொச்சியில பெரிய அடிபிடி இல்லை. இதிலயையும் பிடிச்சு வந்த பிள்ளைகளை அடிபடச் சொன்னால் அவர்களும் சரணடைந்து விட்டார்கள். சரணடைந்தது மட்டுமல்ல ஆமிக்கு என்ன எங்க என்று எல்லா விபரங்களையம் சொல்லிக் கொடுத்துவிட்டார்கள். ஆமிக்கும் கிளிநொச்சி பிடிக்க இலகுவாகிப் போய்விட்டது.

புலிகளிட்டை செல் இல்லை. பெரிய ஆட்டிலறி இல்லை. இருந்த ஒண்டு இரண்டுக்கு செல்கள் இல்லை. வந்த செல்கள் எல்லாம் கப்பலோட கடலில் அடித்து விட்டாங்கள். ஆட்டிலறி பெரிய சாமான்கள் இல்லாமல் சண்டையில் வெல்ல முடியாதுதானே. வெற்றியே பெரிய சாமான்கள் தான், தான் வெற்றியை தீர்மானிப்பது பெரிய சாமான்கள் தான். துப்பாக்கி சண்டை என்பது எல்லாம் இதற்குப்பிறகு தான். இந்த இடத்திலேயே தோல்வி புரிந்து விட்டது புலிகளுக்கு. ஆனால் புலிகள் மாற்று வழிதேடும் முயற்ச்சிகள் படுதோல்விதான். இந்த இழப்புக்கு காரணம் இது தலைமைகளின்ர தவறு. இதுபற்றி ஏற்கனவே யோசித்திருக்க வேண்டும் எத்தனை வருடமாக போரை நடத்திறவர்கள் இது பற்றி ஏன் சிந்திக்கவில்லையோ?

புலிகளுக்கு மட்டுமல்ல வன்னி சனங்களுக்கும் தெரியும் புலிகள் தோற்பினம் எண்டு. சனங்கள் வவுனியாவிற்கு ஓட வெளிக்கிட்டுவிட்டது. ஓடிப் போறவர்களை தடுப்பதே பெரிய போராகிவிட்டது. இதனால சனமும் புலிகளும் அடிபட தொடங்கி விட்டது. சனங்களை கட்டி இழுத்தால் பிறகு எப்பிடி மக்களுக்கு போராடுறோம் எண்டு சொல்லுறது. இதில இருந்து தான் இந்த தமிழ் மக்கள் அழிவு ஆரம்பிக்கிறது. மக்களை தன்பாட்டில் போகவிட்டிருந்தால் மக்களில் பலர் தப்பியிருப்பினம். இவ்வளவு இழப்புகளும் தமிழரின் சொத்துக்களும் அழிந்திருக்காது. முகாமில் இருக்கிற சனங்கள் இதை  திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டே இருக்கும். சில சனத்திற்கு இதால விசராக்கியும் போட்டுது. இதில் நிறைய உண்மையிருக்கு எண்டுதான் நானும் நம்புறேன். தலைமைக்கு இதுகள் விளங்கவில்லையோ. தங்களையும் தங்கட குடும்பங்களையும் பாதுகாக்கிறதிற்காக புதுசாக பிடித்தவர்களையும் இருக்கிற வளங்களையும் பாவித்தார்களே தவிர தமிழர் போராட்டம், மக்கள் என்பதை மறந்துவிட்டார்கள் என்றே சொல்லுவேன்.

கடைசி காலத்தில கிளிநொச்சி சண்டை காலங்களில் தலைமையின் நடத்தைகள் பற்றி பலருக்கும் ஒரே குழப்பம் இருந்தது. எங்கள் எல்லாருக்கும் விளங்குது ஆனா என்ன செய்யுறது யாரிட்டை யார் சொல்லுவது.

வெளிநாடுகளில் இருந்த புத்திமதி சொன்னவர்கள் பலரை தலைவர் நம்புவதில்லை. அவர்களும் இயக்கம் என்ற பெயரில் களவுகள் தங்களுக்கு சொத்துப்பத்து சேர்ப்பது என்று பல களவுகள் இது தலைவர் பெரிய ஆட்களுக்கும் தெரியும். ஆனால் இங்கேயும் பெரியவர்கள் தங்கட குடும்பங்கள் வசதிகள் எண்டுதானே பார்த்தவர்கள். கீழ்மட்டங்கள் பற்றி பெரிய கவலையே இல்லை. இப்பவும் முகாம்களில் உள்ள தலைவர்களின் மனைவிகள் சொந்தங்கள் இன்னும் அரசாங்கத்திட்ட பிடிபடாதவர்களுக்கு என்ன குறை. இப்பவும் நல்லாதானே இருக்கினம்.

கிளிநொச்சியிலேயே  புலிகளுக்குள்ளே ஆயுதங்களை கீழே போடுவம் என்று தொடங்கி தங்களுக்குள்ளேயே அடிபட்டார்கள். அதில் பெரிய தலைகளும் உருண்டது. சரியா தெரியாது யார் யார் எண்டு. இளந்திரையன் இதில தான் நடந்தது எண்டு பேசப்பட்டது. நான் பார்க்கப் போகவில்லை.  கிளிநொச்சியிலும் புலிகள் ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம் பிழைவிட்டிட்டினம் சனங்கள் இதை சொல்லி சொல்லி திட்டுவாங்கள்.

சனங்களை சுட்டது  நிறையவே நடந்தது. கிளிநொச்சியில சனங்களை தப்பி ஒடவிடாமல் தடுக்கும் நடவடிக்கையில தொடங்கி முள்ளிவாய்க்கால் வரையிலும் சனங்களை சுட்டாங்கள். இது பாரிய தவறு. அதுமட்டுமல்ல சனங்கள் இதை மறக்காது முகாமில இருக்கிற சனங்கள் திரும்ப திரும்ப பேசும். ஆமி செல்லடி ஒரு பக்கம் இப்படி புலிகள் சுட்டது இன்னோரு பக்கம். பெரிய பரிதாபம் சனம் மன்னிக்குமா?

சனத்தின்ர கொதிப்பை அகதி முகாமில இருந்து பார்த்திருந்தா தெரியும். வெளிநாட்டுகாரங்கள வந்தா இப்படி எண்டு எல்லாம் புலிகளைப் பற்றி சனம் அதிகம் பேசவில்லை. சனத்திற்கு முகாமில இருக்கிற பிரச்சினைதான் பெரிசா பட்டது வெளியால போறது தான் பெரிசா இருந்தது. இந்த புலிகளின்ட பிரச்சினையை விட தங்கட வாழ்க்கை அநியாயமாகப் போய்விட்டதே எண்ட கவலைதான் எப்பவும் சனத்திடம் இருந்தது. சும்மா சும்மா பிரச்சினைகள் வரேக்க சனங்கள் திட்டும்.

புலிகள் இப்படி சுட்டும் கட்டி இழுத்தும் கொண்டுவராமல் இவ்வளவு தூரம் சனத்தை கூட்டிவர முடியுமா? எல்லாம் கர்மம் தான். இப்படியும் செய்யாட்டி சனம் எப்பவோ ஆமியின்ர பக்கம் போயிருக்கும். சனம் எப்பவுமே தப்பிக்கவே பார்க்கும். ஏன் எத்தனை புலிகள் தப்பி ஓடி உள்ளனர். எவ்வளவு என்று தெரியாது. வேறு பலர் வள்ளம் எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார்கள். இந்தியாவுக்கு ஓடிவிட்டினம். யாழ்ப்பாணத்திற்குள் ஓடினவர்கள், காட்டுக்குள் ஓடினவர்கள் பலர் துப்பாக்கிகள் ரேடியோ வைத்திருந்தவர்கள். மே17ம் திகதிக்கு முன்பு புலிகளின் தலைமையுடன் தொடர்பு கொண்டவர்கள் என அறிகிறோம். பிறகு அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாது. சிலராவது சண்டைபிடித்து செத்திருப்பார்கள். சிலர் ஆமியிட்டை சரணடைந்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன் அல்லது ஆமி ஆட்களை முடிச்சிருக்கும்.

இந்த கடைசி நேர சண்டைக்கு புலிகள் தங்களை தயார்படுத்தி இருக்கவில்லை. புலிகளுக்குள்ளே நிறையவே பிரச்சினைகள் நடந்தது. என்ன எண்டு பெரிதாக கீழ்மட்டங்களுக்கு தெரியாது. அதைவிட இடைமட்ட தலைமைகள் தங்கட சுகபோகங்கள், வீட்டுக்கு ஒருத்தரை பிடிப்பதில்தான்  அக்கறை. இதனால் சனங்களிட்டை வெறுப்பு.

பிடித்துவந்த புதியவர்கள் நாளுக்கு நாள் தப்பி ஓட்டம். இதனால் பல பிரச்சினைகள்  மிச்சம் இருந்து பிடித்து வந்தவர்களிடம் ஆயதங்களை கொடுத்து போராடு என்றால் நடக்கிற காரியமா? நடந்த காரியம் எல்லோருக்கும் தெரிந்தது தானே.

வெளிநாட்டில் இருக்கிறவர்கள் தங்கள் சுகபோக கனவுகளில்த்தான் கவனம். இவர்கள் வன்னி வந்து போகும் போதே எங்களுக்கு தெரியும். வன்னிக்கு வரும் போதும் அவர்கள் வெளிநாட்டவர்கள் என்ற மமதையில்தான் வருவார்களே தவிர தமிழர்கள் தமிழருக்காக போராடும் நாங்கள் இருக்கிறம் என்ற நோக்கமில்லாமல் அவர்களின் பேச்சுக்கள் இருக்கும். ஆனால் அவர்களின்ர பணத்திற்காக தலைமையும் அவர்களுக்கு சலுகைகள் கொடுத்து எங்ளை அவர்களுக்கு வேலை செய்விப்பாங்கள்.

சரி வெளிநாட்டில் இருக்கிறவர்கள் இப்ப என்ன செய்கினம். முகாமில் இருக்கிறவங்களுக்கு என்ன உதவிகள் செய்கினம். அவர்கள் புலிகளை அழித்தபிறகு சனத்திற்கு உதவி இல்லையே ஏன்? இப்ப மக்களைப் பற்றி கவனம் இல்லை எண்டால் இவர்களுக்கு முந்தியும் மக்களில் கவனம் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

இனிமேல் கதைத்து என்ன? எல்லாம் முடிஞ்சு போச்சு. எல்லாரும் தனித்தனியா இருந்து கஸ்டப்பட வேண்டியது தான். இவ்வளவு நாளும் செய்தது அத்தனையும் அவமாய்ப்போச்சு.

இங்க இருக்கிற சனத்திற்கு வெளிநாட்டுகாசு வருகுதாக்கும். யாரும் தோட்டம் செய்யிற அக்கறைகளை காணவில்லை. தோட்டக் காணிகள் எல்லாம் காடுபத்திப் போச்சு எவரைப் பார்ததாலும் வெளிநாடு வெளிநாடு எண்டுதான் பேச்சு. வெளிநாட்டில் எல்லாம் படிப்பு காசு எண்டதான் பேச்சு. டூறிஸ்ட், விசா, 30 லட்சம் இதுதான் கதை. எனக்கெண்டால் 30 லட்சம் எத்தனையோ தலைமுறைக்கு சாப்பிட போதுமான காசு. எனக்கு விளங்கவில்லை ஏன் சனங்கள் வெளிநாடு வெளிநாடு எண்டு பித்து பிடித்து நிற்கிறது என்று.

ஒரு தோட்டக்காணியை எடுக்க எவ்வளவு கஸ்டமாக இருக்கிறது. தோட்டம் செய்தால் வாழ்க்கை ஓடிவிடும். பிறகு இது சந்தை, தெரு என்று எல்லாம் தொடங்கிவிடும். இப்படித்ததான் வாழ்க்கையை தொடங்கலாம். இதைவிட்டிட்டு வெளிநாடு என்பதெல்லாம் எனக்கு விளங்கவில்லை ஊரில இருக்கிற எல்லாரும் வெளிநாடு போனா? என்ன இது? விளங்கவில்லை?

இங்க ஒரு காணிக்கை என்ன புதிசா ஒண்டு பெரிய மரமா வளர்ந்து நிற்குது எண்டு பார்த்தால் அது எல்லாம் நாலு ஜந்து வருடமாய் கவனிக்காத செடிகள். எத்தனையோ பராமரிப்பு இல்லாத தோட்டக்காணிகள் இங்க இருக்கிறது. சனங்கள் ஏன் திடீரென்று காணாமல் போனது வெளிநாட்டுக்கு போயிட்டினமோ? செத்துப் போய்விட்டார்களோ? சனத்திற்கு தோட்டம் போடுறததை விட வெளிநாடு போவதற்கு சரியான விருப்பம்.

கிளிநொச்சி போனால் குளத்து தண்ணியோட தோட்டம் செய்யலாம். இங்க கிணறுதான். கிணறு கஸ்டம். நாங்கள் எங்க தோட்டம் போட்டாலும் அந்த மாதிரி விளையும். கிழங்கு, மரவள்ளி வைச்சாலே போதும் கீரை, தக்காளி, மிளகாய், சட்டிக்கரணை இவ்வளவும் போதும். வாழ்க்கை நிமிர்ந்து விடும். மிச்சம் எல்லாம் வீட்டுக்கு வரும் எங்களுக்கு ரெண்டு ஏக்கர் தோட்டக்காணி இப்ப வேணும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • Ahmad Nadvi
    Ahmad Nadvi

    Look Young lady, we are very sorry to hear your story. You have learned a lot being a victim of the terrible war. Do not blame all Muslims. They are innocents like you. They are thousand times better than the tiger leaders, who you mentioned about in your interview. The Muslims demanded separate political unit within the so called Tamil Ealam. It was because they did not expect the treatment they received from the tigers. Tigers did not learn from the 1983 riots. They simply did what Singala government did to the innocent Tamils in 1983. May be little bit less punishment but no Muslim ever expected such a barbaric stand. Many Tamils kept quite about it. We know that they had no choice. Had they criticized the tiger for this they would have lost their life. So how can you expect a Muslim to live under tiger control. That was the reason they demand for separate unit for them.

    Now time has come to reconcile. Tamils and Muslims respect each other. Whatever I like to have for me I like you to have for yourself as well. Live and let others live.

    I respect your views but there are rooms for more understanding.

    Reply
  • மாயா
    மாயா

    கதையை வாசித்த பின் , மெளனமாக வேதனைப்படுவதை விட வேறு எதையும் எழுதத் தெரியவில்லை. புலத்தில் பலர் , உதவவென்று அமைப்புகளை தொடங்கியிருக்கிறார்கள். செய்திகளாக வருகிறது. அத்தோடு மேடைகளில் புலத்திலும் முழங்குகிறார்கள். வரும் தலைகளை தம்மோடு கட்டி வைக்க படாத பாடு படுகிறார்கள். சிறீலங்காவில் இருந்து வந்த பல தலைவர்கள் புலத்தில் சிறைப்பட்டு இருந்தார்கள். சிரிப்பாக இருக்கிறது. புலத்து உதவும் கரங்களாக பேசுவோரது சிந்தனைகளை உள்ளே எட்டிப் பார்த்து உணரத் தலைப்பட்டால் வெறுப்பாக உள்ளது. தம்மை உயர்த்திக் கொள்ள , எத்தனை திருகுதாளங்களில் ஈடுபடுகிறார்கள் என்றுதான். பாவப்பட்டவர்களே , புலத்து உணர்வாளர்களிடமும் அவதானமாக இருங்கள். இவர்களும் மற்றொரு புலிக் கூட்டம்தான். அதை மறக்க வேண்டாம். தலை தப்பியவர்களே , உங்கள் தலைகளை , தலை வீங்கிய தலைகளிடம் பலி கொடுத்து விடாதீர்கள். சட்டியில் இருந்து அடுப்பில் விழாமல் காத்துக் கொள்ளுங்கள். இதைத் தவிர என்னால் சொல்ல வேறு அறிவுரை தற்போது இல்லை.

    Reply
  • nathan
    nathan

    வாசித்த பின்பு அமைதியாவதைவிட வேறு என்ன? செய்ய முடியும் உண்மைகளை வெளிக்கொணர்வதும் அவசியம்

    Reply
  • kunam
    kunam

    உண்மைப் பிரதிபலிப்பும் சாதாரண மானவர்களின் எண்ணப்பாடுகள் இவை இந்த கருத்துக்கள் எப்படி வென்றெடுக்கப்பட்டு மக்களுக்கான போராட்டமாக நெறிப்படுத்தப்பட வேண்டும் என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது

    புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பல மனிதகுலத்திற்கே இழிவான கதைகள் வெளிவந்து கொண்டிருப்பதும் தவறான போராட்ப்பாதையையும் இந்த பெண்ணின் கதை கட்டியம் கூறுகின்றது

    புலிகள் போராட்ம் என்பதை வெறும் ஆட்டிலறி அடியாகவம் கொலையில் நடந்துதேறும் விடயமாகவுமே நினைத்துள்ளனர் ஒரு சாதாரண பெண்ணின் வாழ்வும் இந்தப்போராட்டத்தில் சீர்கலைக்கப்ட்டுள்ளபோதும் இந்த விவசாயிக் குடும்பம் இன்னும் துண்டு காணிக்காக ஏங்குகிறதே இது போராட்டத்தின் அடிப்படையில் ஏதோ தவறு இருப்பதையே காட்டுகிறது

    Reply
  • fathima
    fathima

    //முஸ்லீம்கள் இருந்திருந்தால் இயக்கம் எப்பவோ இல்லாமல் போயிருக்கும் ஏனெண்டால் அவை எப்பவும் அரசாங்க அணைவிலதான் இருக்க விரும்புவினம். அரசாங்கத்திற்காக எதையும் செய்வினம். மாறி மாறி வாற அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்துதான் தாங்கள் தங்கட அரசியலை பார்க்கிறவர்கள். இயக்கத்துக்கு வேற வழியில்லை. அவையும் நாங்கள் போராட தங்களுக்கு மாநிலம் வேணும் எண்டால் இதென்ன. அவையும் அரசாங்கத்திற்கு எதிராக போராடலாம் தானே. எப்படி நாங்க போராட அவையள் அம்பாறையில் மாநிலம் கேட்பது. இதை முந்தியே கிழக்கு போராளிகள் அடிக்கடி கதைப்பினம்.
    முஸ்லிம்கள் எப்பவும் சமயம்தான் முக்கியம். சமயம் தான் கதைப்பினம் தமிழ் இரண்டாம் பட்சம்தான். எங்களோட கதைக்கும்போது தமிழ் எண்டும் சிங்களவர்களோடு கதைக்கும்போது தாம் சிங்களம் படித்தவர்கள் என்றும் பேசுவார்கள். இதை நல்லாக நீங்களே அவதானிக்க ஏலும். இதனாலேதான் இயக்கம் இவர்களை நம்பவில்லை. அவர்களும் தமிழ்தான் தங்கட மொழி என்றால் ஏன் முஸ்லீம் கட்சிகள் தேவை. தமிழ் கட்சிகளல்லோ தேவை. அப்ப அவை சமயம் தான். இது எப்பவும் பிரச்சினையாகத்தான் இருக்கும்//
    பாவம். இந்த பெண் இன்னும் புலிகளின் மூளைச்சலவையிலிருந்து இன்னும் விடுபடவில்லை போலும். சில விடயங்களைப் புரியவைக்க மனோநிலை தெளிவாக இருக்க வேண்டும். தான் குழம்பிய நிலையில் என்ன பேசுவதென்றே தெரியாமல் தனக்கு சம்பந்தமில்லாத விடயங்களைப் பேசியதற்கு அவரை மன்னிக்கலாம். என்றாலும் முஸ்லிம்கள் பற்றிய புலிகளின் அதே போக்கு இவரிடம் தென்படுவதை இல்லாமலாக்க ஒரு வழி இவரை முஸ்லிம்களுடன் சிறிது காலம் வாழச் செய்வதாகும்.

    Reply
  • kishore
    kishore

    பாற்றிமா
    புலி மூளைச்சலவை – மட்டுமல்ல இஸ்லாமியச்சலவை கிறீஸ்தவச்சலவை இந்துச்சலவை பெளத்தசலவை இவையாவுமே பிற்போக்குத்தனம்தான் புலி மூளைச்சலவை இஸ்லாமிய மூளைச்சலவைக்கு ஒன்றும் நீங்கள் உங்களிடம் வைத்திருந்தால் அந்த சமயச்சலவைக்கும் வேறு வித்தியாசமானதாக நான் பார்க்க வில்லை

    இந்த இஸ்லாமிய வாதம் எழுந்தது பாக்கிஸ்தான் பிரவினைக்குப் பின்னர்தான் என்றாலும் இலங்கையில் இது இப்படி இருக்கவில்லை ஆரம்ப காலங்களில் தமிழ்பேசும் மக்களாக எல்லோருமாக மதத்தை நம்பாத இஸ்லாமியத் தோழர்களும் போராட்டத்தில் அக்கறையுடன் இருந்துள்ளார்கள் இவர்களில் பலர் இன்றும் இலைமறைகாயாக ஈழப்போராட்ட களத்தில் உள்ளார்கள்

    ஆனால் காலம் இயங்கிக் கொண்டிருக்கிறது இந்த இஸ்லாமியத் தோழர்களின் பங்களிப்பை இந்த பெண்போன்ற பிற்காலத்தில் பிறந்து புலிகளின் சலவையுடன் வாழ்ந்தவர்களக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதே எனது கருத்தாகும்.

    Reply